உள்ளூர் செய்திகள்

பழ சாகுபடியில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சரவணன், பாரதி. இவர்கள், 1999ல், திருவாலங்காடு ஒன்றியம் காவேரி ராஜபுரம் ஊராட்சியில், 150 ஏக்கர் நிலம் வாங்கி, மா, பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகை செடிகளை நட்டனர்.அன்று முதல், மேற்கண்ட செடிகளுக்கு இயற்கை உரம் மற்றும் சொட்டு நீர் பாசனம் செய்து பராமரித்து வருகின்றனர். குறிப்பாக மாஞ்செடிகளுக்கு கொம்பு சாண உரம் 500, கொம்பு சிலிக்கான் 500, சாணா மூலிகை போன்ற இயற்கை உரங்களை வைத்து வளர்க்கின்றனர். செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால், மாம்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.நீலிசா, ஜவ்வாரி, பெங்களூரு, செந்தூரா, அல்போன்சா, காளப்பாடி, ருமானியா, இமயாத், பங்கனப்பள்ளி, கர்தாமர், பெத்தரகம், மல்கோவா, சர்க்கரைகுட்டி போன்ற மாம்பழங்களை, இயற்கை உரத்தின் மூலம் விளைவித்துள்ளனர். இவ்வகை மாம்பழங்களுக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி உள்ளது. இப்பழங்களை வாங்குவதற்கு தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் மக்கள் தோட்டத்திற்கு நேரடியாக வந்து குவிகின்றனர்.பலா, சப்போட்டா, நெல்லிக்காய், கொய்யா போன்ற பழவகைகளும் இயற்கை உரம் மூலமே விளைவிக்கப்படுகின்றன. அதே போல், இந்த சகோதரர்கள் நிலத்தில், ஆடு, மாடு, கோழி, குதிரை, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். இயற்கை முறையில் தேனீக்கள் வளர்த்து, தேன் தயாரித்தும் விற்பனை செய்கின்றனர்.தோட்டத்தை முழுவதும் கண்காணிக்க, ஆங்காங்கே வெப் கேமரா வைத்துள்ளனர். இயற்கை உரத்தின் மூலம், 12 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த அபூர்வ சகோதரர்களுக்கு கடந்த ஆண்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், இயற்கை விவசாயத்தில் தமிழகத்தில் முதலிடம் பெற்றதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !