உள்ளூர் செய்திகள்

பரிகாரம்!

பாலு, நிதானமாக, மனைவி சாரதாவைப் பார்த்தார்.அவருக்காக, சிற்றுண்டி தயாரித்து வந்து, அவர் எதிரில் வைத்த சாரதா, ''என்ன, அப்படி பார்க்கறீங்க,'' என்று கேட்டாள்.''சாரதா... நீ கிரேட்! நீ யார்ன்னு புரிஞ்சுக்க தான் கடவுள் எனக்கு இப்படி ஒரு ஆபத்தை கொடுத்தான் போலிருக்கு,'' என்றார்.''மீண்டும் ஆரம்பிச்சிட்டீங்களா, பேசாம சாப்பிடுங்க... இன்னைக்கு டாக்டரை பார்க்கணும் இல்லையா,'' என்று ஸ்பூனால், டிபனை சிறுக சிறுக ஊட்டி விட... பாலு, கண்கள் கசிய, விழுங்கினார்.''என்ன இது... குழந்தை மாதிரி,'' என்று முந்தானையால் துடைத்து விட்டவளை அணைத்து, ''உனக்கு ரொம்ப கொடுமை செய்துட்டேன் சாரதா... கொடுமை செய்துட்டேன்,'' என்று கதறினார்.''என்ன சொல்றீங்க... என்னாச்சு உங்களுக்கு?'' ''சாரதா... என் செல்லமே... இத்தனை ஆண்டு கடந்தும், நீ அன்றைக்குப் பார்த்த, அதே மிரளும் மான் குட்டி போலவே இருக்கிறாயே... வெகுளியாக, உலகம் அறியாத அப்பாவியாக... உன்னை திட்டுவதாவது, அடிப்பதாவது... அதைவிட பெரிய கொடுமையை நான் செய்திருக்கிறேனே அது தெரியுமா உனக்கு... உணர்ந்திருக்கிறாயா அதை... வேடிக்கை என்ற பேரில் நான் எத்தனை விஷமங்கள் செய்திருக்கிறேன்... எவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறேன்... எனக்கே இப்போது தான் புரிகிறது சாரதா, என்ன செய்து அதை நான் சரி செய்ய முடியும்... என்ன பரிகாரம் செய்தால் என் பிழை தீரும்,'' என்றார்.பாலு, டபுள் டிகிரி படித்து, கை நிறைய சம்பாதிக்கிறவர். உறவு விட்டுப் போகக் கூடாதென்று, கிராமத்து சாரதாவை கட்டி வைத்தனர். திருவிழாவில் தொலைந்து போய், பயத்தில் உறைந்து நிற்கிற மாதிரியே இருப்பாள் சாரதா.எப்படி மனம் ஒப்பும்.படித்த ஆசாமியாகி விட்டதால், நாலு பேருக்காக, மனைவியை அடிக்கவோ, வெறுக்கவோ முடியவில்லை. என்றாலும், நேரம் வாய்க்கும்போதெல்லாம் அவளை, நையாண்டி என்ற பெயரில் கால் வாரினார். சென்னைக்கு வந்த முதல் நாளே...'உன் கழுத்துல தாலி கட்டி, கூட்டிகிட்டு வந்ததால், நீ, என் மனைவின்னு நினைச்சுடாதே... வீட்டு வேலைக்கு, ஆட்களை, நாங்கள் தாலி கட்டி தான் கூட்டி வருவோம்... எங்கள் பக்கத்து பழக்கம் அது...' என்றார்.'அப்பா அப்படி சொல்லலையே...' கதவுக்குப் பின்னாலிருந்து கீச்சுக் குரலில் சொன்னாள் சாரதா.'விலை பேசி தான் கூட்டிகிட்டு வந்திருக்கேன்... அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்திருக்கேன்...' என்றதும், அவள் விழிகளில் குபுக்கென்று நீர்.'ஊர்ல எல்லாரிடமும், உங்க மனைவியா வாழப்போறதா சொல்லிட்டு வந்தேன். வேலைக்காரியா தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சா கேவலமில்லையா... எங்க அப்பா, அப்படியொரு பாதகத்தை மூடி மறைச்சுட்டாரே...' என்று அழுதாள்.சிறிது நேரம் அழவிட்டு, 'சரி சரி... அழாத, உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கு... நீ, என் மனைவியாகவும் இருந்துக்கோ...' என்றார். கும்பிட்டாள்.'அப்புறம், ஒரு முக்கியமான விஷயம்... இது சென்னை, இங்கே இங்லீஷ்ல தான் பேசணும்... என்கிட்ட மட்டும் தமிழில் பேசு...' என்றார். ஆனால், இங்கே பால்காரியிலிருந்து பக்கத்து வீட்டு ஆட்கள் வரை தமிழ் பேசுவதை பார்த்துவிட்டு, 'இவங்க பேசறாங்களே...' என்றாள்.'அவங்க எல்லாம் இங்கே பத்து வருஷத்துக்கு முன் குடியேறினவங்க... அவங்க பேச, 'லைசென்ஸ்' வாங்கி இருக்காங்க... நீ புதுசா வந்திருக்கே... அரசு அனுமதி கிடைக்கிற வரைக்கும் பேசாதே... மீறி பேசினால் என்னை ஜெயில்ல போட்ருவாங்க...' என்று சொல்லி வைத்தார்.அதை அப்படியே நம்பி, யாருடனும் பேசாமல், வீட்டுக்குள்ளேயே இருந்தாள் சாரதா.யாராவது பேசினாலும், கை சைகையில் பதில் சொல்ல, 'அடப்பாவமே... பேச முடியாத பொண்ணையா இந்த பாலு சார் தேடித்தேடி கட்டினார்...' என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு போய்விட்டது.'சரி... சரி... நீ தமிழ்ல பேசு...' என்றார்.'பத்து வருஷமாவது ஆகணும்ன்னு சொன்னீங்களே...' என்று சாரதா கேட்க, 'நான் மேயர்கிட்ட பேசி, சிறப்பு அனுமதி வாங்கியிருக்கேன்...' என்று பாலு சொன்னதும், சாரதா பார்வையில் அப்படி ஒரு நன்றி உணர்ச்சி.ஒருநாள், 'பீச்'சுக்கு அழைத்து போனார்.முதன் முதலாக கடலை பார்த்து, பிரமித்துப் போனாள் சாரதா. அங்கும் ஒரு விளையாட்டு...'சாரதா... உனக்கு என் மேல் அன்பு இருக்கா...' என்று பாலு கேட்க, 'என்ன அப்படி கேட்டுட்டீங்க... உயிரையே வச்சிருக்கேன்...' என்றவளிடம், 'அதை இப்ப பரிசோதிக்கலாமா... இந்த கடல் தண்ணி பொதுவா உப்பு கரிக்கும். ஆனால், புருஷன் மேல பாசமா இருக்கிற மனைவிக்கு மட்டும் இந்த தண்ணி இனிக்கும்...' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இரண்டு கைகளிலும் நீரை அள்ளி குடிக்க ஆரம்பித்து விட்டாள். உப்பின் கரிப்பு சகிக்க முடியாமல், முகம் கோணி, வாய் குமட்ட, 'இனிப்பாதாங்க இருக்கு...' என்றாள்.சமையல் அருமையாக தான் செய்வாள் சாரதா. பாராட்டத் தோணாது.'சாரதா... ரசம் நல்லா தான் இருக்கு...' என்பார். 'அய்யோ... அது, சாம்பாருங்க...' என்று பதறுவாள்.'முதல்லயே சொல்ல வேணாமா... ரசம்ன்னு நினைச்சு, சாப்ட்டுட்டேன்... இதை சாம்பாருன்னு நினைச்சு இன்னொரு முறை சாப்பிட முடியுமா...' என்று கை கழுவுவார்.'ஆமாம், பூக்காரிக்கு உன் பேரை துாக்கிக் கொடுத்துட்டியே... இனி, நான் உன்னை எப்படி கூப்பிடறது...' என்று கேட்டு, திணற வைத்திருக்கிறார். 'அய்யோ... எம் பேரை நான் யாருக்கும் கொடுக்கலைங்க...''அந்த பூக்காரப் பொண்ணு, உனக்கு தெரியாம எடுத்துகிட்டா போலிருக்கு. நாளைக்கு வருவாள், அப்ப கேட்டு வாங்கிடு... அழகான பேர், அதை யாருக்கும் கொடுத்துடாதே...' என்பார்.'இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கறேன்...' என்பாள் சாரதா.தலைப் பிரசவத்துக்குப் போயிருந்தாள் சாரதா... குழந்தையுடன் திரும்பிய போது, 'என்ன, ஒரு குழந்தையோடு திரும்பி வந்திருக்கே... இன்னொண்ணு எங்கே...' என்று கேட்க...இல்லாத அந்த இரண்டாவது குழந்தையைப் பற்றி ரொம்ப நாளாக யோசித்தவண்ணம் இருந்தாள் சாரதா. 'இல்லைங்க... ஒரு குழந்தை தான்; நல்லா தெரியும்...' என்றாள். 'அடுத்த பிரசவத்தின் போதாவது கவனமாக இரு...' என்பார்.நாலு பேர் மத்தியிலும் மனைவியை மட்டம் தட்டுவார். 'கடவுள்னு ஒண்ணு இருக்குன்னு நான் நம்ப ஆரம்பிச்சதே, சாரதா என் மனைவி ஆன பிறகு தான். அவள் சமையலை சாப்பிட்டும் நான் உயிரோடு இருக்கேன்னா... அதுக்கு அவர் தான் காரணம்...' என்பார்.'இவளைக் கட்டிகிட்ட நாள்லயிருந்து எனக்கு பேய் பிசாசு பயமே கிடையாது...' என்று சிரிப்பார். மற்றவர்களும் சிரிப்பர். 'ஓ... இது சிரிக்க வேண்டிய விஷயம் போலிருக்கு...' என்று சாரதாவும் சேர்ந்து சிரிப்பாள்.இப்படி சீண்டுவது எல்லாம் தப்பு என்று தோன்றியதில்லை; நோய் தாக்கும் வரை.அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். 'கிராமத்து ராணி... சமையல் சக்ரவர்த்தி... டிபன் ரெடியா...' என்று கேட்டார்.அந்த நிமிஷம் நெஞ்சில் ஊசி குத்தலாக வலி... ஆயிரம் தேள்கள் கொட்டினது போல வலி தீவிரமாகி வியர்த்து சாய்ந்தார்.அதுதான் தெரியும்.விழிப்பு வந்தபோது, ஆஸ்பத்திரி, ஐ.சி.யூ., வார்டில்.'ஹார்ட் அட்டாக்!''உன் பொண்டாட்டி புண்ணியம் கட்டிகிட்டாள்... கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், உன் கதி அதோ கதி தான். நீ நெஞ்சை புடிச்சுகிட்டு சாய்ஞ்சதும், எதிரில் பக்கத்தில் இருந்த எங்களண்டை ஓடி வந்து, உதவி கேட்டு, ஆட்டோ பிடித்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துட்டாள்.'பணம் கட்டச் சொல்ல... கழுத்து, கை, காதுல இருந்த நகைகளை உருவி, அடகு வச்சு, பணம் கட்டினா. 'ஆஞ்சியோகிராம்' செய்ததில், இரண்டு அடைப்புகள்.'ஆஞ்சியோ பிளாஸ்ட் பண்ணி, ஐ.சி.யூ.,ல வச்ச பிறகு தான், வெளியூரில் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு தகவல் கொடுத்தாள்.'உன் பேச்சை கேட்டு, நாங்களும் இவளை வெகுளின்னு தான் பார்த்தோம். புருஷனுக்கு ஒண்ணுன்னதும், அவள் அழுது வடியாம, அய்யோன்னு உட்காராம, பறந்து கட்டி என்ன செய்யணுமோ அதை செய்தா பாரு... அந்த சமயோஜிதம், வேகம், சாதாரண பொண்ணுக்கு வராது...' என்று ஒரு மாமி சொல்லும் போதும், என்னமோ சொல்கின்றனர் என்று எட்டி நின்றிருந்தாள் சாரதா.கிராமத்து மாரியாத்தா முதல், மலையப்ப சாமி வரை வேண்டிக் கொண்டு, விரதம் இருந்து, நித்தம் பூஜை, அர்ச்சனை செய்து, ஒரு குழந்தையை போல் அவருக்கு சேவை செய்யவும், அவருக்குள் ஏதோ உடைப்பெடுத்துக் கொண்டது... கண்ணீர் விட்டார்.'உன்னைத்தான் இத்தனை காலமும், கேலியும் - கிண்டலும் செய்து வந்திருக்கிறேன். அனைத்தையும் உன் வெகுளித்தனத்தாலோ, கணவனும் - குழந்தைகளும் எதை சொன்னாலும் அது சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையாலோ, அப்படியே ஏற்று நடந்து, மற்றவரின் பரிகாசத்துக்கு ஆளாகி இருக்கிறாய் சாரதா.'என் கேலியும் - கிண்டலும் உனக்கு எப்போதும் புரிந்ததே இல்லையா... ஒரு வேளை புரிந்தும் புரியாத மாதிரி இருந்து விட்டாயா...''என்னை மட்டம் தட்டிப் பேசுவதால், உனக்கு மகிழ்ச்சி என்றால், உனக்காக, நான் அறிவில்லாத முட்டாளாய், வெகுளியான கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்...' என்று முடிவு எடுத்து, இன்று வரையில் அதை கடைப்பிடிக்கிறாயா சாரதா. 'உண்மையில் நீ வெகுளி தான் சாரதா. உன்னிடத்தில் வேறு ஒருத்தி இருந்திருந்தால், என் குணத்தைக் கண்டு எப்போதோ, 'டாட்டா' காட்டிவிட்டு போயிருப்பாள்.'இது, திட்டாமல் அடிக்காமல் நான் செய்த சித்ரவதை, கொடுமை சாரதா. அந்தப் பாவம் தான் என்னை படுக்கையில் தள்ளி விட்டது போல் இருக்கிறது.'இதற்கான பரிகாரமாய் நான் என்ன செய்ய முடியும் சாரதா. இனி, ஏழேழு பிறவிக்கும் நான் யாரையும் கேலி செய்ய மாட்டேன்; கிண்டல் செய்ய மாட்டேன்; மட்டம் தட்டிப் பேசி, மகிழ மாட்டேன் சாரதா... அந்த கெட்ட குணம் இன்றோடு வீழ்ந்தது - வீழ்ந்தது...'நினைத்து, நினைத்து கண்ணீர் விட்டார் பாலு. அன்று மாலை டாக்டரை பார்க்க சென்றபோது, ''குட்... எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம். கொடுத்த மருந்தை கவனமா சாப்பிடுங்க... சாப்பாட்டில் கட்டுப்பாடு இருக்கட்டும்... நிறைய ஓய்வு எடுங்க... சரியாயிடும்,'' என்றார்.''நான் மறந்தாலும், என் மனைவி என்னை கவனிச்சுக்குவா டாக்டர்.''''அதைதான் முதல் நாளே பார்த்தோமே... சச் எ கிரேட் லேடி,'' என்ற டாக்டர், ''என்னம்மா... உன் கணவர், உன்னைப் பத்தி என்ன சொல்றார் பார்,'' என்றார். ''அதென்னமோங்க... டாக்டர்... அவர், வழக்கமா என்னை ஏதாச்சும் கேலி பண்ணி கலகலப்பா இருப்பார்... இப்ப என்னமோ ரொம்ப மரியாதை கொடுத்து பேசறார்... கஷ்டமா இருக்கு... அதை மட்டும் சரி பண்ணி, எப்பவும் போல என்னை கேலி பண்ணி, சிரிக்கிற மாதிரி பண்ணிக் கொடுத்திட்டீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியம்,'' என்று கும்பிட்டாள், சாரதா. படுதலம் சுகுமாரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !