உள்ளூர் செய்திகள்

கூச்சல் கூட சுகமே!

இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பங்களாக்கள் கொண்டது, எங்கள் குடியிருப்பு. அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், இங்கு அதிகம். எங்கள் தெருவின் ஒரு பகுதியை தவிர, மற்ற பகுதிகள், அமைதியாக இருக்கும்.காலை நடை பயிற்சியின் போது, ''யோவ் ராமசாமி... உன் தெரு கடைசியில இருக்குற அந்த ஓட்டு வீட்டுல, என்னய்யா எப்பப் பாத்தாலும் ஒரே சத்தமா இருக்கு... பேசாம, அவங்கள காலி பண்ண சொல்லணும்யா... இவங்களால நம்ம குடியிருப்புக்கே கெட்டபேரு,'' என்றார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர்.நான் பதில் பேசவில்லை. ஏனென்றால், அந்த அதிகாரி அரசு உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். அத்துடன், அவரை விட பல படிகள் கீழ் நிலையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற என்னைப் போன்றோரிடம் எல்லாம் பழக வேண்டியுள்ளதே என்ற மனக்குறையும் அவருக்கு உண்டு.அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்காதீர்கள். அவரைப் போல பதவியில் இருந்து ஓய்வு பெற்ற, எங்கள் குடியிருப்பில் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றி சொல்லியுள்ளார். அது, அரசல் புரசலாய் என் காதுகளில் வந்து விழுந்து தொலைத்தது. அதனால், பேசாமல் அவர் சொல்வதை கேட்டேன்.பணியில் இருக்கும் போதும் இப்படித் தான் அமைதியாக இருந்தேன். இல்லாவிட்டால், நல்லபடியாக பணி ஓய்வு பெற விட்டிருப்பார்களா... மற்றபடி, அவர் குற்றம்சாட்டிய குடும்பம் என் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தது.அந்த குடும்பத்தில், வயதான பெற்றோர், அவர்களுக்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூவருக்கும், தலா மூன்று குழந்தைகள். பெண்ணுடைய கணவனும் அந்தக் கூட்டத்துக்குள் ஐக்கியமாகி விட்டான்.காலை எழுந்தது முதல், இரவு வரை ஒரே சத்தமாகத் தான் இருக்கும். யார் என்ன பேசுகின்றனர் என்று தெரியாது; சில நேரங்களில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும் உண்டு. எல்லாம் அரை மணி நேரம் தான். அப்புறம் பார்த்தால், 'இவர்களா சண்டையிட்டனர்...' என்று தோன்றும்.இந்த சண்டையில், அதிகம் திட்டு வாங்குவது அந்த வயதான பெற்றோர் தான். அவர்களை பார்க்கும் போது, எனக்கு பாவமாக இருக்கும். அதுவும், அந்த ஆண் வாரிசுகளும், அவர்களது மனைவியரும் அந்த பெரிசுகளிடம் போடும் சண்டையைப் பார்த்தால், எங்கே அந்த வயதானவர்கள் அடிபட்டு, கீழே விழுந்து விடுவரோ என கவலையாக இருக்கும். ஆனால், சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், அந்த பெரிசுகளைச் சுற்றி உட்கார்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருப்பர்.இதில் ஒரு உண்மை என்னவென்றால், இந்தக் குடியிருப்பு காடாய் கிடந்த போது, அந்த குடும்பம் தான் முதன் முதலில் தைரியமாய் குடி வந்தது. அதற்குப் பின், பல ஆண்டுகள் கழித்தே, நாங்கள் ஒவ்வொருவராக பயந்து பயந்து வீடு கட்டி, குடி வந்தோம். அதை இப்போது மறந்து, 'அவர்களை காலி செய்ய சொல்ல வேண்டும்...' என்று அடிக்கடி பேசுகிறோம்.அன்றும் அப்படித் தான் ஒரே கூச்சலாய் இருந்தது. தெருவில், அவர்கள் வீட்டை அடுத்து இருந்த நான்கு வீடுகளும் சிறிது தள்ளி இருந்தன. ஆனால், என் வீடு மிக அருகில் இருந்ததால், வீட்டுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. எந்த சலனமும் இல்லாமல், தன் வேலைகளை செய்தபடி இருந்தாள் என் மனைவி..''சே... நாம எல்லாம் இருக்கறதா இல்லயா... என்ன குடும்பமோ...'' என, உரக்க முணுமுணுத்தவாறு என் மனைவியை பார்த்தேன். அவளிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. அவள் கவலை அவளுக்கு!என் பையனும், பெண்ணும், திருமணமாகி, வெளிநாடுகளில் தங்கி விட்டனர். எப்போதாவது ஒருமுறை வந்து எட்டிப் பார்த்து செல்வர். அதற்கே, 'லீவ் கிடையாது; உடனே, போக வேண்டும்...' என்று ஆர்ப்பாட்டம் செய்வர். அவர்கள் பெற்ற குழந்தைகளையாவது அருகில் விடுவரா... 'தாத்தா - பாட்டிய தொந்தரவு செய்யாதே...' என்று விலக்கியே வைத்திருப்பர்.சத்தம் அதிகமாக கேட்கவே, சட்டையை எடுத்து மாட்டி, வெளியே வந்தேன்.என்னைப் போலவே, அருகில் இருந்த வீட்டுக்காரர்கள், அந்த வீட்டை நோக்கி படையெடுக்க தயாராக இருந்தனர். நான் வெளியே வந்து, அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அதுவரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவர்கள், ஏதோ நான் இவர்களுக்கு தலைமை தாங்குவது போல, என் பின்னால் நடந்து வந்தனர்.வீட்டில், வயதான பெற்றோரை சுற்றி நின்று, அவர்களுடைய வாரிசுகளும், அவர்கள் மனைவிகளும் சண்டையிட்டபடி இருந்தனர்.'ஏன் இப்படி சண்டை போடறீங்க...' என்றேன். என்னுடைய சத்தத்தில், சிறிது அமைதியாகி, தங்களுக்குள் முணுமுணுத்து, மெல்ல அந்த இடத்தை விட்டு விலகினர்.அந்த முதியவர்களை பார்க்க, பரிதாபமாக இருந்தது. தினம் தினம் இவர்கள் தன் வாரிசுகளிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுவதை நினைத்து வருத்தமாக இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்து, என் நண்பன் பாலுவை பார்க்கச் சென்றேன்.ஆரம்ப காலத்தில் என்னுடன் பணிபுரிந்து, பின், பணியிலிருந்து விலகி, வியாபாரத்தில் ஈடுபட்டு, தற்போது நல்ல நிலையில் உள்ளான். அவனிடம் இவர்களைப் பற்றி சொல்லி, நல்ல முதியோர் இல்லம் இருந்தால், ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவன், தன்னுடைய செல்வாக்கால், ஏற்பாடு செய்து தருவதாக கூறினான்.சிறிது நிம்மதி ஏற்பட்டது.அவர்கள் வீட்டுக்கு சென்று, அந்த முதியவர்களிடம், 'உங்களுக்கு நல்ல ஒரு இடமாக பாத்து வைச்சுருக்கேன். நீங்க அங்கு போய் இருங்க. அப்பத்தான் உங்க அருமை இவங்களுக்கு தெரியும்...' என்று பெரிய, 'லெக்சர்' கொடுத்தேன். ஆனால், அவர்கள் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். 'மனசு சங்கடம் போலிருக்கு...' என நினைத்து, அவர்களிடம் விடை பெற்று, என் வீட்டிற்கு வந்தேன்.இதை என் மனைவியிடம் தெரிவித்த போது, ''இதெல்லாம், உங்களுக்கு வேண்டாத வேலை...'' என்று சொன்னவள், 'அவங்க சந்தோஷம் அவங்களுக்கு! அதை ஏன் கெடுக்கிறீங்க...' என்று முணுமுணுத்தாள். அவள் சொன்னது எனக்கு புரியவில்லை.எல்லாம் தயாராகி விட்டதாக தெரிவித்தான் பாலு.அவங்க வீட்டுக்கு போய் அனைவரையும் அழைத்து, 'உங்க அப்பா, அம்மா கொஞ்ச நாள் முதியோர் இல்லத்துல, நிம்மதியா இருக்கட்டும்; நீங்க அப்பப்ப போய் அவங்கள பாத்துக்கங்க...' என்றேன்.அவர்கள் எதுவும் பேசவில்லை என்றாலும், இந்த விவகாரத்தில், நான் தலையிட்டதை விரும்பவில்லை எனத் தெரிந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், நானே, ஒரு கார் ஏற்பாடு செய்து, அந்த தம்பதியை ஏற்றி, அந்த இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.வீட்டிற்குள் நுழைந்ததும், என்னை விரோதியை பார்ப்பது போன்று பார்த்தாள் என் மனைவி. 'நான் நல்லது தானே செய்தேன்... இவள் ஏன் என்னை கோபமாய் பார்க்கிறாள்...' என, நினைத்துக் கொண்டேன்.ஒரு வாரம் ஓடியிருக்கும்; அந்த தெருவே, அமைதியாய், வெறிச்சென்று, ஏதோ இழந்தது போல இருந்தது. எப்போதும் என்னை மரியாதையாய் பார்க்கும் அக்குடும்பத்தார், இப்போது என்னை விட்டேத்தியாய் பார்ப்பதாய் தோன்றியது. என் மனைவி கூட, முன்பு போல் என்னிடம் பேசுவது குறைந்து போனதாக மனதில் பட்டது. தெருவே, ஏதோ சத்தத்துக்கு ஏங்குவது போல பட்டது. இதையே தான் பக்கத்து வீட்டுக்காரர்களும் நினைக்கின்றனரோ என்னவோ!பத்து நாள் ஓடியிருக்கும்; காலையில் திடீரென்று எங்கள் தெருவில் கூச்சல் கேட்டது. நேரம் ஆக ஆக சத்தம் பெரிதானது. என்னவென்று விசாரிக்க, அந்த வீட்டுக்கு கிளம்ப எத்தனித்தேன். என் மனைவி, என்னை தடுத்து, ''இங்க பாருங்க... அது, அவங்க குடும்ப விவகாரம்; உங்களுக்கு கொடுப்பினை இல்லன்னா, பேசாம இருங்க. போய் அவங்க கூட்டைக் கலைக்காதீங்க,'' என்றாள்.அவள் சொன்ன வார்த்தையின் பொருள், எனக்கு புரியவில்லை. அவளை உதாசீனப்படுத்தி, அந்த வீட்டுக்கு சென்றேன்.அங்கு, அந்த வயதான தம்பதி உட்கார்ந்திருக்க, அவர்களை சுற்றி, வழக்கம் போல் கூச்சலிட்டபடி இருந்தனர் அவர்களின் வாரிசுகள்.என்ன பேசுவது என்று புரியாமல், பேசாமல் தலை குனிந்து, என் வீட்டிற்கு வந்தேன். என் மனைவி, என்னிடம், ''ஏன் வருத்தமா இருக்கறீங்க?'' என்று கேட்டாள்.போகும் போது இவள் பேசிய பேச்சுக்கும், இப்போது பேசும் பேச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, எதுவும் புரியாமல் அவள் முகத்தை பார்க்க, ''அவங்க என்ன தான் சண்டை போட்டாலும், அந்த பெரியவங்க மனசுக்குள்ள, 'நம்மளை சுத்தி நம்ம குடும்பம் இருக்கு'ன்னு ஒரு பாசம் இருக்கும். அவங்க பிள்ளைங்களால கஷ்டப் படுறாங்கன்னு நினைச்சு, நீங்க எவ்வளவு தான் வசதியான இடத்துல கொண்டு போய் வச்சாலும், அங்க அவங்க, தன் பிள்ளைங்க, பேரன், பேத்திங்க குரலை கேட்கலையின்னா, அனாதையா நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க.''உண்மையில பாத்தா நாம தாங்க அனாதை; அவங்க இல்ல... ஏன்னா சண்டை போடறதுக்கும், சமாதானம் பேசறதுக்கும், எப்பவும் அவங்களை சுத்தி ஆளுங்க இருக்காங்க; நமக்குத் தான் யாருமே இல்ல...'' எனச் சொல்லும் போதே, அழுகை வெடித்து கிளம்பியது.எனக்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.தாமோதரன் ஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !