உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —

நான், 58 வயது பெண்மணி; இல்லத்தரசி. கணவர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. எங்களுக்கு ஒரே மகள். சிறு வயது முதலே அவள், அனைவரும் தன்னையே கவனிக்க வேண்டும்; போற்ற வேண்டும் என்று நினைப்பாள்.பள்ளியில் படிக்கும்போது, அவளது தோழி, தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விட்டாள் என்பதற்காக, அழுது, ஆர்ப்பாட்டம் செய்தாள். அடுத்த தேர்வில், தோழியை விட கூடுதலாக மதிப்பெண் எடுத்த பின்தான் அமைதியானாள்.பி.இ., படித்து, பணியில் சேர்ந்த பின்பும், போட்டி மனப்பான்மையுடன் இருந்தாள். கடுமையாக உழைத்து, பதவி மற்றும் சம்பளம் என்று எட்ட முடியாத உயரத்துக்கு சென்றாள். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்தோம். அவரவர் துறையில் மேம்பட, இருவரும் தீவிரமாக உழைத்தனர்.அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். மகனை பாராட்டி, சீராட்டி வளர்ப்பதை விட, தங்கள் பணி முக்கியம் என்று கருதினர். எவ்வளவோ அறிவுரை கூறியும் கேட்கவில்லை. ஆயாவிடம் வளர்ந்தான், பேரன். நாங்கள் வெவ்வேறு ஊர் என்பதால், எங்களாலும், பேரனை வளர்க்க முடியவில்லை.கொஞ்சம் வளர்ந்த பின், உண்டு, உறைவிட பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தனர். இப்போது, 'டீன் - ஏஜ்' பருவத்தில் இருக்கும் பேரன், பெற்றோரை வெறுக்கிறான். எங்களோடும் ஒட்டுவதில்லை. எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புகிறான். நண்பர்களோடு அதிக நேரம் செலவிடுகிறான். அவன் நண்பர்களில் சிலர், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கேள்விப்பட்டு நொந்து போனோம்.நாங்கள் ஏதாவது பேச முற்பட்டால், அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்கிறான். தங்கள் தவறை இப்போது தான் உணர ஆரம்பித்துள்ளனர், மகளும், மருமகனும்.'கவுன்சிலிங்' அழைத்துச் செல்ல விரும்பினாலும், வர மறுக்கிறான். பேரனின் மனம் மாற, மகளின் மன வருத்தம் தீர, நானும் மன அமைதி பெற, நல்ல ஆலோசனை தருவீர்கள் என்று நம்புகிறேன், சகோதரி.— இப்படிக்கு,அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு —

பெற்றோர், குழந்தைகளை புறக்கணிப் பதில், நான்கு வகைகள் உள்ளன. முதலாவதாக, அடிப்படை தேவைகள் புறக்கணிப்பு. குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, இருப்பிடம் கொடுக்காமல் இருப்பது. இரண்டாவதாக, மருத்துவ புறக்கணிப்பு. குழந்தைகள் நோய்வாய்பட்டால், போதிய செலவு செய்து, மருத்துவம் அளிக்காமல் இருப்பது.மூன்றாவதாக, கல்வி புறக்கணிப்பு. குழந்தைகளுக்கு தேவையான உயர் கல்வியை தர மறுப்பது. நான்காவதாக, உணர்வுகள் புறக்கணிப்பு. குழந்தைகளின் மீது அன்பும், பாசமும், அக்கறையும் காட்டாமல் இருப்பது. உன்னுடைய பேரனுக்கு, மகளும், மருமகனும் செய்தது, உணர்வுப்பூர்வமான புறக்கணிப்பு.பொதுவாக, குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதற்கான காரணங்கள்:தன் சுகமே பிரதானம் என்கிற சுயநலம்; வேலைக்கு செல்லும் பெற்றோர், குழந்தையை பராமரிக்க தெரியாத அறியாமை; பரம ஏழை அல்லது கோடீஸ்வர பெற்றோர்; ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருத்தல்; திருமண பந்தம் மீறிய உறவில் பெற்றோர் ஈடுபடுதல்; சண்டைக்கோழி பெற்றோர்; தலைமுறை தலைமுறையாக, ஒரு குடும்பத்தில் குழந்தைகளை வளர்க்கும் விதம் போன்றவைகளை கூறலாம்.கீழ்கண்ட வழிமுறைகளை மேற்கொண்டு, பேரனின் பிரச்னைகளை சுமுகமாக தீர்க்கலாம்...* பெற்றோரின் உதாசீனத்தால், உள்ளும் புறமும் காயப்பட்ட பேரனிடம், குடும்ப உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக மன்னிப்பு கேட்க வேண்டும். என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டால், பேரன் இயல்பு நிலைக்கு மீள்வான் என்பதை, அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்* மகளை, ஒரு ஆண்டுக்கு, சம்பளமில்லாத விடுமுறை போடச் சொல்லி, பேரனுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், நெருக்கமாக கனிவாக இருக்கச் சொல்* பேரனிடமிருந்து போதை பழக்க நண்பர்களை பிரித்தெடு. நண்பர்களை பிரிப்பதற்கு சமமாக, பேரன் கேட்கும் வேறு ஏதாவது சலுகைகளை செய்து கொடு* 'அதிகம் கட்டுப்பாடு அதிகம் நன்மைகள்' என்ற கோஷத்துடன், அதிகாரமுள்ள அம்மாவாக, உன் மகளை மாறச்சொல்* என்னென்ன காரணங்களுக்காக, 'டீன் - ஏஜ்' பேரன், பெற்றோரையும், தாத்தா - பாட்டியையும் வெறுத்திருப்பான் என்பதை அலசி ஆராய்ந்து, அவைகளிலிருந்து விடுபடுங்கள்* ஒரு சுபிட்சமான, திருப்தியான வாழ்க்கை வாழ, பேரனுக்கு ஏராளமான தெரிவுகளையும், போதுமான இடத்தையும் விட்டுக்கொடுங்கள்* பேரனை ஒருபோதும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, நன்னடத்தைக்கான அறிவுரைகளை வண்டி வண்டியாக போதிக்காதீர்கள்* போதுமான அளவு, பேரனை பேசவிட்டு, முழுமையாக கவனித்து செயல்படுங்கள்* நாளையே உன் பேரன், உங்களை எல்லாம் மன்னித்து, புத்தர் ஆகிவிடுவான் என நம்பாதீர்கள். அவன் மனம் மாறுவதற்கு தேவையான கால அவகாசம் கொடுங்கள்* பேரனுடன், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எங்காவது, 10 நாள் சுற்றுலா செல்லுங்கள்* தனிமை அறையில் பேரனை இருக்க விடாதீர்கள். எந்த நேரமும், யாராவது அவனுடன் இருங்கள். அவனுக்கு தொந்தரவாய் இராமல், உபயோகரமான பொழுதுபோக்கு கூட்டாளி ஆகுங்கள்* அவனிடம் என்னென்ன நல்ல குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களோ, அந்த நல்ல குணங்களுடன் நீங்கள் அனைவரும், இருக்க பாருங்கள்* உறவு முறைகளின் முக்கியத்துவத்தை பேரனுக்கு சொல்லிக் கொடுங்கள்* இரவில், பெற்றோருடன் பேரன் படுத்து உறங்கட்டும்* வலுக்கட்டாயப் படுத்தாமல், பேரனை, யோகா வகுப்புக்கு அனுப்பு.வெகு சீக்கிரம், உன் பேரன், தங்க குட்டி ஆகிவிடுவான்.- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !