அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 24. என் பெற்றோருக்கு, நானும், தங்கையும் தான். காதல் திருமணம் செய்த பெற்றோர், ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாட்டால், பிரிந்து விட்டனர். நானும், தங்கையும் அப்பாவிடம் இருக்கிறோம். அம்மா, அவரது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார்.சிறிய ஓட்டல் வைத்துள்ளார், அப்பா. என்னையும், தங்கையையும் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். நான் பட்டப்படிப்பு முடித்து, தற்சமயம், வங்கியில் வேலை செய்கிறேன்.உடன் படித்த தோழன் ஒருவன், போட்டி தேர்வு எழுதவும், வங்கி வேலை கிடைக்கவும் உதவி செய்தான்; சி.ஏ., படித்து வரும் அவன், விரைவில் முடித்து விடுவான்.நாளடைவில், நானும், அவனும் காதலிக்க ஆரம்பித்தோம். இந்நிலையில், எனக்கு ஒரு வரன் வந்தது, அப்பாவுக்கு பிடித்து விட்டது. என் காதலை அப்பாவிடம் சொல்ல, 'எங்களுடைய காதல் - திருமண வாழ்க்கை தான் தோல்வி அடைந்து விட்டது... அந்த நிலைக்கு நீயும் ஆளாகாதே...' என்கிறார்.இதை அவனிடம் கூறியபோது, 'உன் அப்பா சொல்வதும் சரி தான்... முடிவு எடுக்க வேண்டியது நீ தான்...' எனக் கூறி விட்டான்.அப்பாவா, என்னை வெற்றிப் படியில் ஏற்றி விட்ட காதலனா... யார் பக்கம் இருப்பது. இந்த குழப்பத்துக்கு, நல்ல தீர்வை சொல்லுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —காதல் திருமணமோ, பெரியோர் பார்த்து வைத்த திருமணமோ, ஒரு திருமணம் ஜெயிக்க, அதில் அங்கம் வகிக்கும், ஆண் - பெண்ணின் அணுகுமுறையே முழு முதற்காரணம். காதல், சுத்த தங்கம் என்றால், காமம், செம்பு போல. சுத்த தங்கத்துடன் செம்பு கலந்தால் தான், திருமண வாழ்க்கை எனும் நகை செய்ய முடியும். செம்பு மிகுந்து விட்டால், செய்த தங்க நகைக்கு மதிப்பிருக்காது.இன்னுமொரு உதாரணம்... பேருந்தில் இரண்டு பேர் பயணிக்கும் இருக்கை தான், திருமண வாழ்க்கை. ஜன்னலோர இருக்கை வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால், ஏற்கனவே ஒன்றரை ஆள் இருக்கையை, சக பயணி கைப்பற்றியிருப்பார். மீதி அரை இருக்கையில் நாம் அமர வேண்டும்.பயணத்தின் போது, அரை இருக்கையில் இருந்தும், நம்மை தள்ளுவார், சக பயணி. நுனி இருக்கை வழுக்கும். பேருந்தின் வேகத்தில் விழுந்து விடாமலும், சக பயணியின் ஆக்கிரமிப்பை சகித்தும், சில மணி நேரம் பயணிக்கிறோம்.'நல்லவேளை பேருந்தை தவற விடவில்லை. பேருந்தின் இருக்கை நிரம்பி, நாம் நின்று வரும் நிலை ஏற்படவில்லை. குறித்த நேரத்தில், விரும்பிய இடத்திற்கு போய் கொண்டிருக்கிறோம்...' என, நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். அந்த சில மணி நேர சகிப்பு தன்மையை, ஆயுட்காலத்திற்கு நீட்டித்து கொள்வதே, திருமண வாழ்க்கை.தாயை பிரிந்தவுடன் மறுமணம் செய்து கொள்ளாமல், நல்ல தந்தையாய் இருந்து, உன்னையும், தங்கையையும் பராமரித்து வருகிறார். காதல் திருமணம் நல்லதல்ல என, தன் அனுபவத்திலிருந்து கூறுகிறார்.'நான் போட்டி தேர்வு எழுதவும், வங்கி பணிக்கு போகவும் உதவினான்... நன்றிக்கடனாய் காதலிக்கிறேன்...' என்கிறாய்.தேர்வு எழுத, பணிக்கு போக உதவியமைக்கு, 'சர்வீஸ் சார்ஜ்' கொடுக்கலாம். அதற்காக, மனதை கொடுக்கலாமா?உன் அப்பா சொல்வதை, அவன் மறுதலித்து, 'நம் காதல் அமரத்துவமானது. வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு உன்னை காதலிக்கிறேன். திருமண வாழ்க்கை, தந்தையின் வாழ்க்கையை போலல்லாது, மிகப்பெரிய வெற்றி பெறும். தொடர்ந்து பேசி, தந்தையின் சம்மதத்தை பெறுவோம்...' என, உன் காதலன் கூறியிருக்க வேண்டும்.அதை விடுத்து, தந்தையின் கருத்தை ஆமோதிப்பது, உன் காதலை, அவன் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே அர்த்தம். உன்னைப் போன்றே பல பெண்களுக்கு தேர்வு எழுத, பணிக்கு போக உதவி இருப்பான். நன்றி உணர்வை காட்ட, உன்னைப் போன்று பல பெண்கள், அந்த, சி.ஏ., வாலிபனிடம் காதலை தெரிவித்திருக்கலாம்.தந்தையின் காதலையும், அவரின் திருமண வாழ்க்கையையும் ஆய்வு செய். காதலின் வெற்றியை திருமண வாழ்க்கையில் சவ்வூடு பரவல் செய்ய தெரியாமல், உன் தாய் தோற்றாளா, தந்தை தோற்றாரா அல்லது மனப்பொருத்தம் இல்லாத இருவரை இணைய செய்து, காதல் தோற்றதா என, தெளிவு பெறு.உனக்கும், காதலனுக்கும் இடையே ஆன காதலை ஆய்வு செய். எந்த அடிப்படை காரணத்தால், இருவருக்குள்ளும் காதல் பூத்தது... காதலும், இதன் பின்னான திருமண வாழ்க்கையும் வெற்றி பெற எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என அலசு.கால அவகாசம் எடுத்துக் கொள். நன்றி உணர்வுக்கு அப்பாற்பட்டு உன் காதல் ஜீவிக்கிறதா, காதலில், உன் காதலன் விசுவாசமாக இருக்கிறானா, காதலை பற்றிய அபிப்ராயத்தை தந்தை மாற்றிக் கொள்கிறாரா, சி.ஏ., வாலிபனை விட சிறப்பானவனை சந்திக்கிறாயா என பார்.குழப்பத்திலிருந்து தெளிவான மனநிலைக்கு மாறுவாய். அப்போது, சிறப்பான முடிவை எடுப்பாய். வாழ்த்துக்கள் மகளே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.