உள்ளூர் செய்திகள்

மரகத தீவில் ஆறு நாட்கள்! (2)

அதிகம் கேரளாவையும், கொஞ்சம் தமிழகத்தையும் இணைத்து, செய்த கலவை போல காட்சியளிக்கிறது இலங்கை. மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கம், மக்களின் தோற்றம், நிறம் போன்றவை, சற்றேறக்குறைய தமிழகம் மற்றும் தென் மாநில நகரங்களைப் போலவே உள்ளது.சாலைகள் மிக நேர்த்தியாக உள்ளன. நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, கிராம சாலைகள் கூட, தரமாக இருக்கின்றன. சாலைகளின் அடையாள குறிகள், பலகைகள் குறிப்பிட்ட துாரங்களில், ஒழுங்குற அமைக்கப் பட்டுள்ளன.நம் ஊர்களில் ஓடும், 'அசோக் லேலண்ட்' பஸ்கள் அங்கே, 'லங்கா அசோக் லேலண்ட்' என்ற பெயரில், அதிகமாக ஓடுகின்றன. ஆட்டோக்களில், 'பஜாஜ் மற்றும் டி.வி.எஸ்.,' தான் எங்கும். கார்களில், அனைத்து இந்திய ரகங்களும் மட்டுமல்லாமல், வெளிநாட்டு ரகங்களையும் காண முடிகிறது.இலங்கையின் தலைநகர் கொழும்பு, திரிகோணமலை, கண்டி போன்ற பல நகரங்களுக்கும் சுற்றி வந்த என் கண்ணில், லாரிகள் தென்படவே இல்லை; சரக்குகளை ஏற்ற, 'மினி வேன்'களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவைப் போல, இரு சக்கர வாகனங்கள் ஏராளம்.நம் நாட்டு வாகனங்களின், நம்பர் பிளேட்டில், மாநிலத்தின் பெயரை குறிப்பிடும் இரண்டு எழுத்துகள் மற்றும் நான்கு எண்கள் மட்டும் தான் இருக்கும். ஆனால், அங்கு, ஒன்பது மாகாணங்களின், ஏதாவது ஒரு மாகாணத்தின் ஆங்கில பெயரின் முதல் எழுத்து, பயணியர் பயன்பாட்டு வாகனமா, தனியார் பயன்பாட்டு வாகனமா என்ற ஆங்கில எழுத்து குறியீடு, நம்பர் பிளேட்டில் நான்கு எண்களும், எழுத்துகளாகவும் உள்ளன.தமிழகத்தில், லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு லாட்டரி சீட்டு விற்பனை, எல்லா இடங்களிலும் காண முடிகிறது. நம் ஊரின், 100 ரூபாய்க்கு, ஸ்ரீலங்கன் கரன்சியில், 215 ரூபாய். ஆனால், அமெரிக்க டாலர் கரன்சியின் மதிப்பை கேட்டால், தலை சுற்றும். 1,000 ஸ்ரீலங்கன் ரூபாய் கொடுத்தால், 6.25 டாலர் கரன்சி தான் கிடைக்கும்; அமெரிக்க டாலருக்கு மதிப்பு, மிக மிக அதிகம்.அதனால், பண மதிப்பு அதிகமுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணியருக்கு, இலங்கை ஒரு சொர்க்கம். கொஞ்ச பணத்தை எடுத்து வந்து, ஒரு மாதம் கூட, இன்ப சுற்றுலாவை இலங்கையில் அவர்களால் மேற்கொள்ள முடியும். இதனால், ஏராளமான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களை அங்கு காண முடிகிறது. ஆனால், மருந்துக்குக் கூட, ஆப்ரிக்கர்களை காணவில்லை.சரக்கொன்றை மலர்களை, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமாக காணலாம். சரம் சரமாக, மஞ்சள் நிற மலர்களை உடைய சரக்கொன்றை, வீடுகள், சாலைகளை அழகுபடுத்துகின்றன.சாதாரண வீடுகள் மட்டுமின்றி, பணக்காரர்கள் வீடுகளிலும், மண் பாண்டங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மீன் மற்றும் கோழி இறைச்சியை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில், மாடுகளை வெட்டி சாப்பிடுவது குறைவு.உலகிற்கு அமைதியை போதித்த புத்தரை, வணங்கும் நாடு என்பதால், ஆடுகளை கொன்று சாப்பிடும் பழக்கமும் அதிகம் இல்லை என, எங்களை அழைத்துச் சென்ற, வழிகாட்டி கூறினார்.அனைத்து காய்கறிகளும், நம் ஊர் போலவே தான். வாழைப்பழங்களும் அப்படியே. பலாப்பழங்கள் ஏராளமாக கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சுளையாக எடுத்து விற்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பழத்தை நேராக இரு பாகங்களாக வெட்டி விற்கின்றனர்.குழந்தை பேறு இல்லாதவர்கள் சாப்பிட்டால், பலன் கிடைக்கும் என நம்பப்படும், ஊட்டி, கொடைக்கானலில் முன்பதிவு செய்யப்படும், துரியன் பழம், அங்கு, ஏராளமாக விளைகிறது; 100 ரூபாய்க்கு, நடுத்தர அளவுள்ள பழம் கிடைக்கிறது.நம் ஊரில் மாம்பழங்கள், மஞ்சள் நிறத்தில் தான் அனேகமாக கிடைக்கும். ஆனால், அங்கு, பச்சை நிறத்தில் தான் அதிகம் காணப்படுகின்றன. பச்சையாக இருந்தாலும், நன்றாக பழுத்து, ருசியில், நம் ஊர் மஞ்சள் நிற பழங்களை தோற்கடிக்கின்றன.நம் ஊரில், இளநீர், பச்சை நிறத்தில் அதிகம் கிடைப்பது போல, அங்கு, செவ்விளநீர் எனப்படும், லேசான மஞ்சள் நிற இளநீர், அதிகம் விற்கப்படுகிறது. ஆனால், அதன் விலையோ, 'அடேங்கப்பா...' என, வாயை பிளக்க வைக்கும். ஒரு இளநீர் விலை, நம்மூர் கரன்சி மதிப்பில், 100 ரூபாய்!கோழி முட்டையில் தயாரிக்கப்படும், 'ஆம்லெட்' கோழி விலைக்கு விற்கப்படுகிறது. ஆம்... சாதாரண கடைகளில் கூட, ஒரு ஆம்லெட், 250 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அங்கு, பிராய்லர் முட்டை அதிகம் உற்பத்தியாவதில்லையாம். நாட்டுக் கோழி முட்டை தான் அதிகம் என்பதால், விலையும் அதிகம்.சிங்களமும், தமிழும் தேசிய மொழிகள் என்பதால், 'டிவி'களில், தமிழ் நிகழ்ச்சிகளை தாராளமாக காண முடிகிறது. தமிழகத்தில் தெரியும் அனைத்து, முன்னணி சேனல்களும், இலங்கையின் அனைத்து நகரங்களிலும் தெளிவாக தெரிகின்றன.சுற்றுலாவுக்காக, ஒவ்வொரு வாய்ப்பையும் அருமையாக பயன்படுத்துகின்றனர், இலங்கை மக்கள். நம் ஊரில் ஏராளமான குளங்களும், ஏரிகளும் சும்மா கிடக்கின்றன. ஆனால், அங்கு, தண்ணீர் ததும்பும் ஏரிக்கரையோரம், ஓட்டல் அமைத்து, வெளிநாட்டுக்காரர்களுக்கு பிடித்தமான இருக்கை வசதிகளை செய்து, கவர்ந்து இழுக்கின்றனர்.தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல நகரங்களில் அத்துமீறி நடந்து வரும், செயின் பறிப்பு குற்றங்கள், அங்கு அறவே கிடையாது என்பதை, பலரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். நம்மூர் பெண்கள் போல, கழுத்தில் ஏராளமாக நகை அணியும் பழக்கமும், அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு போன்ற குற்றங்கள் அறவே கிடையாது என்பதை அறிந்த போது, நிம்மதியாக இருந்தது.— தொடரும்.வித்தியாசமான, 'சைடு டிஷ்!'தமிழகத்தில், 'டாஸ்மாக்' மதுபான கடைகள் முன், கூட்டம் முண்டியடிப்பது போல, அங்கு இல்லை. நகரங்களில் மட்டுமே, தெருவுக்கு தெரு, 'மதுபான கடை' என, பச்சை நிற பலகையுடன் காட்சியளிக்கின்றன. உள்நாட்டு சாராயம், விலை மிக மலிவு. அந்நாட்டு ரூபாய், 350க்கு, 'ஹாப்' எனப்படும், 375 மி.லி., சாராயம் கிடைக்கிறது.'அறிவியல்பூர்வமாக, பல முறை வடிகட்டி, சுத்திகரிக்கப்பட்டது' என, எழுதப்பட்டுள்ளது. கடைகளில் அந்த பாட்டில்களை வாங்கிச் செல்வோர், 'சைடு டிஷ்' ஆக தொட்டுக் கொள்ள, அருகில் உள்ள கடைகளில் விற்கப்படும் மசாலா பூண்டை வாங்கிச் செல்கின்றனர். பெரிதாக உள்ள மலைப்பூண்டை ஒவ்வொன்றாக பிரித்து, உப்பு, காரம் சேர்த்த தண்ணீரில் வேக வைத்து, கிராம் கணக்கில் கொடுக்கின்றனர். 50 ரூபாய்க்கு வாங்கினால், இரண்டு, மூன்று பேரின், 'சைடு டிஷ்' தேவை பூர்த்தியாகும்.சிறிய ஓட்டல்களில் கூட, 'தால் சூப்' என்ற பெயரில், பருப்பு தண்ணீர் கொடுக்கின்றனர். பருப்புடன், வெங்காயம், தேங்காய், சீரகம், உப்பு சேர்த்து வேக வைத்த, கொதிக்கும் தண்ணீர் தான் இது; அருந்த, அருமையாக உள்ளது.விலைமதிப்பு மிக்க கற்கள்!அனுராதபுரம் பகுதிகளில், பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி, விலை மதிப்புமிக்க கற்களை எடுப்பது, காலம் காலமாக பெரிய அளவிலான தொழிலாக நடக்கிறது. கற்கள் கிடைக்கும் என அறியப்படும் இடத்தில், குழி தோண்டி, அதிகபட்சம், 10 - 15 மீட்டர் ஆழம் வரை செல்கின்றனர். பக்கவாட்டில் பறிக்கப்படும் மண்ணுடன் வண்ண கற்கள் கிடைக்கின்றன.அதை, வைரத்தை போல, 'பாலிஷ்' செய்து, பிரமாண்டமான, 'ஷோ ரூம்'களில் விற்கின்றனர். ஒரு காரட் மரகதம், நம் ரூபாய் மதிப்பில், 7,000 - 8,000 ரூபாய் வரை கிடைக்கிறது.அதுபோல, 'ஸ்பைஸ் டூர்' என்ற பெயரில், நறுமண பொருட்கள் விளையும் இடங்களுக்கு, சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்கின்றனர். இஞ்சி, ஏலக்காய், மஞ்சள், மிளகு, லவங்கம், கிராம்பு போன்றவை விளையும் விதங்களை காட்டி, அவற்றின் மருத்துவ குணங்களை விளக்கி, அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். ஏ.மீனாட்சிசுந்தரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !