உள்ளூர் செய்திகள்

நான் சுவாசிக்கும் சிவாஜி (8) - ஒய்.ஜி.மகேந்திரா

கடந்த 1977ல், தமிழகத்தில், வெள்ள நிவாரண நிதிக்காக, சினிமா கலைஞர்களின் கலை விழா, சிவாஜி தலைமையில் நடத்தப் பட்டது. அந்நிகழ்ச்சியில், அசோக சக்ரவர்த்தியாக சிவாஜி மேடையில் நடிக்கும் போது, மேடைக்குள்ளேயிருந்து விஜயகுமாரியும், மேஜரும் மற்ற கதாபாத்திரங்களுக்குரிய குரலைக் கொடுப்பர். சிவாஜி மேடையில் நடிக்கும் போது, நடித்துக் கொண்டே, மேடையின் முன்புறம் வருவார். அவர் பேசுவது, மைக்கில் பதிவாகி, கடைசி ரசிகர் வரை, தெளிவாக கேட்க வேண்டும் என்பதில், கவனமாக இருப்பார்.நாடகத்தில், சில சமயம், மூன்று நிமிடம், 'மோனோ ஆக்டிங்' செய்கிறேன் என்றால், அது இவரிடம் பெற்ற பயிற்சி தான் காரணம்.கலை நிகழ்ச்சிக்காக ஒரு ஊரிலிருந்து, அடுத்த நகரத்திற்கு, சிவாஜி உட்பட, அனைத்து கலைஞர்களும் ஒன்றாக பஸ்சில் பயணம் செய்வோம். அப்போது, சிவாஜி, முந்தைய நாள் நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்வதோடு, தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும், நிகழ்ச்சியை எப்படி இன்னும் சுவாரசியமாக செய்யலாம் என்றும் ஆலோசனை சொல்வார். முதல் நாள் நிகழ்ச்சியில், நாகேஷ், பாரதியாராக உணர்ச்சி பொங்க, 'மோனோ ஆக்டிங்' செய்தார். அடுத்த நாள் பஸ்சில் செல்லும் போது, சிவாஜி, நாகேஷிடம் மிக நாசூக்காக, 'நீ நடித்ததில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், மக்கள் உன்னிடம் எதிர்பார்ப்பது நகைச்சுவையை தான். அதனால், தயவு செய்து, ஜூனியர் பாலையாவுடன் சேர்ந்து, ஒரு காமெடி பீஸ், 'செட்-அப்' பண்ணுங்க...' என்றார். அதன்படியே நாகேஷும் செய்தார். சிவாஜி சொன்னது போலவே, மறுநாள் நடந்த நிகழ்ச்சியில், மக்களின் சிரிப்பொலி விண்ணைப் பிளந்ததுகடைசி நாள் நிகழ்ச்சிக்கு, எம்.ஜி.ஆர்., வந்திருந்து, நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். 'அண்ணன்' என்று, மிகவும் மரியாதையோடு, அவரை அழைப்பார் சிவாஜி. சிவாஜியின் சிறந்த நடிப்பையும், மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து செய்த சேவையையும், மனதார பாராட்டினார் எம்.ஜி.ஆர்., கலை நிகழ்ச்சிக்காக, நாங்கள் சென்ற, அந்த நான்கு நாட்களும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், இனி கிடைக்கப் போவதில்லை. அவை, என்றுமே மறக்க முடியாத நாட்கள். சென்னையில் இருந்து கிளம்பியதிலிருந்து, திரும்ப, சென்னை வந்து சேரும் வரை, சிவாஜி ஒரு தலைவராக, தன்னுடன் வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் வராமல், அனைவரும் தங்கள் கலைத் திறனால், மக்களை ரசிக்க வைத்து, பத்திரமாக திரும்ப வேண்டும் என்பதற்கு, எல்லா முயற்சியையும் எடுத்துக் கொண்டார்.'நான் சுவாசிக்கும் சிவாஜி' தொடர் கட்டுரையை, தினமலர் - வாரமலர் இதழில் படித்து ரசித்த, நடிகை லட்சுமி, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தவர், சிவாஜியுடன், தனக்கு ஏற்பட்ட, சில சுவையான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமாவதற்கு முன், யு.ஏ.ஏ.வின், 'கண்ணன் வந்தான்' நாடகத்தில், லட்சுமி நடித்திருக்கிறார். அப்போது, நாங்கள், நேரம் கிடைக்கும் போது, சிவாஜியைப் பற்றித் தான் பேசுவோம். பிற்காலத்தில், நாங்கள் இருவரும், அவரோடு சேர்ந்து இவ்வளவு படங்கள் நடிப்போம் என்று அப்போது நினைத்துக் கூட பார்த்ததில்லை. சிவாஜிக்கு மகளாக, சகோதரியாக, காதலியாக, மனைவியாக பல பாத்திரங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி.தங்கைக்காக படத்தில், லட்சுமிக்கு இரட்டை வேடம். ஒரு நாள், படப்பிடிப்பில், சிவாஜி, 'என்னம்மா நீ, டாம் பாய் மாதிரி நடக்குற... இன்னும் நளினம் வேண்டும்...' என்றார். 'நீங்க நடந்து காட்டுங்கள்; நான், 'பாலோ' பண்றேன்...' என்றார் லட்சுமி. மேக்-அப் மேனிடமிருந்து, டவலை வாங்கி, அதை, மேலாக்கு மாதிரி போட்டு, பதினாறு வயது பெண், காதலி மற்றும் குடும்பப் பெண் போன்ற, மூன்று நிலையில் இருக்கும் பெண்கள் எப்படி நடப்பர் என்று நடந்து காண்பித்தார். பெண்களுக்கு கூட அவ்வளவு நளினம் வராது. அவ்வளவு அழகாக நடந்து காண்பித்தார்.'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அன்றிலிருந்து, என் நடையை, முழுவதுமாக மாற்றிக் கொண்டேன்...' என்று, பெருமையாக கூறினார் லட்சுமி.... ஏ.எஸ்., பிரகாசம் இயக்கத்தில் வந்த, சாதனை படத்தில், சிவாஜி, திரைப்பட இயக்குனர் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் படப்பிடிப்பில், மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது... ஊட்டியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, எனக்கு இரண்டாவது குழந்தை, பிறந்திருக்கிறது என்ற, செய்தி வந்தது. இந்தச் செய்தியை, சிவாஜியுடன் பகிர்ந்து கொண்டேன். என்னை வாழ்த்தியவர், கூடவே, 'மடையா, இன்னும், இங்கே என்ன செய்துக்கிட்டு இருக்கே... இப்போ, நீ, சுதா பக்கத்தில இருக்கணும்; உடனே, சென்னைக்கு புறப்படு. உன்னுடைய காட்சிகளை அப்புறம் எடுத்துக்கலாம்...' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பிரகாசத்திடம் சொல்லி, விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தார். சிவாஜி எப்போதுமே, குடும்ப பாசத்திற்கு, முன்னுரிமை கொடுப்பார்.சாதனை படத்தில், எனக்கு,உதவி இயக்குனர் கதாப்பாத்திரம். இப்படத்தில், அனார்கலியாக நடித்த புவனா என்ற நடிகைக்கு, வெட்கப்பட்டு நடப்பது எப்படி என்று, சிவாஜி சொல்லிக் கொடுத்தார். படப்பிடிப்பிலிருந்த அனைவரும், இதைப் பார்த்து, கை தட்டி ரசித்தனர். திரை அரங்குகளில், அந்த காட்சிக்கு, கை தட்டல், விசில் என்று துாள் கிளம்பும்.தமிழ்த் திரை உலகின், முதல் சினிமாஸ்கோப் படம், ராஜ ராஜ சோழன். அதில், ராஜராஜ சோழனின் மகள் குந்தவியாக லட்சுமி நடித்திருப்பார். சரித்திர கதை என்பதால், நிறைய காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் எல்லாம் அணிய வேண்டும்.ராஜா, ராணி கதைகளுக்கு, கம்பீரம் தருவதே இந்த உடை அலங்காரங்கள் தான். அந்த, கெட்- அப்பில் இருக்கும் போது தான், அந்த கம்பீர உணர்வு கிடைக்கும். படப்பிடிப்பின் இடைவேளையின் போது, சாதாரண நாற்காலியில் உட்கார்ந்தால், உடைகள் கசங்கி விடும். எனவே, ஸ்டூல் போட்டு, அதன் மேல், பக்குவமாக உட்கார வேண்டும்.'மதியம் சாப்பிடும் போது, ஒட்டியாணத்தை மட்டும் கழற்றி விட்டு சாப்பிடு. ராணி உடைகளை களைந்து விடாதே... ஆடையை மாற்றும் போது, குந்தவியாக நடிக்கும், 'கான்ஸென்ட்ரேஷன்' போய் விடும்...' என்று கூறிய சிவாஜி, 'நாம், சில நாட்களுக்குத் தான், ராஜ ராஜ சோழன் மற்றும் குந்தவியாக நடிக்கிறோம். இந்த உடையையே வாழ்க்கை முழுவதும் அணிந்திருந்த, ஒரிஜினல் ராஜராஜ சோழன், குந்தவி போன்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர்... இம்மாதிரி பாத்திரங்களில் நடிக்கும் போது, கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது...' என்றும், லட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளார் சிவாஜி.சிவாஜி, காலையில் மேக்-அப் போட்டு, அரசர் உடைகளை அணிந்தால், அன்றைய, படப்பிடிப்பு முடியும் வரை, அந்த உடைகளை கழற்ற மாட்டார்.நடிப்பு பற்றிய புத்தகங்களில், பாத்திரங்களோடு ஒன்றிப் போவதைப் பற்றி, பல நுணுக்கங்களை குறிப்பிட்டிருப்பர். இவர் அவற்றையெல்லாம் எங்கே படித்தார்... எனக்கு வியப்பாக இருக்கிறது.- தொடரும்.எஸ்.ரஜத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !