நிழல் பூக்கள்!
அன்றைய அதிகாலை, சென்னை, வழக்கம் போலத்தான் விடிந்தது. பால் வாங்க கியூவில் நிற்கும் கூட்டம், நடை பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், டீக்கடையில் டீ குடித்து விட்டு, சிகரெட் பற்ற வைக்கும் கும்பல், பேப்பர் கடையில், அன்றைய தினசரிகளை கேட்டு வாங்குவோர், வீட்டு வாசலில் விதவிதமான கோலம் போடும் பெண்கள்... ஆனால், சிவராமன் வீட்டில் மட்டும், அந்த காலை, வழக்கத்திற்கு மாறாக இருந்தது.''ஏங்க... லதாவை காணோம்,'' என்று, கூச்சல் போட்டாள் கோமதி; சிவராமனின் மனைவி. காலைக் குளிரில் மெய்மறந்து தூங்கி கொண்டிருந்த சிவராமன், பதறியபடி எழுந்தார்.''எதுக்கு கத்தி ஊரைக் கூட்டறே... பக்கத்தில் எங்கேயாவது போயிருப்பாள்,'' என்று, மனைவியை சமாதானப்படுத்தியவரின் கண்களில் பட்டது, அந்த கடிதம்.'டிவி'யின் மேல் வைக்கப்பட்டிருந்த, அந்த கடிதத்தை எடுத்து, கைகள் நடுங்க பிரித்தார் சிவராமன்.'என் உயிரினும் மேலான தெய்வங்களான அம்மா- அப்பாவிற்கு, உங்கள் அன்பு மகள் லதா எழுதுவது. உங்களிடம் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற பயத்தில், என்னை உயிருக்கு உயிராய் நேசிக்கும் என் காதலனுடன் செல்கிறேன். இனி வாழ்வும், சாவும் அவருடன் தான். வீட்டிலிருந்து பணம், நகை என்று எதையும் எடுத்துச் செல்லவில்லை. எனக்கு தேவை உங்கள் ஆசிர்வாதம் மட்டும் தான். உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்...'கடிதத்தை படித்து முடித்த, சிவராமனின் கண்கள் கலங்கின. அவர் கையிலிருந்த கடிதத்தை பிடுங்கி படித்த கோமதி, 'ஐயோ... பாவி மக இப்படி செய்துட்டாளே...' என்று, கதறினாள்.''உஷ்! சத்தம் போடாதே... பக்கத்து வீட்டுக்காரங்க காதில் விழுந்தா... அவ்வளவு தான். ஊர் உலகம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்,'' என்றார் சிவராமன்.''நமக்கு, இப்படி ஒரு தலைக்குனிவை கொடுத்துட்டு போயிட்டாளே... அவளுக்கு, நாம என்ன குறை வெச்சோம்ன்னு ஓடு காலியாயிட்டா...''''சும்மா இருக்க மாட்டியா... நீயே மைக்செட் வெச்சு, எல்லாருக்கும் சொல்லிடுவே போலிருக்கே.''''எப்படிங்க... உங்களால், இந்த நிலமையிலும் இப்படி இருக்க முடியுது. நீங்க மனுஷனா, மாடா?''''அவ தன் காதலை உண்மைன்னு நம்பி, வயசுக் கோளாறில் ஓடிப் போயிட்டா... நாம அவமேல வெச்ச பாசம் உண்மை யானதாக இருந்தால், நிச்சயமாக துளி சேதாரம் இல்லாமல், இன்னைக்கே அவ திரும்பி வருவா.''நம்பிக்கையுடன் உறுதியாக பேசிய சிவராமனை, வைத்த கண் மாறாமல் பார்த்து, கண் கலங்கினாள் கோமதி. லதாவை, தன் வயிற்றில் சுமந்து பெத்தது மட்டுமே கோமதி. மத்தது எல்லாமே சிவராமன் தான்! அவள் சிறுமியாக இருந்தபோது, அவரை, 'அம்மா' என்று தான் அழைப்பாள். கொஞ்சம் பெரியவளானதும், 'எனக்கு அம்மா -அப்பா எல்லாம் நீங்கள் தான்' என்பாள். தோழிகளிடம், அவரை, 'தோழன்' என்று தான் அறிமுகப்படுத்துவாள். சிவராமன் அவளை எப்படி கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் என்பது, எல்லாருக்கும் தெரியும். படித்து முடித்து, பதினெட்டு வயது ஆனதும், பறவைகளை போல் கண்ணுக்கு தெரியாத இறக்கை முளைக்கிறதா இந்த பிள்ளைகளுக்கு. இப்படி சொல்லாமல், கொள்ளாமல் கானல் நீரை நம்பி, பறந்து போகின்றனரே...சிவராமனுக்கு, லதா மகள் மட்டுமல்ல, அவளை தன் தாயைப் போல் நினைப்பார். ஒரு மகளுக்கு கொடுக்க வேண்டிய செல்லத்தையும், ஒரு தாய்க்கு தர வேண்டிய மரியாதையும் கொடுத்து, வளர்த்து வந்தார். சின்ன வயது முதல், அவள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார். ஒரு வேளை, அவள் காதலை வாங்கித்தர முடியாது என்பதால், அவள் கேட்கவில்லையோ என்று தான், அந்த கணமும் நினைத்தார்... 'ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால், ஊரே பிரமிக்கும் அளவுக்கு, லதாவின் திருமணத்தை நடத்தியிருப்பேனே...' என்று, எண்ணினார்.லதா, நான்காம் வகுப்பு படித்த போது, நடந்த ஒரு சம்பவம் இன்னும் அவர் நெஞ்சில், நேற்று நடந்தது போலவே நினைவில் வந்தது. சேலத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு செல்ல கோமதி, மகளுடன் ரயில் ஏறினாள். சென்னையில் அலுவலக பணி இருந்ததால், சிவராமனால் செல்ல முடியவில்லை. அவர்களை வழியனுப்ப ஸ்டேஷனுக்கு வந்தவர், அவள் வழியில் சாப்பிட, தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார். அப்பாவும் கூட வரப்போவதாக நினைத்துக் கொண்டாள் லதா.லதா, அம்மா இல்லாமல் கூட இருந்து விடுவாள்... அப்பா இல்லாமல் இருக்க மாட்டாள். அவளுக்கு அவர் வரவில்லை என்று தெரிந்தால், 'அம்மாவுடன் போக மாட்டேன்... அப்பா கூடவே இருந்து கொள்கிறேன்' என்பாள். கோமதியைத் தான் ஊரில் எல்லாரும் ஒரு மாதிரியா பேசுவாங்க... 'புருஷனும் வரல, பொண்ணும் வரலயா'ன்னு இப்படி நிறைய முறை நடந்திருப்பதால், தான் வரவில்லை என்பதை, அவர் லதாவுக்கு சொல்லவில்லை. சரியாக ரயில் புறப்படுவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன், கீழே இறங்கிய சிவராமன், 'போயிட்டுவாடா என் செல்லம்...' என்று டாட்டா காட்டினார்.அவ்வளவு தான்... அழுது புரண்டு ஓடி வந்த லதா, ரயிலிலிருந்து குதித்து விட்டாள். நல்ல வேளை, அடி எதுவும் படவில்லை. அப்ப ஸ்டேஷனுக்கு, சிவராமனுடன் அவருடைய நண்பன் நடேசனும் வந்திருந்தார்.'ஏம்மா... இப்படி, அப்பா- அம்மா என்று உயிரையே விடுறியே... நாளைக்கு நீ பெரியவளாகி, உனக்கு திருமணம் நடக்கும்போது, அப்பா - அம்மாவை விட்டு போக வேண்டியவ தானே...' என்று கூறி, சிரித்தார்.'நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன். எப்பவும் அப்பா கூடவே இருப்பேன்...'ஒரு வழியாக அவளைச் சமாதானப்படுத்தி, அன்று அம்மாவுடன், அனுப்பி வைத்தனர். அந்த சம்பவம் இப்போது நினைவுக்கு வந்ததும், உரக்கச் சிரித்து விட்டார் சிவராமன். அவரை வியப்புடன் பார்த்த கோமதி, செல்ல மகள் இப்படி ஓடிப்போனதால், அவருக்கு மனநிலை பாதித்து விட்டதோ என்று நினைத்தாள். அவளுடைய பார்வையை தவிர்க்க, கண்களை திருப்பிய சிவராமன், அப்போதுதான் அந்த கறுப்பு நிற பெட்டியை பார்த்தார். இது இங்கே எப்படி வந்தது! பொக்கிஷம் போல், பாதுகாப்பாய் மறைத்து வைத்திருந்த அவருடைய பெட்டி அது. அதன் அருகே சென்று பெட்டியை திறந்தவர், அதிர்ந்து போனார். அதற்குள், அவர் வைத்திருந்த டைரிகள், கடிதங்கள் எதுவுமில்லை. அதற்கு பதிலாக, லதாவின் ஆடைகள் தான் இருந்தன. என்ன இது என்று புரியாமல் தவித்தார். அருகே வந்த கோமதி, ''இது லதாவுடைய பெட்டி...'' என்றாள்.'அவ பெட்டி இங்கேயிருந்தா, லதா எடுத்து சென்றது தன் பெட்டியையா...' என்று, நிலைகுலைந்து போனார் சிவராமன்.சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில், வேகமாக சென்று கொண்டிருந்தது. ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்த லதா, இன்னும், பதற்றத்தில் தான் இருந்தாள். அவள் மீது சாய்ந்து தூங்கி கொண்டிருந்த, காதலன் பிரபாகரனை பார்த்தாள். அவன் பெங்களூரில் ஒரு, ஐ.டி., கம்பெனியில் பணிபுரிகிறான். அங்கு, அவனுக்கென்று தனியாக ஒரு பிளாட்டும் உள்ளது. இனி, அங்கே தான், தன் வாழ்க்கை என்று எண்ணிய லதா, யதேச்சையாக தன் சூட்கேசை எடுத்து திறந்தவள், திடுக்கிட்டாள். பெற்றோர் விழித்து விடப் போகிறார்களே என்கிற பதற்றத்தில், ஓடிவரும் அவசரத்தில், பெட்டியை மாற்றி எடுத்து வந்ததை, அப்பதான் கவனித்தவள், 'அடடா... பெட்டியை மாற்றி எடுத்து வந்து விட்டோமே... பரவாயில்லை. கொஞ்சம் துணிகள் தானே, பெங்களூரு சென்று, பின் புதுசாய் வாங்கிக் கொள்ளலாம்...' என்று, நினைத்து, பெட்டியிலிருந்த கடிதங்களை எடுத்து பார்த்தாள். கட்டுகட்டாய் கடிதங்கள்... அம்மாவும் - அப்பாவும் எழுதிக் கொண்டது.'என்ன ஆச்சு, இந்த மனுஷனுக்கு' என்று, சிவராமனையே வெறித்து பார்த்த கோமதி, 'இத்தனை நேரமாயும் இடி விழுந்தது போன்ற செய்தியைக் கேட்டும் அமைதியாக இருந்தவர், இப்போது, கறுப்பு பெட்டியை, லதா விட்டு போனதற்கு ஏன் இப்படி நொறுங்கிப் போனது போல் உட்கார்ந்திருக்கிறார்...' என யோசித்தவளுக்கு, அதற்கான காரணம் சத்தியமாக அவளுக்கு உறைக்கவில்லை.என்றோ எழுதிய, அந்த கடிதங்களை சிவராமன் இன்னும் மறக்கவில்லை. இப்போது கேட்டாலும், அப்படியே அதை, மனப்பாடமாக ஒப்புவிப்பார். கல்லூரி படிப்பு முடிந்து, தபால் ஆபீசில், குமாஸ்தாவாக அவர் வேலைக்கு சேர்ந்த போது தான், அவருடைய பக்கத்து வீட்டுக்கு, கோமதியின் குடும்பம் குடி வந்தது. முதல் பார்வையில், சாதாரணமாகத் தான் தெரிந்தாள் கோமதி. பார்க்க, பேச, பழக வாய்ப்பு கிடைத்த பின் தான், சிவராமன் கண்களுக்கு அவள் பேரழகியாகத் தெரிந்தாள். மணந்தால், அவளைத் தான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர், அவள் மனதில் இடம்பிடிக்க காதல் கடிதம் எழுதிக் கொடுத்தார். அவள் பதில் ஏதும் சொல்லவில்லை என்றதும், மறுபடியும் கடிதம் எழுதினார். அதற்கும் மவுனமாக இருக்கவே, கடிதங்களை எழுதிக் கொட்டவே, 'போஸ்ட் ஆபீசில் வேலை பார்த்தா, இப்படியா லெட்டரா போடுவீங்க' என்று ஒரு முறை கோபப்பட்டாள். அதுவும், அவருக்கு அழகாகவே தெரிந்தது.ஒரு வழியாக, அவளும் ஒரு கடிதம் எழுதினாள். ஆனால், அது அவரது கையில் கிடைக்கும் போது, அவள் வீட்டில் இல்லை. தான் இன்னொருவரை விரும்புவதாகவும், வீட்டில் சம்மதிக்காததால், வீட்டை விட்டு அவருடன் ஓடுவதாகவும் அதில் எழுதியிருந்தாள். சொன்ன மாதிரியே ஓடி விட்டாள்.நொறுங்கி போனார் சிவராமன். அந்த அளவிற்கு, அவள் மீது காதல் வைத்திருந்தார். அவள் இல்லாத நிலையில், பைத்தியம் போல் சுற்றினார். வேலையில் கவனம் செல்லவில்லை. பசி, தூக்கம் போச்சு. அவருடைய பெற்றோருக்கு விஷயம் தெரிந்து,'ஏண்டா... அவளுக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக, எங்களிடம் சொல்லியிருந்தால், நாங்க பேசி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைத்திருப்போமே...' என்று, அதை இதைப் பேசி, அவர் மனசை மாற்றி, வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க, அவர்கள் எவ்வளவோ முயன்றனர். அவர் ஒத்துக் கொள்ளவில்லை.'எனக்கு, ஒரே காதலி தான், அவளை திருமணம் செய்யவில்லை என்றால், இனி காலம் முழுக்க எனக்கு திருமணமே கிடையாது...' என்று, உறுதியாக சொல்லி விட்டார்.சிவராமனுக்கு நல்ல வேலையும், சம்பளமும் இருந்ததால், பல இடங்களில் இருந்து, அவருக்கு பெண் கொடுக்க ஆசைப்பட்டு அணுகினர். ஆனால், கோமதியை மறக்க முடியாமல் எதற்கும் சம்மதிக்கவில்லை.இப்படியே ஒரு வருடம் சென்றது. திடீர் என்று ஒருநாள், பக்கத்து வீட்டில் சப்தம் அதிகமாய் கேட்டது. கோமதி திரும்பி வந்திருந்தாள்... கையில் ஒரு மாத கைக்குழந்தை... 'ஏண்டி... திரும்பி வந்த ஓடுகாலி. எங்க மானத்தை வாங்கிட்டியேடி... இப்ப எங்க உயிரை வாங்கவா வந்தே...'அவர்கள் அவளை திட்டுவதும், கோமதி அழுவதும் கேட்டது. அந்த சண்டையில் குழந்தை பயந்து, 'வீல்... வீல்' என்று கத்தியது. கோமதியின், காதலன் ரகுவிற்கு, அவள் மீதான மோகம் தீர்ந்ததும், அவள் மீது கோபப்பட ஆரம்பித்திருக்கிறான். வேலைக்கும் போவதில்லை. குடிபழக்கம் வேறு... இந்நிலையில் செலவுக்கு வழி இன்றி, அவளுடைய நகைகளை விற்று காலி செய்து விட்டான். தினமும் குடித்து விட்டு, அவளுடன் சண்டை போட, வீட்டை காலி செய்யும்படி, வீட்டு ஓனர் சொல்லி விட்டார். அவளுக்கு, ஒரு பெண் குழந்தையை கொடுத்த காதலன், திடீர் என சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விட்டானாம். வேறு வழியில்லாமல், பெத்தவங்க வீட்டிற்கே திரும்பி வந்து விட்டாள் கோமதி. இதையெல்லாம், அம்மா, சிவராமனிடம் சொன்ன போது, அவருக்கு, அன்று புதிதாய் பிறந்ததைப் போலிருந்தது.அவருடைய திருமண பேச்சை மறுபடியும் எடுத்த போது, கோமதியை கட்டிக் கொள்வதாக சொன்னார் சிவராமன்.'உனக்கு புத்தி கெட்டுப்போச்சா...' என்று, திட்டினாள் அம்மா.ஆனால், அப்பா தான், அவருக்கு ஆதரவாக இருந்தார். எப்படியாவது மகனுக்கு திருமணம் ஆனால் சரி என்று நினைத்தார். அவருடைய ஆசைக்கு ஏற்ற மாதிரி, கோமதி, அவருக்கு மனைவியாக வந்தாள். முதல் இரவிலேயே, அவரிடம் முதல் விஷயமாக அதை சொன்னாள் கோமதி.'என் மகள் லதா, நம் வாழ்க்கைக்கு தடையாக இருக்கக் கூடாது. அவளை ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுவோம்'என்றாள்.அதற்கு, அவர் அப்படி கோபப்படுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை... 'இவள் நம் மகள் லதா. இனி யார் கேட்டாலும், அப்படித் தான் சொல்லணும். உண்மை யாருக்கும், எப்போதும் தெரியக் கூடாது. குறிப்பாக லதாவுக்கு, நான் அவள் அப்பா இல்லை என்பது, எப்போதும் தெரியக் கூடாது. இந்த உண்மை, ஒரு வேளை அவளுக்கு தெரிந்தால், அந்த நிமிடமே நான் செத்துப் போவேன்...' என்றார் சிவராமன்.நம்ப முடியவில்லை கோமதியால். இப்படியும், ஒரு மனிதனா! இவ்வளவு காதலா, தன் மீது வைத்திருக்கிறார். இவரையா நாம் புரிந்து கொள்ளாமல் போனோம் என்று, கண்கள் கலங்கியபடி, அவரை அணைத்துக் கொண்டாள்.'அப்பா...' என்று, தன்னை அறியாமல் கத்தி விட்டாள் லதா. ஓடும் ரயிலில் யாருக்கும், அது கேட்கவில்லை. அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் மழையாய் கொட்டியது; தொண்டைக் குழிக்குள் ஏதோ அடைத்தது; நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. அப்பாவுடைய முகம் நினைவுக்கு வர, அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தான் யார் என்று தெரிந்தும், ஒரு நாள் கூட அதை சொல்லிக் காட்டாமல், தன்னை தன் சொந்த மகள் போல் உயிராய் வளர்த்த, அப்பாவை நினைத்து, துடித்துப் போனாள்... 'எனக்கு உண்மை தெரிந்தால், நீ செத்துப் போவீயாப்பா? வேண்டாம்ப்பா எனக்கு எந்த உண்மையும் தெரியல. நான் வரேன்ப்பா. நீங்க தான் என்னுடைய அப்பா, நான் உங்க கிட்ட திரும்பி வந்துட்டு தான் இருக்கிறேன். அப்பா, உங்களைப் பார்க்கணும் போல் இருக்குதுப்பா... உங்ககிட்ட பேசணும் போல் இருக்குப்பா... நான் வர்றேன் அப்பா...' அவளுடைய விசும்பலை கேட்டு, எழுந்தான் பிரபாகரன்.''தூங்கல!'' என்றான்.''விழிச்சுக்கிட்டேன்.''''இங்கே ஏன் இறங்கப் போற... இது, காட்பாடி தான். பெங்களூரு இன்னும் வரல,'' என்றான்.''இல்லைங்க.... நான் வீட்டுக்கு திரும்ப போறேன். எங்க அப்பாவை பார்க்கணும் போல இருக்கு...'' என்று அழுதாள் லதா.''சரி அழாதே தாயி... நானும் வர்றேன்,'' என்று அவளுடைய தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான் பிரபாகரன். *** அப்சல்