உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா -நான், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த, 35 வயது ஆண். நான்கு பட்டங்கள் பெற்றும், அரசு பணி கிடைக்கவில்லை. கடந்த, 10 ஆண்டுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து தோற்று விட்டேன். தற்சமயம், பழைய கார்களை வாங்கி, விற்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்.மாநிறம், 162 செ.மீ., உயரம் இருக்கிறேன். எனக்கு வாய் சாமர்த்தியம் பத்தாது. முன்கோபி. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. மூத்தவனுக்கு, 8, இளையவளுக்கு, 5 வயது. எனக்கும், மனைவிக்கும் இடையே பெரிய அளவில், புரிதல் இல்லை. சதா என்னை கரித்துக் கொட்டுவாள்.என் பெற்றோருக்கு இரண்டு மகன்கள். நான் மூத்தவன். தம்பிக்கு வயது, 34. அவன், 6 அடி உயரம் இருப்பான். ரோஜா நிறம். கோபத்தை வெளி காட்ட மாட்டான். எதிராளி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு உயிரையே கொடுப்பது போல பேசுவான். அவனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. ஒரே மகன். 'சென்ட்' தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறான்.ஊரிலுள்ள ஆண் - பெண்களிடம் நன்றாக பழகும் அவன், என்னிடம் விட்டேத்தியாகத்தான் இருப்பான். அவனுக்கும், எனக்கும் இருக்கும் ஒரே பிரச்னை, என் நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் நொடியில் திருடி விடுவது தான். நாங்கள் சிறுவர்களாய் இருந்த போது, எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள், பலகாரத்தை என்னிடம் கொடுப்பர். தம்பி இடைமறித்து, 'எங்கண்ணன் இதெல்லாம் தின்ன மாட்டான். என்கிட்ட குடுத்திடுங்க...' என்று பிடுங்கிக் கொள்வான்; எனக்கு எதுவும் தராமல் அவனே தின்பான்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். 'கிளாஸ் லீடர்' பதவியை வகுப்பாசிரியை எனக்கு கொடுத்த போது, 'அச்சச்சோ... எங்கண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஒத்தும் வரமாட்டான். நான், 'கிளாஸ் லீடரா' இருக்கிறேன்...' என கூறி, பதவியை பிடுங்கி கொள்வான்.வீட்டில், முட்டை தோசை சுட்டு, என் தட்டில் அம்மா போடப் போகும்போது, குறுக்கே தட்டை நீட்டி வாங்கிக் கொள்வான். என்னிடம் மட்டுமல்ல உறவினர் மற்றும் நண்பர்களிடம் நரித்தனமாக நடப்பான். அவனைக் கண்டாலே அனைவரும் பயந்து நடுங்குவர். அவனை நேராய் கண்டால் சிரித்து பழகுவர். முதுகுக்குபின் காறித்துப்புவர்.எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர், பெற்றோர். ஒரு பேரழகி கிடைத்தாள். அவளின் புகைப்படத்தை பார்த்த தம்பி, பெண் வீட்டாரை தனியே சந்தித்து, அவனே மாப்பிள்ளை ஆகிவிட்டான். இந்த துக்கம் தணிய ஒரு ஆண்டு ஆனது. அதன்பின் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக ஒருத்தி கிடைத்தாள். திருமணம் செய்து கொண்டேன்.இப்படி எனக்கான சந்தோஷங்களை தட்டி பறித்துக் கொண்டான், தம்பி. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன், ஒரு சம்பவம் நடந்தது.வட்டி இல்லாமல் கடன் தரும் இஸ்லாமிய வங்கியை அணுகி, 30 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தேன். அந்த பணம் கிடைத்தால், என் தொழிலில் முன்னுக்கு வந்து விடுவேன். இடையில் புகுந்த தம்பி, தன், 'சென்ட்' தொழிற்சாலையை விரிவுபடுத்த, 30 லட்சம் ரூபாய் கடனை வாங்கி கொண்டு போய் விட்டான்.'குடும்பத்தில் ஒருவருக்கு தான் கடன் தர முடியும். உன் தம்பி வாங்கியதால் உனக்கு தர முடியாது...' என, கையை விரித்து விட்டது, வங்கி. தம்பியிடம் போய் சண்டை போட்டதற்கு, சிரித்து மழுப்புகிறான்.'பேசாம உன்கிட்ட, 'தலாக்' வாங்கிக்கிட்டு உன் தம்பிய கல்யாணம் பண்ணிக்க போறேன்...' என்கிறாள், மனைவி. வட மாநில பக்கம் ஓடிவிடலாமா, அரபு நாடுகளுக்கு சென்று ஒட்டகச்சாணி பொறுக்கலாமா, ஜமாஅத்திடம் சென்று, உடன்பிறந்த தம்பி என்ற உறவை நிரந்தரமாக துண்டித்து விடலாமா...மீதி வாழ்நாளில் என் தம்பியை எப்படி சமாளிப்பது?- ஆலோசனை தாருங்கள் அம்மா.— இப்படிக்கு,-அன்பு மகன்.அன்பு மகனுக்கு -இளைய சகோதரனால் நீ பட்ட அல்லல்களை படித்து பரிதாபப்படுகிறேன்.பொருளாதாரம் சார்ந்த உலகம் இது. ஒரு வாய்ப்புக்காக லட்சக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். ஒழுக்க நியதி, ரத்த உறவு, பாலின வேறுபாடு மற்றும் வயது பேதங்களை வகை பார்த்து போட்டியிலிருந்து யாரும் ஒதுங்குவதில்லை.சகோதரன் உன்னிடமிருந்து நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் திருடுகிறான் என்றால், நீ ஏதோ ஒருவிதத்தில் அவனை விட திறமை குறைந்தவனாய் இருக்கிறாய் என்றே பொருள். ஒரே கருவறை தோழர்கள் நீங்கள். தம்பியின் சாகசங்களை முறியடிக்க, நீதான் தேவையான யுக்திகளை வடிவமைக்க வேண்டும்.கோபத்தை குறை; பேச்சில் நகைச்சுவையை குழை; கபடி வீரன் போல செயல்பட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உன் கோட்டையை தற்காத்துக் கொள்.ரத்த உறவுக்கு பயந்து வட மாநிலத்துகோ, அரபு நாடுகளுக்கோ ஓடுவது தீர்வல்ல.உனக்கு உறுதுணையாக இல்லாமல், உன் தம்பியை மறுமணம் செய்து கொள்வேன் என, மனைவி கூறுவது அவலமான விஷயம். காலத்திற்கேற்றவாறு உன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்ற மனவேதனையில் தான் அவ்வாறு கூறுகிறாள். தம்பியிடம் அவனது நடவடிக்கைகளை பட்டியல் போட்டு கூறி, திருத்த முயலாதே. அது உங்களுக்கிடையே மனஸ்தாபத்தை தான் கூட்டும். ஒரு தாய் கோழி, கழுகிடமிருந்து குஞ்சுகளை பாதுகாப்பது போல, உன் நட்பு மற்றும் வாடிக்கையாளர்களை, தம்பியிடமிருந்து பாதுகாத்துக் கொள்.தம்பியிடம் மத்திமமாய் உறவு பாராட்டு. இனி, எந்த விஷயத்திலும் உன்னிடம் ஏமாற மாட்டேன் என்று, உன் செயலால் வெளிப்படுத்து.உனக்கு வயது, 35 தான் ஆகிறது. மீண்டும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள். அவைகளை எவ்விதத்திலும் நழுவ விடாமல் பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற பார்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !