அணில் நடத்திய பாடம்!
பொறுமை, அனைவருக்கும் தேவை. கடைப்பிடித்தவர்கள், அதாவது, அனுபவத்தில் கொண்டு வந்தவர்கள் உயர்கின்றனர்; மகான்களாக மாறுகின்றனர்.இளவரசராக இருந்த ஒருவர், வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் தவம் செய்யப் போனார். பல நாட்கள் முயற்சி செய்தும், அவருக்கு உண்மை புலப்படவில்லை. ஆகவே, மனம் உடைந்துபோனவர், அரண்மனை திரும்ப எண்ணினார்.அப்போது குளக்கரையில் இருந்த ஓர் அணில், தன் வாலைக் குளத்து நீரில் நனைத்து, அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீர்த்துளிகளைக் கரையில் உதிர்த்துக் கொண்டிருந்ததை பார்த்தார், இளவரசர்.அணிலின் செய்கை, இளவரசருக்கு விசித்திரமாக இருந்தது. உடனே, அணிலை நெருங்கி, 'அணிலே... ஏன் இப்படிச் செய்கிறாய்?' எனக் கேட்டார்.'இந்தக் குளத்தை, வற்றிப் போகும்படி செய்யப் போகிறேன். அதற்காகத் தான் இப்படிச் செய்கிறேன்...' என்றது, அணில்.அதைக்கேட்ட இளவரசர், 'அணிலே, நீ என்ன சொல்கிறாய்... நீ கோடி முறை இப்படிச் செய்தாலும் குளத்தை வற்றச் செய்ய முடியாதே... ஏன் வீண் வேலை செய்கிறாய்?' என்றார். 'அதற்காக, நான் முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா என்ன? விடா முயற்சியுடன் பொறுமையாக முயன்றால் தானே, முடியுமா, முடியாதா என்பது தெரியும்...' என்று பதில் சொன்னது, அணில். தெளிவு பெற்றார், இளவரசர்.'அணில் விடாமுயற்சியுடன் பொறுமையாக முயற்சி செய்கிறது. நாமோ, சிறிதளவு முயற்சி செய்து, பொறுமையிழந்து திரும்பிப் போக நினைக்கிறோமே... பொறுமையுடன் இன்னும் முயற்சி செய்து பார்ப்போம். உண்மை புலப்படும்...' என்றபடியே, திரும்பி மறுபடியும் தவத்தை தொடர்ந்தார், இளவரசர். இளவரசரின் பொறுமையும், விடாமுயற்சியும் பலனளித்தது; வெற்றி பெற்றார்; வாழ்க்கையின் உண்மை புரிந்தது. வெற்றி பெற்றவர் தான், கவுதம புத்தர். ஓர் அணிலிடம் இருந்து பாடம் கற்று, அதன்படிச் செயல்பட்டதால், உயர்வு பெற்றார். நாமும் பொறுமையுடன் விடா முயற்சியோடு செயல்படுவோம். நினைத்ததை அடையலாம்.நம்மால் முடியாது என்று தட்டி கழித்தவைகளை, யாராவது செய்கின்றனர் அல்லவா... பிறகு நம்மால் ஏன் அதை செய்ய முடியாது?பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!நாமக்கட்டியை கரைத்து திருநீறு போல பூசிக் கொள்ளக் கூடாது. நாமம் தான் இட வேண்டும்.