அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது: 28. கணவரின் வயது: 31. இருவரும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்து கொண்டோம். சிறிது காலத்திற்கு பின், பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். என் அப்பா, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நானும், கணவரும் அம்மா வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்கியிருந்தோம்.எங்களுக்குள் அடிக்கடி சிறு சண்டைகளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டு, சில நாட்களில் சரியாகி விடும். ஒரு ஆண்டிற்கு பிறகு, எங்களுக்கு மகள் பிறந்தாள். எனக்கு, 26 வயது ஆகும்போது, தண்டுவடத்தில் கோளாறு ஏற்பட்டு, அம்மா வீட்டில் மூன்று மாதம், படுக்கையில் இருந்தேன்.என்னை அம்மா வீட்டில் விட்டு, எனக்கு மருத்துவ செலவு கூட செய்யாமல் சென்று விட்டார், கணவர். நான்கு மாத மருத்துவமனை அலைச்சலுக்கு பிறகு, அம்மா கூறியதையடுத்து, அழைத்துச் சென்றார், கணவர்.மாமியார் வீட்டில், 40 நாட்கள் இருந்த பிறகு, மீண்டும் பிரச்னை தலை துாக்கியது. நெடுந்துாரம் பயணம் செய்யக் கூடாது என்று சொல்லி விட்டார், மருத்துவர். மாமியார் வீடு இருப்பது மலைபாங்கான இடம் மற்றும் போக்குவரத்து வசதி இல்லை என்பதால், உடல்நிலை சரியாகும் வரை, வாடகை வீட்டில் குடியிருக்கலாம் என்று கணவரிடம் கேட்டேன்.அதற்கு அவர், என்னை சரமாரியாக அடித்து விட்டார். அவர் அடித்தது, மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளாதது என எல்லாம் சேர்ந்து, மயக்க நிலைக்கு தள்ளப்பட்டேன். அம்மா வீட்டுக்கு போவதாக கூறியதும், என்னையும், மகளையும் பேருந்தில் ஏற்றி விட்டு சென்று விட்டார், கணவர். இதற்கிடையில், அவர் என்னை அடித்த நாளில் இரவிலிருந்து, உதிர போக்கு துவங்கியது. அம்மா வீட்டிற்கு வந்த மறுநாள் முதல், என் உடல் எடையில் மாற்றம் ஏற்பட துவங்கியது. உடல் பெருத்து, ஒரு கட்டத்தில் மூச்சு விட சிரமம் ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.ஒரு வார சிகிச்சைக்கு பிறகு, கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதாக, மருத்துவர் கூறினார். அன்றிலிருந்து இன்று வரை ஒன்றரை ஆண்டுகளாக, சிறுநீரில் ரத்தமும் வெளியேறுகிறது. இதுவரை என்னை காணவும் வரவில்லை, மருத்துவ செலவிற்கு பணமும் தரவில்லை, கணவர்.என் அப்பா தான் கடன் வாங்கி, மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இப்போது, விவாகரத்து கோருகிறார், கணவர்; மகளையும் அழைத்துச் சென்று விட்டார்.நான் என்ன செய்ய வேண்டும், அம்மா. மருத்துவ மற்றும் உணவு தேவை அனைத்திற்கும், அப்பாவையே சார்ந்துள்ளேன். எங்காவது வேலைக்கு செல்லலாம் என்றால், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. அம்மா - அப்பா இருவருமே நோயாளிகள். ஆதலால், 'எங்களால் உன்னை பார்த்துக் கொள்ள இயலவில்லை. நீ, உன் கணவருடன் சென்று விடு...' என்று கூறுகின்றனர்.கணவரோ, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறார். மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். கணவரை சாராமல், அம்மா - அப்பாவுக்கு தொந்தரவு தராமல் சுய தொழில் செய்யலாம் என்றால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன், அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்குவாழ்வின் இருண்ட பக்கத்தையே பார்த்து சதா புலம்பும் ஆண் - பெண்களை எனக்கு அறவே பிடிக்காது. குறிப்பாக, நீ, 28 வயதே ஆன இளம்பெண்.தவறான அறுவை சிகிச்சையால், 10க்கும் மேற்பட்ட நோய்கள் பீடிக்கப்பட்டு, 30 ஆண்டுகளாய் நோய்களுடன் தீரமாய் போராடும் வீரப்பெண்மணி ஒருவரை நான் அறிவேன். இரண்டு மாரடைப்புகளுக்கு பிறகும், 10 ஆண்டுகள், மகள்கள் குடும்பத்துக்காக, ஓடி ஆடி உழைத்த இரும்புப் பெண்மணி ஒருவரை, நான் அறிவேன். நோய்களை மனதாலும், உடலாலும் அடக்கியாள கற்றுக் கொள்ள வேண்டும்.அரசு மருத்துவமனைக்கு சென்று தண்டுவட கீழ்வாதத்துக்கும், சிறுநீரில் ரத்தம் வருவதற்கும் தகுந்த சிகிச்சைகள் மேற்கொள். உடல் எடையை நடைபயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம், 20 கிலோ குறை.நீ என்ன படித்திருக்கிறாய் என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. பிளஸ் 2 வரை படித்திருந்தாய் என்றால், எதாவது ஒரு கடைக்கு வேலைக்கு போ. 5,000 - 8,000 வரை சம்பளம் தருவர். 6 அல்லது 8ம் வகுப்பு படித்திருந்தால், சாப்பாடு கடை போடு.குட்டக்குட்ட குனியாதே. கணவர் தாக்கினால் திருப்பி தாக்கு. கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மிரட்டு. மகளை, கணவர் வளர்க்க விரும்பினால், கொடுத்து விடு. விவாகரத்துக்கும் சம்மதம் தெரிவி.சம்பளத்துடன் மகள், தங்கள் வீட்டில் தங்குவதை உன் பெற்றோர் எதிர்க்க மாட்டார்கள். பெற்றோரின் நோய்க்கு, அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கிக் கொடு.தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் தொடர்ந்து படி. கல்விக்கும் மருத்துவத்துக்கும் கையேந்தலாம், தப்பில்லை.தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிரமப்பட்டால், முதுகலை பட்டபடிப்பு படித்து முடித்து விடலாம். தனியாரில், 20 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம். குரூப்- - 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, அரசு வேலை பெறலாம்.வாழும் வரை போராடு மகளே!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.