சைக்கிள் மிதித்தால் தண்டனை குறையும்!
நம் நாட்டில், தலைவர்களின் பிறந்த நாளின்போது, சிறைக் கைதிகளுக்கான தண்டனையை குறைத்து, அவர்களை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. பிரேசிலில், கைதிகளின் தண்டனையை குறைப்பதற்கு, ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சாண்டா ரிடா டோ சபுகாய் என்ற நகரில் உள்ள சிறையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள், பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சைக்கிளில் உள்ள பெடல், தொடர்ந்து வேகமாக மிதிக்கப்படும்போது, சக்கரம் சுழன்று, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி பவரை, மின்சாரமாக மாற்றுவதற்கு, தனியாக கன்வெர்ட்டரும் உள்ளது.இந்த சிறையில், நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தினமும், இங்கு வந்து, சைக்கிள் மிதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தது எட்டு மணி நேரம், சைக்கிள் மிதித்தால், தண்டனை நாளில், ஒரு நாள் குறையும். இந்த வித்தியாசமான தண்டனை குறைப்பு நடைமுறை, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சம்பந்தபட்ட கைதிகள், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.— ஜோல்னா பையன்.