உள்ளூர் செய்திகள்

உயிரோடு உறவாடு... (22)

முன்கதை சுருக்கம்: முனிராஜுடன் பேசிய வீடியோ ஆதாரத்தை, எம்.டி.,யிடம் கொடுக்க, ஜனாவை அழைத்து விசாரித்தவர், ராஜினாமா செய்யுமாறு கூறினார். இந்நிலையில், முனிராஜ், ஜனாவை தொடர்பு கொள்ள, புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அவர்கள் இருவரையும் வீழ்த்த வேண்டும் என்றார்-ஜனாவிடம் தென்பட்ட உக்ரம், முனிராஜை கூட சற்று பயமுறுத்திற்று.''பாஸ்... நீங்க கொந்தளிக்கிறது எனக்கு நல்லா தெரியுது. எனக்கும் ரத்தம் கொதிக்குது. முடிவா கேட்கறேன், என்ன பண்ணலாம், பாஸ்?''''சொல்றேன்... நான் இப்ப உன்னை கூப்பிட்டது, என் கோபத்தை காட்றதுக்காக மட்டுமில்ல... நீ வாயை மூடிக்கிட்டு, கை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும். அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகக் கூடாது. அவங்கள அடிக்காம அடிக்கணும், குட்டாம குட்டணும். அத, நான் பார்த்துக்கறேன்.''''ரைட் பாஸ்... நான் ஒதுங்கிக்கறேன். அதேசமயம், நீங்க எப்ப வேணா என்னை தொடர்பு கொள்ளலாம். நீங்க, 'சிக்னல்' கொடுத்தாபோதும், ரெண்டு பேரும் இந்த பூமியில காணாமலே போயிடுவாங்க, பாடி கூட கிடைக்காத மாதிரி எரிச்சு, சாம்பலை எடுத்துக்கிட்டு போய் மெரினா, 'பீச்'சுல கரைச்சிடுவேன்.''''இப்போதைக்கு மூடிகிட்டு இரு... உன் ஆளுங்ககிட்டயும் சொல்லி வை,'' என்று முனிராஜிடம் பேசி முடித்து, போனை துண்டித்த ஜனா, திரும்பி அந்த சேனல் கட்டடத்தை மிக ஏக்கமாய் பார்த்தபடியே, காரை கிளப்பினார்.வழக்கம்போல், 'செக்யூரிட்டி கார்ட்' அவருக்கு, 'சல்யூட்' அடித்தான். அது, அவருக்கான கடைசி, 'சல்யூட்' என்பது, பாவம் அவனுக்கு தெரியாது.ஹாஸ்டலில், தமிழ்ச்செல்வியின் அறையில் ஒரே கூட்டம். எல்லாருமே சுஜித்துடனான நிகழ்வை, 'டிவி'யில் பார்த்தவர்கள். அந்த நிகழ்ச்சி, அவள் மதிப்பை ஆகாசத்துக்கு உயர்த்தி இருந்தது.'முசுடு' லேடி வார்டன் கூட தேடி வந்து, 'பிச்சுட்டே...' என்று பாராட்டியது தான், 'ஹைலைட்!'ஒரு வழியாக எல்லாரும் விலகவும், வந்து இதமாக கட்டிக் கொண்டாள், அறை தோழி ஜாக்குலின். ''தமிழ், இனி உன் கொடி, மேல உயர, உச்சியிலன்னு பறந்துகிட்டே இருக்கப் போகுது பார்,'' என்றாள்.''இதோட ஆரம்பமே, நீ தான் ஜாக்குலின். உன்னால தான் சுஜித் சார் வீட்டுக்கு நான் வர முடிஞ்சது; அவரையும் பார்க்க முடிஞ்சது. என் வாழ்க்கையில, உன்னை, என்னால மறக்கவே முடியாது.''''போதும் தமிழ் என்னை புகழ்ந்தது. உன் அடுத்த நிகழ்ச்சி எது?''''யோசிக்கணும்... அது, சுஜித் சார் நிகழ்வை விட பிரமாதமா இருக்கணும்.''''நிச்சயமா இருக்கும். ஆமா, இந்த நிகழ்ச்சியை உன் வருங்கால கணவர் பார்த்தாரா... என்ன சொன்னாரு?''ஜாக்குலின், சுகுமார் ஞாபகத்தை அவளுக்குள் மூட்டி விடவும், அதுவரை அவளுக்குள் நிலவிய ஒருவித சந்தோஷமும், உற்சாகமும், விளக்கை ஊதி அணைத்ததும், இருள் சூழ்ந்தது போலாயிற்று. தமிழிடம் ஒரு கனத்த மவுனம்.''என்ன தமிழ் இறுக்கமாயிட்டே... அவர்கிட்ட இருந்து போன் எதுவும் வரலியா? நோ பிராப்ளம். என்ன இருந்தாலும் மாப்பிள்ளை, அவர். நீ பேசும்போது சொல்ல நினைச்சிருக்கலாம்... இல்ல, இனி பண்ணலாம்.''ஜாக்குலின் சொல்லி முடிக்கவும், தமிழ்ச்செல்வியின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. திரையில் சுகுமார். அதை பார்க்கவும், ஒரு வினாடி மூச்சை அடைத்து, பின் சரியானது.''அட, உன் வருங்காலம் தானா... பேசு, நான் சொல்லலை...'' ஜாக்குலின் விலகிக் கொண்டாள்.மெல்லிய குரலில், ''ஹலோ...'' என்று ஆரம்பித்தாள், தமிழ்.''வணக்கம் மகாராணி... என் பேர் சுகுமார், மதுரையிலிருந்து பேசறேன். உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். இல்லாட்டி சொல்லுங்க ஞாபகப்படுத்தறேன்,'' ஆரம்பமே, சுகுமாரிடம் அதகளம்.''அட, என்ன சுகுமார் நீங்க... இப்படியெல்லாம் பேசாதீங்க, மனசுக்கு கஷ்டமா இருக்கு.''''இங்க எனக்கு, 'ஏசி' போட்ட மாதிரி, 'குளு குளு'ன்னு இருக்கறதா நெனப்போ உனக்கு?''''சுகுமார், உங்க கூட மனம் விட்டு பேசணும்ன்னு தான் ஆசை. ஆனா, நீங்க இப்படி கோபமாவே பேசினா எப்படி?''''என்னை என்ன, உன்ன கொஞ்சச் சொல்றியா... இல்ல, நீதான் அப்படி நடந்துக்கிட்டியா?''''எனக்கு தெரிஞ்சு, நான் எந்த தப்பும் பண்ணல, சுகுமார். உங்களாலயும் என்னை சரியா புரிஞ்சுக்க முடியல.''''அப்படி போடு அருவாள... எவ்வளவு ஆசையா நான் உன்னை பார்க்க வந்தேன். ஆனா, நீ என்ன பண்ணே? யார் அது, ஆங் ரிஷி. அந்த சாமியார் பயலோட என்னை கோர்த்து விட்டுட்டே. நல்லவேளை, இடையில ஜனாங்கிறவர் பார்த்தாரு. நீ கொடுக்காத மரியாதையையும், மதிப்பையும் அவர் கொடுத்தாரு.''''ஜனாங்கிறவரை பத்தி உங்களுக்கு சரியா தெரியல. அந்தாள் ஒரு கிரிமினல். இப்ப, அவர் வேலையிலயே இல்லை. அவரை ராஜினாமா பண்ணிட்டு போகச் சொல்லிட்டார் எங்க, எம்.டி.,''''அப்படியா... அவருக்கே வெடியா... சபாஷ்!''''என்ன நடந்துச்சுன்னு பொறுமையா கேளுங்க சுகுமார். அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க.''''என்னா முடிவுக்கு வர... நான்லாம் எப்பவோ வந்துட்டேன். இனி, நீ என் பேச்ச கேட்கறதா இருந்தா தான் எல்லாமே.''''என்ன சொல்லப் போறீங்க?''''நீ அங்க கிழிச்சது போதும்... எழுதி கொடுத்துட்டு புறப்பட்டு வா.''''இதுக்கா நான், இவ்வளவு கஷ்டப்பட்டேன். இப்ப எனக்கு எவ்வளவு பாராட்டு தெரியுமா?''''ஆனா, எனக்கு இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?''''என்ன நடந்துச்சு?''''கேபிள் தொழில் தான், எனக்கு அடையாளம். கேபிள் சுகுமாருன்னா, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கு கூட நல்லா தெரியும். ஆனா, அது அப்படியே மாறிடும் போல இருக்குது... உன் நிகழ்ச்சியை பார்த்துட்டு, என்கிட்ட என்னை பத்தி பேச மாட்டேங்கிறாங்க. உன்னை பத்தி தான் கேட்கறாங்க.''''நான், உங்க சம்மதத்தோட தானே சென்னை திரும்பி, என் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன்?''''அப்ப, என் பேச்சு தான், உனக்கு இனி எல்லாம்... அப்படித்தானே?''''வேலையை விட்டுட்டு வான்னு மட்டும் சொல்லாதீங்க, மத்தபடி நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்.''''நெசமா?''''எனக்கு பொய்யெல்லாம் சொல்லத் தெரியாதுங்க.''''சரி, முதல்ல நீ, அந்த ரிஷி பையன் தொடர்பை, 'கட்' பண்ணிக்கணும். செய்வியா?''''என்னங்க பேச்சு இது? தொடர்பு அது இதுன்னு கொச்சையா பேசறீங்க. அவன் என் நண்பன்க...''''புண்ணாக்கு... அந்த நட்பை தான் அறுத்துக்கங்கறேன்.''''நமக்கு இடையில அவன் என்னங்க பண்ணான்?''''எனக்கு புடிக்கலேன்னா விடேன்.''''நீங்க, தப்பா நினைக்கறீங்களா?''''இல்லேன்னா சந்தோஷம்... ஆனா, மத்த யாரும் தப்பா பேசிடக் கூடாது பாரு...''''யாருங்க பேசினா... அந்த ஜனாவா?''''அந்த நல்ல மனுஷன, ஏன் இப்ப இழுக்கறே... பேச்சயும் வளத்தாதே... எனக்கு இப்படி, விடாம கேள்வி கேட்டாலே புடிக்காது.''''அவரை நல்ல மனுஷன்னு திரும்ப திரும்ப சொல்லாதீங்க. ஒரு ரெண்டு மணி நேரம் பழகியிருப்பீங்களா... நாங்க, மாசக் கணக்குல பழகியிருக்கோம்... யாருக்கு தெளிவா தெரியும்?''''சரி... அந்த ஆள் அயோக்கியனாவே இருந்துட்டு போவட்டும், இந்த பேச்சை இதோட விடு.''''நீங்களும் என் வேலை விஷயத்துல மட்டும் தலையிடாதீங்க.''''அது, நீ நடந்துக்கறதுல இருக்கு... நான் மதுரையில இருக்கறதால, அங்க நீ என்ன பண்றேன்னு தெரியாதுன்னு மட்டும் நினைச்சுடாத.''''இப்படி என் மேல நம்பிக்கை இல்லாமல்லாம் பேசாதீங்க.''''அப்படித்தான் பேசுவேன்... இல்லாட்டி வெளிப்படையா சொல்லிடு. 'நீ எப்படி வேணா போய்க்கோன்னு, நான் ஒதுங்கிக்கிறேன். அப்புறம் உங்கம்மா உடம்பு, அப்பா உடம்புன்னு வருத்தப்படக் கூடாது.''இறுதியாக தமிழ்ச்செல்வியின் அம்மாவின் உடல் நலத்தை ஞாபகப்படுத்தி, 'பிளாக்மெயிலரை' போல பேசினான், சுகுமார். தமிழ்ச்செல்வியின் கண்களிரண்டும் கலங்கின.பெசன்ட் நகர் பீச்!காத்துக் கொண்டிருந்த ரிஷியின் முன், டாக்சியிலிருந்து இறங்கினாள், மைத்ரேயி. பஞ்சாபி பாட்டியாலா டிரெஸ்சில், 'போனி டெயில்' போட்டு, சேணம் இல்லாத புரவி மெல்ல நடந்து வருவது போல் வந்தாள். சற்று பிரமிப்புடன் பார்த்தான், ரிஷி. ரிஷியை நெருங்கியவள், ''ஹாய்...'' என்றாள்.பதிலுக்கு தலையசைத்தான், ரிஷி.''சத்யமா நீங்க போன் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கல மிஸ்டர் ரிஷி...'' என்று துவங்கினாள்.''உங்களுக்கு நல்ல ஜாதகம்ன்னு நினைக்கிறேன், மைத்ரேயி. உங்கள பத்தி என் தோழி தமிழ்ச்செல்விகிட்டயும், அப்புறம், வீட்டு உரிமையாளரான மாமிகிட்டயும் பேசினேன். இரண்டு பேருமே உங்களுக்கு உதவி செய்யிறது தான் சரி. ஒதுங்கிப் போறது கையாலாகாத்தனம்கற மாதிரி பேசிட்டாங்க.''''வாவ்... எனக்காக பேசக்கூட இரண்டு பேர் இருக்காங்களா... அப்ப, அவங்கள நான் பார்க்கணுமே?''''ஷ்யூர். சரி, நாளைக்கே கூட நீங்க அந்த மாடி அறையை காலி பண்ணிட்டு, நான் குடியிருக்கற வீட்டுக்கு வரலாம். அங்க உங்களுக்கு, 'அட்டாச்டு பாத்ரூம்' உடன், ஒரு அறை தயாரா இருக்கு. மாமி கேட்கற வாடகையை கொடுத்துடுங்க. அப்படியே ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்க முயற்சி செய்யுங்க. நாங்க உதவி பண்றோம்.''''நிஜமாவா... இத என்னால நம்பவே முடியல.''''என்னாலயும் தான் நம்ப முடியல... சத்யமா இதுல என் பங்கு ரொம்ப கம்மி. உங்கள பத்தி பேசினது மட்டும் தான், என் வேலை. முடிவை, அவங்க தான் எடுத்தாங்க. அப்புறம், தனியா சந்திக்கணும்ன்னு இங்க வரச்சொன்னதுக்கும் காரணம் இருக்கு. எல்லாத்தையும் போன்லயே பேசிட முடியாது, மைத்ரேயி. அதனால தான் வரச்சொன்னேன்.''''கமான்... என்ன பேசணுமோ பேசுங்க.''''நீங்க, மாமி வீட்டுக்கு குடி வரது பெருசுல்ல. கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கணும். அதேபோல உடை உடுத்தறதுலயும் கொஞ்சம் மாற்றம் வேணும். நான்வெஜ் ஐட்டங்களை வீட்டுல வெச்சு சாப்பிடக் கூடாது.''''அப்புறம்?''''அவ்ளோதான்... எவ்வளவு சீக்கிரம் வீடு வாங்கறீங்களோ அவ்வளவு நல்லது. ஆமா, உங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லையா?''''யூ மீன் அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா...''''ஆமாம்....''''எங்கப்பா, என் தாத்தா பாட்டிக்கு ஒரே மகன். எங்கம்மாவும் அப்படித்தான். 'கசின்ஸ்' இருக்காங்க. ஆனா, அவங்க யாரும் இந்தியாவுல இல்ல, யூ.எஸ்.,ல இருக்காங்க.''''உங்க அம்மா?''அவள் அம்மாவை பற்றி கேட்டதும், அதுவரை நிலவிய உற்சாகம் ஆவியாகி, ஒரு சலனம் முகம் முழுக்க தெரியத் துவங்கியது.''நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?''''அதெல்லாம் இல்லை. எல்லாருக்கும் அம்மாங்கற உறவு தான் இருக்கறதுலேயே பெருசு. ஆனா, என் வரைல சிறுசு கூட இல்லை. அதுக்கும் கீழ...''''காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா?''''வேண்டாம் ரிஷி. என் அம்மா இறந்துட்டதா நினைச்சுக்கங்க.''அவளின் பதில், அவனை நெடுநேரம் மவுனிக்க செய்தது. ஊடாடியது கடல் காற்று. அவளே மவுனத்தை உடைத்தாள்.''ரிஷி... என்னை கருத்தில் கொண்டு, உதவ முன் வந்ததுக்கு ரொம்ப நன்றி. என் வாழ்க்கையில இது, ஒரு நல்ல நாள். இரண்டு நல்ல விஷயங்கள் இன்னிக்கு நடந்திருக்கு. ஒண்ணு, என் அறையிலிருந்த குமார், ப்ளாட்டை காலி பண்ணிட்டு, 'நீயே இங்க இருந்துக்கோ'ன்னு சொல்லிட்டு போயிட்டான். அடுத்து, உங்க ப்ரெண்ட்ஷிப் உறுதியாயிருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.''''ஓ... அப்ப, வீட்ட காலி பண்ண வேண்டாமா?''''ஆமா... ஆனா, மாமி, தமிழ்செல்வியை நான் அவசியம் பார்க்கணும். இப்ப கூட எனக்கு பெருசா எந்த வேலையும் இல்லை. போய் பார்க்கலாமா?''மிக நிதானமாக பேசினாள், மைத்ரேயி. முதல் நாள் சரவண பவனில் பேசியதற்கும், இதற்கும் இடையே பெரும் மாற்றம்.''நேத்து என்கிட்ட அலட்டலா பேசின மைத்ரேயியா, இப்ப என் கூட பேசறதுன்னு ஆச்சரியமா இருக்கு...''''ஆமாம் ரிஷி... நான் எப்ப எப்படி இருப்பேன்னு என்னாலயே கணிக்க முடியல. என்னை கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ, என் மேல அக்கறை காட்டவோ யாருமே இல்லாததால, நான் தன்னிச்சையா தப்பு தப்பாவே போயிட்டேன். என் வாழ்க்கையில, என் மேல அக்கறை காட்ற முதல் மனிதனா, உங்களை தான் பார்க்கறேன்.''அவள், அவனை உயர்வாக சொல்லவும், கூச்சமாக இருந்தது, ரிஷிக்கு. உண்மையில் மாமியும், தமிழ்ச்செல்வியும் அவனை போலவே அவளை விகாரமாய் நினைத்திருந்தால், இந்த சந்திப்பு பேச்சுக்கெல்லாம் இடமேயில்லை. இது, அவர்களால் நடந்திருக்கும் ஒரு விஷயம்.அவன், அவளின் புகழ்ச்சியை தாள முடியாமல் சற்றே நெளிந்தபோது, அவன் கைபேசியில், 'வாட்ஸ் - ஆப்' சிணுங்கல். திரை திறந்து பார்த்தவனுக்கு, 'பகீர்' என்றது.— தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !