அன்புடன் அந்தரங்கம்!
நான், 24 வயது பெண். பி.எஸ்சி., படித்துள்ளேன். என் அப்பா, ஒரு குடி நோயாளி. அம்மா இல்லத்தரசி; மிகுந்த கோபக்காரர். என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அப்போது, அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் மற்றும் சத்தமாய் பேசுவதை கேட்டு, தெருவே வேடிக்கை பார்க்கும்.பின், இதுபற்றி கேலி செய்து, தெருவாசிகள் சிரிப்பர். இதைப் பார்க்கும்போது, எனக்கு அழுகையாக வரும்.இது அடிக்கடி தொடர்வதால், விரக்தியில் தற்கொலைக்கு முயன்றேன். அருகில் இருந்த பாழுங்கிணற்றில் குதித்தேன். ஆனால், தண்ணீர் குறைவாக இருந்ததால், என் எண்ணம் ஈடேறவில்லை. என் அலறலை கேட்ட பெரியப்பா, என்னை காப்பாற்ற, கிணற்றில் குதித்தார். ஆனால், பரிதாபம்... பாறையில் தலை மோதி இறந்து விட்டார். அரை நாள், கிணற்றுக்குள்ளே மயங்கி கிடந்தேன். அதன்பின், அவ்வழியாக சென்றோர், என்னை மீட்டனர். பெரியப்பாவின் உடலை பார்த்து, பெரியம்மாவும், அவரது ஒரே மகளும் கதறிய கதறல், இன்னும் என்னால் மறக்க இயலவில்லை.என்னையும், என் பெற்றோரையும் ஊரார் சபிக்க, அன்றே, அவ்வூரிலிருந்து வேறு ஊருக்கு வந்து, இரண்டு ஆண்டுகளாகி விட்டது.இப்போது, என் அப்பா குடிப்பதில்லை. விவசாய வேலை செய்கிறார். நானும், அருகில் உள்ள கம்பெனியில் வேலைக்கு செல்கிறேன். என் பெற்றோரும் இப்போதெல்லாம் சண்டை போடுவதில்லை. நாங்கள் அனைவருமே குற்ற உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருக்கிறோம்.நான் செய்த முட்டாள்தனத்துக்கு தண்டனையாக, திருமணமே செய்து கொள்ளாமல், பெரியம்மாவையும், அவரது மகளையும் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என் பேச்சை கேட்பரா, அவர்களை சந்தித்து, என் எண்ணத்தை கூறவும் தயக்கமாக உள்ளது.நல்ல வழி காட்டுங்கள் அம்மா.இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —ஒரு மனிதர், வாழ்க்கையில் ஒரே ஒருமுறை, போதை பானத்தை வாயில் வைத்து விட்டால், அவர் குடி நோயாளி தான். தமிழக ஜனத்தொகை எட்டு கோடி. நான்கு கோடி ஆண்கள் இருப்பர் என்றால், அவர்களில், 1.5 கோடி பேராவது, குடி நோயாளிகளாக இருப்பர். குடி நோயாளியின் குடும்பத்திலுள்ள குழந்தைகள், தவறான பாதைக்கு தள்ளப்படுகின்றனர். குடி நோயாளி தந்தையும், தாயும் கேவலமான வார்த்தைகளில் சண்டையிட்டுக் கொண்டால், குழந்தைகள் யார் பக்கம் நிற்க முடியும், இருதலை கொள்ளி எறும்பின் நிலை தான். குடித்துவிட்டு வரும் கணவனை, மனைவி எப்படி கையாள வேண்டும் என்பதும், ஒரு கலை தான். குடித்து விட்டு வந்தவனுடன் சண்டையிட்டு கோபத்தை துாண்டினால், அவன், ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிப்பான்.தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்ள வேண்டுமா மனைவியர், வலிய போய் அசிங்கத்தை வாரி முகத்தில் பூசிக்கொள்ள வேண்டுமா...பெற்றோரின் சண்டையை பார்த்து, நீ தற்கொலைக்கு முயன்றது, மன்னிக்க முடியாத குற்றம். உன்னை காப்பாற்ற, உன் பெரியப்பா கிணற்றில் குதித்து உயிரை விட்டது, ஒரு விபத்து. அவருடைய மரணத்துக்கு நீ எந்த விதத்திலும் காரணமாக மாட்டாய்.பெரும் குடிகாரர்கள், குடியை நிறுத்தி பணிக்கு செல்வது, லட்சத்தில் ஒரு குடி நோயாளி செய்யும் விஷயம். திருந்திய உன் தந்தையை, மனதார வாழ்த்துகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்த உடனே, எதாவது ஒரு வேலைக்கு, நீ போயிருந்தால், சொந்தக்காலில் நின்றிருப்பாய். பெற்றோரின் சண்டையை பார்த்து, தற்கொலைக்கு துணிந்திருக்க மாட்டாய். உன் பெரியப்பாவை இழந்திருக்க மாட்டாய். தாமதம் என்றாலும், நீ, வேலைக்கு செல்வது சரியான முடிவு.நீயும், உன் குடும்பமும் வெளியூருக்கு இடம் பெயர்ந்த இந்த இரண்டு ஆண்டில், உன் பெரியம்மா மகளுடன், நீ போனிலாவது பேசி இருக்கிறாயா... பெரியப்பா மரணத்துக்கு, நீ தான் காரணம் என, அவர்கள் உன் மீது குற்றம் சாட்டுகின்றனரா...பெரியம்மாவும், அவரது மகளும் பொருளாதார ரீதியில் நலிந்து போய் இருக்கின்றனரா... இரண்டு ஆண்டு இடைவெளியில், நீ, அவர்களுடன் பேசுவதில்லை என்றால், மனம் விட்டு பேசு. பெரியம்மா குடும்ப நலனுக்காக, நீ, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அது தேவைப்படாத தியாகம்.உன் பெரியம்மாவுக்கு பணத்தேவை எதாவது இருந்தால், கீழ்க்கண்டவாறு செய்...இப்போது, உனக்கு வயது, 24. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, உன் திருமணத்தை தள்ளிப்போடு. எதாவது ஒரு அரசுடைமை வங்கியில் மூன்று லட்சம் ரூபாய், 'பெர்சனல் லோன்' போடு. 36 மாதங்களில் கட்டி முடித்து விடலாம். அந்த மூன்று லட்ச ரூபாயை, பெரியம்மாவின் பெயரில், 'பிக்சட் டிபாசிட்' போடு. பெரியம்மாவுக்கு, மாதம், 1,700 ரூபாய், வட்டி கிடைக்கும். பெரியப்பா மரணத்துக்கு, யாரையாவது காரணம் காட்ட வேண்டுமென்றால், அது, உன் தந்தையின் குடிப்பழக்கம் தான்.விவசாய பணியில் ஈடுபட்டுள்ள உன் தந்தை, தன் அண்ணன் குடும்பத்தின் வருடாந்திர உணவு தேவைக்கான நெல்லை கொடுக்கலாம். மாதம் ஒரு முறை, அண்னண் வீட்டுக்கு சென்று, ஆறுதல் வார்த்தைகள் கூறலாம். ஒரு குடும்பத் தலைவனின் வெளிப்புற பணிகளை, தந்தை செய்து கொடுக்கலாம்.உன்னை, உன் தந்தையை மன்னிக்காமல், பெரியம்மா, நெருப்பு வார்த்தைகள் கொட்டினால், கண்ணீர் மல்க, மன்னிப்பு கேள். பெரியம்மா காலில் விழு. அவருடன் நேரடியாக பேச பயமாக இருந்தால், உறவு பெரியவர்களை வைத்து, சமாதானம் பேசு.பெரியம்மா, உன்னுடைய பணத்தை வாங்க மாட்டேன் என்றால், அவரது மகளின் திருமணத்தை முன் நின்று நடத்துங்கள்.காலம், காயங்களை ஆற்றும். மன்னிப்பதன் மூலம் மனிதன், தெய்வ நிலைக்கு உயர்கிறான். மீண்டும் உன் தந்தை, குடிப்பழக்கத்தில் வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொள். குடிப்பழக்கம் இல்லாத வரனை பார்த்து திருமணம் செய்து, வாழ்க்கையை அமைத்துக்கொள்.பூஞ்சிட்டே... உனக்கு, என் அன்பு முத்தங்கள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.