உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு—வயது: 32. கணவர், சமீபத்தில் விபத்தொன்றில் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. எங்களது திருமண வாழ்வு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கணவருக்கு, இரு தம்பிகள். மூத்தவன், கல்லுாரியிலும்; இளையவன், பள்ளியிலும் படிக்கின்றனர்.மாமனார் உயிருடன் இல்லை. மாமியார் விபரம் தெரியாதவர்; அவருக்கு, வீடே உலகம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கணவர் இறந்தபின், கருணை அடிப்படையில், அவரது வேலை எனக்கு கிடைத்தது.அனாதரவாக இருக்கும் குடும்பத்தை விட்டு, பெற்றோர் வீட்டுக்கும் செல்ல விருப்பம் இல்லை. கணவரது இரு தம்பிகளையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். மாமியார் உயிருடன் இருக்கும் வரை, அவருக்கு மகளாக இருந்து சேவை செய்யவும் ஆசைப்படுகிறேன். ஆனால், என் பெற்றோரும், உறவினர்களும், 'கணவரே போன பின், இன்னும் ஏன் சுமைகளை சுமக்கிறாய். உன் எதிர்கால வாழ்க்கைக்கு, இரண்டாம் திருமணம் செய்து, வாழ்வை நல்லபடியாக அமைத்துக் கொள்...' என்று வற்புறுத்துகின்றனர்.கணவர் இருந்த வரை, அவரின் சுக துக்கங்களில் பங்கெடுத்து, அவரது நிழலில் சந்தோஷமாக இருந்தேன். இப்போது அவர் இல்லையென்றதும், அக்குடும்பத்தை நிராதரவாக விட்டு விடுவதா என்று, மனம் குழம்புகிறது. கணவரது கடமை, என் கடமை அல்லவா. மேலும், என் ஆன்மாவுடன் கலந்துவிட்ட கணவரின் நினைவுகள், என்னையே சுற்றி வருகின்றன. இரண்டாம் திருமணத்தில் விருப்பமும் இல்லை. இருதலை கொள்ளி எறும்பு போல் தவிக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள், அம்மா.இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —இறந்த கணவனின் குடும்பத்துக்காக, உன் வாழ்க்கையை தியாகம் செய்ய துணிவது, கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் சினிமா கதாநாயகியரை ஞாபகமூட்டுகிறது.ஒரு மாற்றுத்திறனாளி முதியவர், பிச்சை கேட்டால், 10 ரூபாய் போடலாம். 'ஸ்கூட்டி'யில் செல்லும் உன்னிடம், ஒரு பள்ளி மாணவி, 'லிப்ட்' கேட்டால், அவளை ஏற்றி, பள்ளி வாசலில் விடலாம். உன், 'லோயர் பெர்த்'தை, 'அப்பர் பெர்த்' பாட்டி கேட்டால், விட்டுக் கொடுக்கலாம். அந்த நிமிட இரக்கம், அந்த உதவியோடு போய் விடும்; வாழ்நாள் முழுக்க தொடராது.நீ சாப்பிட போகிறாய். எதிரே ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பசிக்குமே என கருதி, சாப்பிட போகும் அனைத்து உணவையும் எதிராளிக்கு வலுக்கட்டாயமாக ஊட்டி விடுவாயா?கொஞ்சம் மாற்றி யோசித்து பார். விபத்தில் நீ இறந்திருந்தால், கணவர், உன் குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பாரா... மாட்டார். நீ இறந்த ஒரு சில மாதங்களில், அவர் மறுமணம் செய்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகி இருப்பார்.அர்த்தமில்லாத தியாகமும், விரும்பி கேட்கப்படாத அறிவுரையும் வீண் மகளே.கருணை அடிப்படையில் கிடைத்த வேலை மூலம் உனக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்குமா... நீ மறுமணம் செய்து கொள்ளும் வரை, கணவனின் குடும்பத்தாருக்கு, மாதம், 10 ஆயிரம் கொடு. திருமணம் செய்து கொண்ட பின், மாதம், 5,000 ரூபாய் கொடு.கணவனின் குடும்பத்தோடு இருக்க விரும்புவது, உனக்கு கெட்ட பெயரை உருவாக்கும். மாமியார் விபரம் தெரியாதவர் என, நீயே முத்திரை குத்தாதே. தேவைகளும், சந்தர்ப்பங்களும், ஒரு மனிதனை, மனுஷியை புதிய அவதாரம் எடுக்க வைக்கும். மாமனாரின் மறைவுக்கு பின், மாமியார் தன் இரு மகன்களை பராமரிக்கும் வல்லமையை வேண்டி விரும்பி பெறுவார்.'கணவனின் கடமை, என் கடமை. அவரின் ஆன்மா என்னுடன் கலந்து விட்டது...' போன்ற சினிமா வசனங்களை பேசி, வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே.உனக்கு வயது, 32 ஆகிறது. கொழுந்தன்மார்களுக்கு எதிர்காலம் அமைத்து முடிக்கும்போது, உனக்கு, 40 வயதாகி இருக்கும். திருமணம் செய்து கொண்ட பின், கொழுந்தன்மார்கள் உன்னை மறந்து விடுவர். ஒரு பெண்ணுக்கு, தாம்பத்ய சுகமும் தேவை; ஒரு ஆணின், 'மாரல் சப்போர்ட்'டும் தேவை.தனக்கு போக தான் தான, தர்மம் என்பர். முதல் கணவர் குடும்பத்துக்கு, பொருளாதார உதவிகள் செய்வதை தடுக்காத வாழ்க்கை துணையை தேடிக் கொள். முதல் கணவர் குடும்பத்தோடு தகவல் தொடர்பு வைத்துக் கொள். வருஷா வருஷம், முதல் கணவருக்கு செய்ய வேண்டிய திதி போன்ற காரியங்களை தொடர்ந்து செய். நீ மீண்டும் திருமணம் செய்து கொள்வதை, இறந்த கணவர், வாழ்த்தி வரவேற்பார். உன் மறுமணத்துக்கு வாழ்த்துகள்! என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !