நதி திருவிழா!
நதிகள், நம் வாழ்வின் அங்கம். நதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை புனிதமாகக் கருதி போற்றவும், பல விழாக்களை ஏற்படுத்தினர், நம் முன்னோர். ஆடிப்பெருக்கு, கும்பகோணம் மகா மகம், மற்றும் தை மாதம் ஏதாவது ஒரு ஞாயிறன்று, வீட்டில் பொங்கல் வைத்து, நதிகளில் தீபம் மிதக்க விடுதல் ஆகியவை அவ்விழாக்கள். வடமாநிலங்களில், 'புஷ்கரம்' என்ற பெயரில் விழா எடுப்பர். 'புஷ்கரம்' என்றால் புனித தீர்த்த கலசம் என்று அர்த்தம். உலகிலுள்ள அத்தனை நதிகளின் நீரிலும், பாற்கடலில் கடைந்தெடுத்த சாகா மருந்தான, அமிர்தமும் கலந்துள்ளது.புஷ்கரம் விழாவைக் கொண்டாடுவதற்கு ஒரு புராணக்கதை உண்டு... புனித தீர்த்த கலசத்தைப் படைப்புக் கடவுளான பிரம்மா வைத்திருந்தார். இந்த கலசம் தனக்கு வேண்டுமென, நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மனை நினைத்து தவமிருந்தார். தவத்தை ஏற்ற பிரம்மா, குருவுக்கு அதைக் கொடுக்க முன்வந்தார்.அப்போது, அந்த கலசம், பிரம்மாவிடம், 'சுவாமி... நான் தங்களை விட்டு பிரிய மாட்டேன். உங்களோடு தான் இருப்பேன்...' என, அடம் பிடித்தது. எனவே, குருவிடம், 'என்னை விட்டு பிரிய மனமில்லாத, இந்த கலசத்தின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டியுள்ளது...'ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு தாங்கள் கடக்கும் காலத்தில் (குரு பெயர்ச்சியன்று) முக்கியமான புண்ணிய நதிகளுக்கு இதை எடுத்துச் சென்று, இதிலுள்ள நீரை அந்த நதிகளில் கலந்தால், அதில் நீராடும் அத்தனை பேரின் பாவமும் நீங்கப் பெறும்; ஆயுளும் அதிகரிக்கும்...' என்றார், பிரம்மா.இன்று வரை குருவும், அவ்வாறே செய்கிறார். ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு. தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார். மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும். இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு, 144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம். இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில், 12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் இந்த விழா நடக்கிறது. குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால், அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில் புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம் பெறலாம்.கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது, தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர். இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால் இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது. தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி, இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில், 100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர். மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை, பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக உள்ளது.நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன. நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற முடியும்.தி.செல்லப்பா