உள்ளூர் செய்திகள்

உயிரோடு உறவாடு.... (18)

முன்கதை சுருக்கம்: ரிஷியை அநாகரிகமாக பேசி, தமிழ்ச் செல்வியிடம் கோபித்து ஊருக்கு புறப்பட்டான், சுகுமார். ஜனா ஒரு கிரிமினல் என நிருபிக்க, ரவுடி முனிராஜை சந்திக்க செல்வதாக, போனில் ரிஷி கூற, தானும் வருவதாக தெரிவித்தாள், தமிழ்ச் செல்வி.''நானும் வருகிறேன்,'' என்று தமிழ் சொல்லவும், ரிஷியிடம் ஒருவகை இன்ப அதிர்ச்சி.''தமிழ், நீ நிஜமாதான் சொல்றியா?'' என்று, திரும்ப கேட்டான்.''எதுக்கு இப்படி கேட்கறே... ஏன் நான் வரக்கூடாதா?''''தாராளமா... உன் தைரியத்தை நினைச்சேன். சந்தோஷமா இருக்கு.''''போதும்... அதான் நீ கூட இருக்கியே, எனக்கென்ன பயம்? ஆனா, ஒரு விஷயம்...''''என்ன?''''இது, அந்த ரவுடி முனிராஜ் குரூப்போட வேலைதான்னு உறுதியா சொல்ல முடியுமா?''''அதான் அந்த பைக் மெக்கானிக், அவங்கள பார்த்துட்டு சொன்னார்ன்னு சொன்னேனே?''''மெக்கானிக் பேச்சையெல்லாம் எதை வெச்சு நம்பறே?''''நல்ல கேள்வி... அவர், ஒரு காலத்துல அடியாளா இருந்து திருந்தி, இப்ப மெக்கானிக்கா இருக்காராம்.''''கேட்க நல்லா இருக்கு... அப்படிப்பட்ட ஒருத்தர், தன் சகாக்களையே காட்டிக் கொடுப்பாரா?''''என்ன தமிழ், இப்படி நோண்டி நோண்டி கேட்கறே?''''அங்க போய் நாம அசிங்கப்படக் கூடாது பாரு.''''என் மேல பரிதாபப்பட்டு தான், அவங்கள பத்தி சொன்னாரு, மெக்கானிக். போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்கன்னு அவங்கள பத்தி சொல்லல... நான் ஜாக்கிரதையா ஒதுங்கிப் போயிடணும்ங்கறதுக்காக சொன்னாரு.''''இப்ப நான், அந்த மெக்கானிக்கை நம்பறேன். சரி, நாம அவனை எங்கன்னு போய் பார்க்க போறோம்?''''அர்த்தமற்ற கேள்வி. எல்லாத்தையும் நான் மெக்கானிக்கிட்ட போட்டு வாங்கிட்டேன். ஜார்ஜ்டவுன்ல ஒரு காயலான் கடை. ராஜாபாதர் கடைன்னா அங்க சுத்திகிட்டிருக்கிற ஒரு தெரு நாய் கூட கொண்டு போய் விடுமாம். அந்த கடைக்கு பின்னால தான் அவனும், அவன் கூட்டமும் இருக்காங்களாம்.''''சரி... அவனால ஆக்சிடென்டுக்கு ஆளான நாமளே, அவன பார்க்க போனா அவன் விடுவானா... அவனை நாம கண்டுபிடிச்சுட்டது தெரிஞ்சு, ஓடி ஒளிய மாட்டானா... இல்லை, நம்பள திரும்ப தாக்க மாட்டானா?''''நல்லாவே கேள்வி கேட்கறே தமிழ்... இதையெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா?''''எப்படி போகப் போறோம், அதை சொல்லு... சினிமால வர்ற மாதிரி மாறுவேஷத்துலன்னு மட்டும் சொல்லிடாதே... அது, சினிமாவுக்கு மட்டுமே சாத்தியமான விஷயம்.''''இப்ப இந்த நாடே, ஏன் உலகமே, 'மாஸ்க்'குங்கற முகமூடிய போட்டுக்கிட்டு, மாறுவேஷத்துல தானே இருக்கு... தனியா ஒரு வேஷம் தேவையா என்ன. 'மாஸ்க், கூலிங்கிளாஸ்' மற்றும் தலைக்கு, 'கேப்' - இந்த மூணும் இருந்தா போதும்... இதோட, பிரதமரே நம்ப எதிர்ல வந்தாலும், நமக்கு அடையாளம் தெரியாது... ஒத்துக்கறியா?''அவன் கேள்விக்கு பதில் கூறாமல் சிரித்தாள், தமிழ்.''தமிழ்... இந்த சிக்கல் ஒரு பக்கம் இருக்கட்டும்... நீ முதல்ல, சுகுமாரை சமாதானப்படுத்து. அவரோட வருத்தத்துல கொஞ்சம் நியாயம் இருக்குங்கறதயும் புரிஞ்சுக்க. நடுவுல வந்து ஒரு ஹலோ சொல்லிட்டு போயிருக்கலாம், நீ.''''ஆமாம்... நான் அப்படி செய்திருக்கலாம். ஆனா, ஏதோ ஒரு வெறுப்பு, சுகுமார்கிட்ட என்னை நெருங்க விட மாட்டேங்குது. உன்கிட்ட சகஜமா பேச முடிஞ்ச மாதிரி, அவனோட பேச முடியல, ரிஷி.''''அதுக்கு பேர் தான், கேரக்டர். நான் பார்த்த வரையில, சுகுமார், ஒரு பக்கா ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர். சுகுமாரை இன்னொரு ஆணாலேயே பெருசா நேசிக்க முடியாது. இவங்களுக்கு ஸ்கூல், காலேஜ் வாழ்க்கையில் கூட, நண்பர்கள் அதிகமா இருக்க மாட்டாங்க. என் பேச்சை தான் எல்லாரு கேட்கணும், யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்னு, வாழற ஒரு வர்க்கம் இவங்கல்லாம்.''''ஆனா, ஜனா சார்கிட்ட மட்டும், சுகுமாரால எப்படி அப்படி நெருங்க முடிஞ்சது?''''ஜனாவும் அந்த வர்க்கம்தானே? மைனஸ் கூட்டல் மைனஸ் - ப்ளஸ்ங்கிற மாதிரி ஒரு விஷயம் தான், இது. அதே சமயம் இவங்க நட்பு ஆழமானதுன்னு நினைச்சுடாதே... இவங்க சேர்ந்த மாதிரியே பிரியவும் தயங்க மாட்டாங்க.''''ஆமா... நானும் அப்படிதான் நினைக்கிறேன். பல நேரங்கள்ல உன் எண்ணமும், என் எண்ணமும் ஒண்ணாத்தான் இருக்கு, ரிஷி. என்னால ஏத்துக்க முடியாத ஒரு கருத்தை, நீ சொல்றே இல்ல... அது எப்படி?''''அப்படின்னா, நாம ஒரே அலைவரிசையில சிந்திக்கிறோம்ன்னு அர்த்தம். ஒரே அலைவரிசையில சிந்திக்கிறவங்க ஒத்துமையா இருக்கறது பெரிய விஷயமே இல்லை. சுகுமார் மாதிரி ஆட்களை சிந்திக்க வெச்சு, அவங்களையும் வசப்படுத்தறதுல தான், நம்ப வெற்றி இருக்கு.''''திரும்பத் திரும்ப சுகுமார்கிட்டயே வர்றியே... விடுப்பா நான் பார்த்துக்கறேன்.''''பைத்தியமே... அவர் இப்ப, உன் அரை புருஷன். நிச்சயம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரின்னு சொல்வாங்க; அவர் கூட நீ சந்தோஷமா வாழணும்ங்கற அக்கறையில தான் சொல்றேன்,'' என்றான், ரிஷி.தமிழால் அதற்கொரு பெருமூச்சை தான் பதிலாக விட முடிந்தது.''என்ன பெருமூச்சு விடறே... இப்ப உடனடியா என்னால முடிஞ்சது அதுதான். அப்புறம், முக்கியமான விஷயம். நாம இரண்டு பேரும் போய், சுஜித் சாரை, நாளைக்கு பார்க்கறோம்... 'பர்சனலா' நன்றி சொல்றோம்... சரியா?''''சரி ரிஷி... சாப்பிட்டியா?''''அட அப்படி ஒண்ணு இருக்குல்ல... 'மூட் அவுட்' ஆனதுல அதெல்லாம் ஞாபகமே வரலை. நோ ப்ராபளம்... இப்பவே பக்கத்துல இருக்கற சரவண பவனுக்கு போய் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்துட்டா போச்சு... இனிமே, கையேந்தி பவன்கள் பக்கமெல்லாம் போக வேண்டாம். ஏன்னா, ஐயா தான் மேனேஜர் ஆயிட்டேனே?''''பழச மறக்காதடா... ஆமா, இங்க, 'கன்டினியூ' பண்றது தான், உன் விருப்பமா... என்னாச்சு உன் டைரக் ஷன் கனவு?''''நல்லவேளை, ஞாபகப்படுத்தினே... அதுக்காக ஒரு, 'லிவ்விங் டுகெதர்' ஜோடியை பிடிச்சும் வெச்சிருக்கேன். சாப்பிட்டு வரும்போது அவங்களையும் ஒரு பார்வை பார்த்துடறேன்.''''அப்ப, அதுதான் உன் லட்சியமா?''''எப்பவும் அதுதான் என் லட்சியம், தமிழ்... எப்படியும் உன் கல்யாணத்துக்குள்ள நான் இந்த வேலையை விட்டுட்டு, இயக்குனர் கே.ஏ.,கிட்ட சேர்ந்துடுவேன். அதுல மாற்றம் இல்லை,'' சொல்லிக் கொண்டே, கட்டில் மேல் கிடந்த, 'ரிமோட்டை' எடுத்து ஒரு சொடுக்கு சொடுக்கினான், ரிஷி.எதிரில், 'டிவி' திரையில் காட்சிகள் புலனாக ஆரம்பித்தன.''டிவி போட்டுட்டே போலயிருக்கு... இனி, என் பேச்சு, உன் காதுல விழாது. வெச்சுடட்டுமா?'' என்றபடியே, மறுபுறம் கட்டானாள், தமிழ்.'டிவி' பார்த்த படியே, உலக வாலிபர்களின் தேசிய உடையான, 'பெர்முடாஸ் டிரவுசர், டீ ஷர்ட்'டுக்கு மாறியிருந்தான், ரிஷி.தமிழிடம் பேசியதில், கொஞ்சம் பாரம் இறங்கியது போல், ஒரு மனநிலை. உதட்டில் கூட மெல்ல விசில் எட்டிப் பார்த்தது. விசிலடித்தபடியே தலை வாரிக்கொண்டான். 'ஷர்ட் பாக்கெட்'டில் இருந்த மணிபர்சை எடுத்து, 'பெர்முடாஸ் டிரவுசரு'க்குள் போட்டபடியே திரும்ப, 'ரிமோட்டை' சொடுக்கி, 'டிவி'யை அணைத்தான். விசிலடித்தபடியே மாடிப்படிகளில் இறங்கினான். காத்திருந்த பைக்கில் ஏறி, இரும்பு மண்டையனாக மாறி, அவன் வெளியேறுவதை பார்த்துக் கொண்டுதான் இருந்தாள், மாமி. ரிஷியிடத்தில் தங்கள் மகனை பொருத்தி, அவன் போவது போல் நினைத்தவள் விழிகளில் கண்ணீர்.ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தவன் எதிரில், 'ஹாய்' என்றபடியே வந்தமர்ந்தாள், ஒரு பெண். ரிஷியை போலவே, 'பெர்முடாஸ் டிரவுசர், டீ ஷர்ட்'டும் அணிந்திருந்தாள்.சற்று கண்கள் இடுங்க பார்த்தான், ரிஷி.''என்ன மிஸ்டர் மீடியா... என்னை அடையாளம் தெரியலியா?''''அப்கோர்ஸ்... நீங்க?'' தோளை சிலிப்பியபடியே கேட்டான், ரிஷி.''நான், மைத்ரேயி... நாலாவது மாடியில இருக்கற என்னை, இரண்டு நாள் முன்ன தேடி வந்து நோண்டுனீங்களே?''''ஓ... ஓ... 'லிவிங் டுகெதர் கப்புள்...' மைத்ரேயி... அவர் மிஸ்டர் ரமேஷ்... சரியா?''''ஆமா, நாங்க, 'லிவிங் டுகெதர் கப்புள்'னு முடிவே பண்ணிட்டீங்களா... நான் அப்பவே அப்படி இல்லைன்னு சொன்னேனே?''''அப்ப, நிஜமா அப்படி இல்லையா?''''இனிமே அப்படிதான்...'' அவள் சொல்லிக் கொண்டே அருகே வந்து நின்ற சர்வரிடம், ''ஒரு சாம்பார் வடை...'' என்றவள், ''உங்களுக்கு?'' என்றாள்.''எனக்கு, ஆணியன் ரவா,'' என்றான்.சர்வர் விலகவும், இருவரிடமும் பரிமாற்றங்கள் துவங்கியது.''போகட்டும்... இனிமே அப்படி இல்லைன்னு ஏதோ சொன்ன மாதிரி இருந்தது. என்ன, ரமேஷோட ஏதாவது சண்டையா?''''அதெல்லாம் இல்ல... அவனுக்கு ஒழுங்கா சண்டை கூட போடத் தெரியாது. அவன் ஒரு தண்டம்.''''புரியல மைத்ரேயி.''''புரியாட்டி போகட்டும் விட்டுத்தள்ளுங்க... ஆமா, நீங்க பேச்சுலர் தானே?''''ஆமாம்.''''தனியாதான் இருக்கீங்களா?''''யெஸ்.''''கேன் ஐ ஜாயின் வித் யூ?''''வாட்?''''இல்ல... நான் உங்க கூட வந்துடட்டுமான்னு கேட்டேன்.''அந்த நேரத்தில், அந்த இடத்தில், அவள் அப்படி ஒரு கேள்வி கேட்பாள் என்று, ரிஷி எதிர்பார்க்கவே இல்லை. அவனிடம் பேச்சே வரவில்லை.''என்னாச்சு மிஸ்டர் மீடியா... எல்லாத்துலயும் ஷேர் பண்ணிப்போம்... உங்களுக்கும் செலவு மிச்சமாகும்; ஒரு கம்பெனி கிடைச்ச மாதிரியும் இருக்கும் இல்லையா?''அவள் தொடர்ந்து துாண்டினாள். கச்சிதமாய் சாம்பார் வடை வரவும், ஸ்பூனால் அதை கிள்ளி எடுத்து வாயில் போட்டபடியே அவனை பார்த்தாள்.ரிஷியிடமோ பெரும் திகைப்பு. —தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !