உள்ளூர் செய்திகள்

சகலருக்கும் உணவு படைக்கும் சபரிமலை முத்து!

சபரிமலை சன்னிதானத்தில், சமையல் கலைஞர்களுக்கு உதவியாக, பாத்திரம் கழுவி கொடுக்கும் வேலை பார்த்தவர், இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, சுவையான உணவை சமைத்து கொடுக்கிறார்.தேனி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர், முத்து. ஏழாவது வரை படித்தவர்; அதற்கு மேல், படிப்பு ஏறாத நிலையில், சிறுவனாக இருக்கும்போதே, பிழைப்பு தேடி, சபரிமலை சென்றார்.டீ விற்கும் வேலை கிடைத்தது. 100 ரூபாய்க்கு டீ விற்றால், 15 ரூபாய் கமிஷன். பகல் முழுதும், டீ விற்பார்; இரவில், சமையல் செய்யும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவியாக, பாத்திரம் கழுவி கொடுப்பார். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும்.இந்நிலையில், இவரது நேர்மை மற்றும் விசுவாசத்தை பாராட்டி, டீ கடை முதலாளி, 'இனி, நீ சொந்தமாய் டீ தயார் செய்து, விற்று பிழைத்துக் கொள்...' என, மூன்று, 'பிளாஸ்க்'குகளை பரிசாக கொடுத்தார்.சொந்த ஊரிலிருந்து இருவரை அழைத்து வந்து, டீ வியாபாரம் செய்தார். அப்போது, சபரிமலையில், பலரும் சாப்பாடு கிடைக்காமல் சிரமப்படுவதைப் பார்த்தார். பாத்திரம் கழுவி கொடுத்த இடத்தில், சமையலின் நேர்த்தியை கற்றுக் கொண்டதை வைத்து, சாப்பாடு கேட்கும் பக்தர்களுக்கு, தரமான பொருட்களால் செய்து கொடுத்தார். இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.ஓட்டல் நடத்த, தேவஸ்தானத்தில் முறைப்படி அனுமதி பெற்று, 'ஸ்ரீஹரி பவன்' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். சபரிமலையில் உணவகம் நடத்தும் ஒரே தமிழர், இவர் தான்.கேரளாவில், நிறைய ஓட்டல்கள் இருந்தாலும், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தெல்லாம் வரும் பக்தர்கள், 'முத்து உணவகம் எங்கே உள்ளது...' என்று கேட்பதுடன், இவர் ஓட்டலை தேடிப் போய் சாப்பிட்டுச் செல்கின்றனர்.காலையில், இட்லி, தோசை, பொங்கல், பூரி மற்றும் வடை. மதியம், சாப்பாடு. இரவில், சப்பாத்தி, பரோட்டா மற்றும் மசால் தோசை. சபரிமலை சீசன் நேரத்தில், 24 மணி நேரமும் ஓட்டல் இயங்கும். தம்பி, தேவேந்திரன் உடனிருந்து உதவுகிறார்.ஏழாம் வகுப்பை தாண்டாத, முத்து, இப்போது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேசுகிறார். சபரிமலையில் வேலை இல்லாத நாட்களில், ஊரில் விவசாயம் பார்க்க சென்று விடுவார்.'இங்கு வந்து, 26 ஆண்டுகளாகிறது. இப்போது, 90 பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். சபரிமலை முத்து என்றால், 'நல்ல மனிதர், நியாயமான விலையில் சாப்பாடு போடுகிறார்...' என்ற பெயரையும், புகழையும் சம்பாதித்துள்ளேன். இதுவே எனக்கு, மன நிறைவு; இந்த வாழ்க்கை போதும்...' என்கிறார்.சபரிமலைக்கு எத்தனை பேர் சென்றாலும், முத்துவிடம் போனில் தகவல் தெரிவித்தால், தரமான, சுவையான உணவை கொடுப்பார். அவரது மொபைல் எண்: 94862 58879.டோலி... டோலி...சபரிமலை செல்வோர் அனைவருக்கும் பரிச்சயமானது, 'டோலி... டோலி...' என்ற வார்த்தை.சபரிமலையில், 500 'டோலி'கள் இருக்கின்றன. 2,000திற்கும் அதிகமானோர், 'டோலி' சுமக்கும் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்தினர், தமிழகத்தை சேர்ந்தவர்கள்.'ஒரு பக்தரிடம், 4,000 ரூபாய் வசூலித்துக் கொள்ள, தேவஸ்தானம் அனுமதி வழங்கி இருக்கிறது. 4,000 ரூபாயை, நான்கு பேர் பிரித்துக் கொள்வோம். எங்களுக்கு, 62 நாட்கள் தான் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு, ஒரு வாய்ப்பு கிடைத்தாலே திருப்தி. எங்களுக்கே இரண்டு வாய்ப்பு கிடைத்தால், முதல் வாய்ப்பு கூட கிடைக்காதவருக்கு, விட்டு கொடுத்து விடுவோம்; அவுங்களும் பாவம் தானே...' என்கின்றனர், 'டோலி' தொழிலாளர்கள்.எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !