அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 24 வயது பெண். சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவள். என் தாய் மாமாவுக்கு குழந்தை இல்லாததால், என்னை மகள் போல நினைத்தார். என்னை யாரும் தவறாக பேசி விடக்கூடாது என்பதற்காக, 'பொத்தி பொத்தி' வளர்த்தார்.பள்ளிப் படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர்ந்தபோது, 'மாமா வளர்ப்பு தப்பாகி விட்டது என்ற சொல் வராமல், பார்த்து நடந்துக்கம்மா...' என்று அறிவுறுத்தினார்.அதை மனதில் வைத்தே, கல்லுாரி படிப்பை தொடர்ந்தேன்.இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, உடன் படிக்கும் மாணவன் ஒருவன் நண்பனானான். மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, தன் காதலை என்னிடம் தெரிவித்தான். எனக்கும் அவனை பிடித்திருந்தது. ஆனால், மாமாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்ததால், மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன்.ஒரு கட்டத்தில், நானும் என் காதலை தெரிவித்தேன். அதிலிருந்து என் மீது அதிக அக்கறை எடுத்துக் கொண்டான். கம்ப்யூட்டர் வகுப்பில் சேர்ந்து படிக்க அறிவுறுத்தி, அவனே நல்ல பயிற்சி பள்ளியாக தேர்ந்தெடுத்து, சேர்த்து விட்டான்.காதல் விஷயம், மாமாவுக்கு தெரிய வர, எனக்கு நிறைய, 'அட்வைஸ்' செய்து, வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.இதை கேள்விப்பட்ட காதலன், தன் அம்மாவுடன் வந்து, என்னை பெண் கேட்டான். அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர், அம்மாவும், மாமாவும். என்னை வீட்டிற்குள்ளேயே சிறை வைத்தனர். காதலனுடன் போனில் கூட பேச முடியவில்லை.இதற்கிடையில், கல்லுாரி முழுக்க, என்னை பற்றி அவதுாறாக பேசி, நான், அவனை ஏமாற்றி விட்டதாக அனைவரிடமும் கூறியுள்ளான்; என்னை மோசமானவளாக சித்தரித்திருக்கிறான்.கடைசி ஆண்டு படிப்பை முடித்து விடுகிறேன் என்று கெஞ்சி கேட்டு, மீண்டும் கல்லுாரிக்கு வர, நடந்த விஷயங்களை தோழி மூலம் அறிந்தேன்.இதனால், ஆத்திரமடைந்த நான், அவனை விட்டு விலக முடிவு செய்தேன், படிப்பு முடிந்ததும், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வதாக, மாமாவிடம் கூறி விட்டேன்.தேர்வுகள் முடிந்து, கடைசி நாளில் என்னை சந்தித்தான், காதலன்.'நீ கிடைக்காத ஏமாற்றத்தில், உன் மீது பழி சுமத்தி பேசி விட்டேன். நீ இல்லாவிட்டால், என்னால் உயிருடன் வாழவே முடியாது. என்னை ஏற்றுக்கொள்...' என்று கெஞ்சினான்.தினமும் போனில் இதே பல்லவியை பாடுகிறான். என் மனம் மாறி விடுமோ; மாமாவிடம் கொடுத்த வாக்கு என்னாகுமோ என்று பயப்படுகிறேன்.இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது, நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.— இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —தாய் மாமா, 10 தந்தைகளுக்கும், ஐந்து தாய்களுக்கும் சமம். ஏழெட்டு குழந்தைகள் பெற்றிருந்தால் கூட, ஒரு தாய் மாமன், தன் மருமகள் மீது, டன் கணக்கில் பாசத்தை கொட்டுவான். கூடுதலாய், குழந்தையே இல்லாத தாய் மாமன், மருமகள் மீது, எந்த அளவு பாசத்தை கொட்டுவான். தாய் மாமன் மீது மதிப்பும், மரியாதையும், நீ வைத்திருப்பது மெச்சத் தகுந்த விஷயம்.இக்கால காதல்கள், யதார்த்தம் மீறியவை. காதல் மீதான இக்கால ஆண்களின் பார்வை, மகா சுயநலமானது. காதலியை ஒரு பொருள் போல பாவிக்கின்றனர். அந்த பொருள் தனக்கு கிடைக்காவிட்டால், அதை அழித்துவிட ஆவலாதிக்கின்றனர். சில பெண்களும், ஒரே நேரத்தில், நான்கைந்து காதல்களில் ஈடுபடுகின்றனர். விதிவிலக்காய் மெய்யான காதல்கள் ஆயிரத்துக்கு ஒன்று மலர்கின்றன.வீட்டு சிறை காரணமாக, போனில் தன்னுடன் பேசாத காதலியை அவதுாறு பேசிய காதலனை, மன்னிக்க மறுத்தால், இன்னும் கூடுதல் அவதுாறு பேசுவான். இது மாதிரியான ஆண்கள் ஆபத்தானவர்கள்; எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், பழி வெறி உடையவர்கள்.நீ, உன் காதலனை விட்டு விலகி, மாமா பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது, விவேகமான முடிவு. எக்காரணத்தை முன்னிட்டும் இந்த முடிவிலிருந்து மாறாதே.கல்லுாரி படிப்பு முடிந்தது. இனி, உன் காதலனை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படாது. நீ ஒரு காரியம் செய். உடனே, உன் கைபேசி எண்ணை மாற்று. அதற்கு முன், கீழ்கண்டவாறு ஒரு குறுஞ்செய்தியை, உன் காதலனுக்கு அனுப்பு...நண்பருக்கு... நாம் இனி காதலர்களாக இருப்பதற்கு பதில், நல்ல நண்பர்களாய் பிரிவோம். உனக்கும், எனக்கும் அலைவரிசை ஒத்துப்போகவில்லை. நல்ல வேலைக்கு போ. உனக்கு தகுதியானவளை திருமணம் செய்து கொள். நான், என் மாமா பார்க்கும் வரனை மணந்து கொள்கிறேன்.நான், உன்னை ஏமாற்றி விட்டதாய் கோபம் கொள்ளாதே. ஒரு புறாவும், ஒரு கிளியும் ஒரு நாளும் ஜோடி சேர முடியாது. பொருத்தமில்லாத நாம் திருமணம் செய்து, தினமும் சண்டையிட்டு கொள்வதை விட, இப்போதே பிரிந்து விடுவது, நம் இருவருக்கும் நல்லது. உன் சிறப்பான எதிர்காலத்துக்கு, என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.மாமாவிடம் கொடுத்த வாக்குக்காக, நீ உன் காதலனை புறந்தள்ள வேண்டாம்; உன் ஒளிமயமான எதிர்காலத்துக்காக அவனை புறக்கணி.உதாசீனப்படுத்தப்பட்ட உன் காதலன், மேலும் உன்னை தொந்தரவு செய்வானோ என பயப்பட வேண்டாம். அவன் ஒரு கோழை. புலம்பியபடியே உன் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி, இன்னொரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவான். அவள் பேச மறுத்தால், அவள் மீது அவதுாறு செய்வான். இவர்கள் குற்றம் செய்வதை பழக்கமாய் கொண்டவர்கள்.தாய் மாமா பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து, அவருக்கு, முதல் மரியாதை செய். வாழ்த்துகள் மகளே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்