இரும்பு சட்டியிலிருந்து குதித்து, அடுப்பில் வீழ்ந்ததா?
தெரு நாயின் மீது ஒருவர் வாகனம் கொண்டு மோதி விடும் போது, அந்நாய்க்கு உரிமை கொண்டாட, நான்கு பேர் முன் வரும் காலம் இது!இந்நாய்க்கு விலையாக ஒரு வெளிநாட்டு நாயின் விலையை கோருபவர்களும் உண்டு. இந்நேரத்தில், மோதியவரின் பாடு தர்ம சங்கடம். ஒருமையில், குறிப்பிட்டது தவறு. தர்ம சங்கடங்கள் என்பதே சரி! முதலாவது, யார் உரிமையாளர் என்று கண்டுபிடிப்பது; இரண்டாவது, எவ்வளவு தொகை தருவது என்பது!ஒரு புத்திசாலி, இந்த இரு தர்ம சங்கடங்களிலிருந்து வெளிபடுவதே பெரிது என்கிற போது, விவரம் தெரியாமல் அணுகி, மூன்றாவது தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு.'சொறி பிடிச்சு செத்துப் போற நிலைமையில இருக்கிற தெரு நாய்க்கு, நாலு பேர் பொய் சொல்லிக்கிட்டு, பணம் கறக்கப் பாக்குறீங்களா...' என்கிற பாணியில் தேவையில்லாமல் பேசி, நான்கு பேர்களையும் பகைத்துக் கொண்டு நால்வருக்குமான பொது எதிரியாகி விடுவதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.'நீங்க ஆசையா பாசமா வளர்த்த செல்ல நாயை அநியாயமா அடிச்சுப் போட்டுட்டேன்; பெரிய தப்பு நான் செஞ்சது... முதல்ல உங்கள்ள யார் இதுக்கு உரிமை கொண்டாடணும்ங்கிற பஞ்சாயத்தை முடிச்சுக்குங்க...' என்று, அந்நான்கு நபர்களையும் மோத விட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் தன்னந் தனியர்களாக்குபவரே புத்திசாலி.ஒரு வில்லாள கண்டன் இந்த உரிமைப் போரில் வெற்றி பெறுகிற போது, அந்நாய்க்கான தொகையும் பரிமாறப்படுகிற போது, 'இந்த சொறி நாய்க்கு அவ்வளவெல்லாம் கொடுக்காதீங்க...' என்று பேசுமளவு, மூவரையும் ஓரணியில் சேர்த்து, தனக்கு பின்னால், அவர்களை பலமாக்கிக் கொள்வது அடுத்த கட்ட சாமர்த்தியம்.ஒரு பெண்ணின் மீது, பஸ்சில் உரசி விட்டதாக ஒரு நடுத்தர வயதுக்காரர் மீது குற்றச்சாட்டு.'என்னையும் அறியாமல் மேல பட்டுருச்சுங்க; மன்னிச்சிடுங்க...' என்பது புத்திசாலித்தனம். 'போயும் போயும் இந்த மூஞ்சியையா உரசுவாங்க; வேறு ஆளே எனக்கு கிடைக்காதா...' என்ற இரு கேள்விகள் இருக்கின்றனவே.... இவையும் இரும்புச் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் குதிக்கிற கதை தான்.அடடே... இரும்புச் சட்டியிலிருந்து அடுப்பில் குதிக்கிற கதை சொல்ல விட்டு விட்டேனே!துள்ளுகிற மீனை, இரும்பு சட்டியில் போட்டு வறுக்க முயன்றனர். 'இதென்ன இப்படி சுடுகிறதே...' என்று துள்ளி துள்ளி குதித்து, கீழே இருந்த அடுப்பிற்குள் பாய்ந்து, மாய்ந்தது மீன்.பலர் இப்படித்தான் ஒரு தவறு செய்து, அதிலிருந்து தப்பித்து வெளியேறுகிறேன் பேர்வழி என்று, கூமுட்டை தனமாக, இன்னும் பெரிய சிக்கலில் போய் மாட்டிக் கொள்கின்றனர்.பெரும்பாலான நேரங்களில் முதல் கட்டத் தவறுகள் கவனக்குறைவால், அலட்சியத்தால், அறியாமையால், தற்செயலாய் நிகழ்ந்து விடுகின்றன.'அடடா... வகையாக சிக்கிக் கொண்டோம் போலிருக்கிறதே...' என்று சட்டென விழித்துக் கொண்டு நடந்ததற்கு எப்படி பிராயச்சித்தம் தேடலாம், எப்படி இதை மேலும் சிக்கலாக்கி கொள்ளாமல் வெளியேறலாம் என உணர்ந்து வருந்தி, இதற்கு வழிவகை தேட வேண்டும். மாறாக, 'நான் செய்தது சரி தான்...' என்கிற தவறான நிலைப்பாட்டிற்கு மாறி, மேலும் பல தவறுகளை இழைத்து, சிறு சிக்கல்களை, இடியாப்பச் சிக்கலாக ஆக்கிக் கொள்கின்றனர்.தவறுகளை, உணர்ந்து திருந்த முன் வருகிறவர்களை, இந்த உலகம் சற்றே பரிவோடு பார்க்கிறது. செய்த தவறுகளை நியாயப்படுத்த பார்க்கிறவர்களையும், உணர முன் வராதவர்களையும், 'இவர்களை விடவே கூடாது' என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இரட்டை தண்டனை வழங்கப் பார்க்கிறது.ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் கூட பரவாயில்லை; இரண்டாவது காலையும் சேற்றில் விட்டு விட்டால், காப்பாற்ற முன் வருபவர்களால் கூட, ஒரு வேளை முடியாமல் போகலாம்.லேனா தமிழ்வாணன்