உள்ளூர் செய்திகள்

டீச்சர்!

''ஹெல்மெட் போட்டுக்கோ... வண்டியை ஸ்டார்ட் பண்ணறதுக்கு முன், ஸ்டேண்டை எடுத்துடு...'' என்றாள் அம்மா. ''அம்மா... நீ டீச்சர் வேலையில இருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் டீச்சராவே இருக்கே. நான் எப்பவும் கரெக்டா இருப்பேன்னு உனக்கு தெரியாதா...'' கொஞ்சலாய் அம்மாவிடம் சொல்லி, வண்டியை எடுத்தாள்.மகள் ஸ்கூட்டியில் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த யசோதாவுக்கு, மகள் சொன்ன, 'எல்லாம் கரெக்டா செய்வேன்...' என்ற வார்த்தை மனதில் வந்து வருத்தியது.'உண்மை தான்; அவளின் கண்டிப்பு, வளைந்து போகாத தன்மை சமூகத்தில் அவளுக்கு நல்ல பேரை கொடுத்தாலும், மகளுக்கு என்று ஒரு வரன் அமைய மறுக்கிறதே... 'எதிர்பார்ப்பில்லாமல், எனக்காக திருமணம் செய்ய வரும் மாப்பிள்ளைக்குத்தான் கழுத்தை நீட்டுவேன்...' என்கிறாள். இது, இந்த காலத்தில் நடக்க கூடிய காரியமா...'இத்தனைக்கும் நான் தான் காரணம்; ஆரம்பத்திலிருந்து, நேர்மை, கண்டிப்பு என்று, இவள் மனதில் புகுத்தி வளர்த்ததில், இப்போது, அதுவே, அவளது வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறதோ...' என்று எண்ணியபடி வீட்டிற்குள் வந்தாள், யசோதா. 'நேற்று நடத்திய பாடத்தை இன்னைக்கு திரும்ப ஒரு முறை விளக்கமா சொல்லணும், நேத்தே நிறைய பேர் புரியாதது மாதிரி முழிச்சாங்க...' என்று எண்ணியபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள், பிருந்தா. பள்ளி அருகே செல்லும்போது, காம்பவுண்ட் சுவர் ஓரமாய், பள்ளிச் சீருடையுடன் ஒரு சிறுமியும், ஒரு பையனும் நின்றிருப்பது தெரிந்தது. பையன், இவள் கையில் ஏதோ திணிக்க முயற்சிக்க, சுற்று முற்றும் பார்த்து அதை வாங்க முயற்சித்தாள், அச்சிறுமி. வண்டியை ஓரமாய் நிறுத்தியவள், யார் என்று உற்றுப் பார்த்தாள். 'அட... இவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சாந்தியாச்சே...' என்று நினைத்தவள், ''சாந்தி...'' என்றாள் உரத்த குரலில்! அவள் குரலில் எதிரொலித்த கோபம், அந்த காலை நேர பரபரப்பிலும், அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த பாதசாரிகளையும், மாணவ - மாணவியரையும் திரும்பி பார்க்க வைத்தது.அவள் அருகில் நின்றிருந்த சிறுவனோ பிருந்தாவின் குரலைக் கேட்டதும் ஓடி விட்டான். பயந்தபடி மெல்ல பிருந்தாவின் அருகில் வந்தாள், சாந்தி.''யார் அவன்... இங்க என்ன பண்ணிட்டு இருக்கே... கையிலே என்ன...'' என்றாள், கோபமாய்!''எங்க சொந்தக்காரங்க, மிஸ்...'' என்று தயங்கித் தயங்கி, சொன்னவளின் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி பார்த்தாள். கசங்கிய பேப்பரில் கவிதை என்ற பெயரில் அவளை வர்ணித்து எழுதப்பட்டிருந்தது.'பளார்' என்று சாந்தியின் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை விட்டாள், பிருந்தா. அங்கிருந்த அத்தனை பேரும், அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தபடி நின்றனர்.கன்னத்தில் விழுந்த அறையில் பொறி கலங்கிய அந்த மாணவி, கண்களில் கண்ணீர் வழிய நின்றாள்.''இப்ப கிளாசுக்கு போ... அப்புறமா என்னை வந்து பாரு...'' என்று சொல்லி, ஸ்கூட்டியை கிளப்பி, பள்ளிக்குள் நுழைந்தாள்.வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது, தலைமையாசிரியர் கூப்பிடுவதாக அலுவலக உதவியாளர் கூப்பிட்டார். தலைமையாசிரியர் அறையில், நான்கைந்து மாணவர்களும், சில இளைஞர்களும் நின்றிருந்தனர். அவர்களை கேள்விக்குறியுடன் பார்த்தபடி, தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தாள், பிருந்தா. ''வாங்க டீச்சர்... நீங்க ஒரு ஸ்டூடண்ட்டை எல்லார் முன்னாடியும் அடிச்சுட்டீங்கன்னும் அதுக்காக, இவங்க எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேக்கணும்ன்னு சொல்றாங்க...'' என்றார், தலைமையாசிரியர்.இளநகை புரிந்து, ''அது சரி சார்... இவங்க நம்ம பசங்க; இவங்க கூட இருக்கறவங்க யாரு?'' என்று கேட்டாள், பிருந்தா.''அவங்க ஏதோ ஓர் அமைப்பை சேர்ந்தவங்களாம்.''''சரி... அவங்களுக்கு இங்க என்ன வேலை?''''இங்க பாருங்க டீச்சர்... நீங்க ஒரு ஸ்டூடண்ட்டை பொது இடத்தில் வச்சு அடிச்சிருக்கீங்க... நாங்க அதை தட்டிக் கேக்கறதுக்கு வந்திருக்கோம்,'' என்றான், கூட்டத்தில் ஒருவன்.''மன்னிக்கணும்... இது, ஆசிரியர் - மாணவி சம்பந்தப்பட்ட விஷயம்.'' ''எப்ப ரோட்டுக்கு வந்துடுச்சோ, அப்பவே, அது பொது விஷயமாயிடுச்சு,'' என்றான், அந்த இளைஞன்.தலைமையாசிரியர் ஏதோ பேச முயற்சிக்க, ''சார்... ஒரு நிமிஷம்...'' என்ற பிருந்தா, அவர்களை நோக்கி, ''மன்னிப்பு கேட்கலையின்னா...''''போராட்டம் பண்ணுவோம்.''அதற்குள், மாணவ - மாணவியரின் கூட்டம் பெரிதானது. அவர்களின் கூச்சல் கேட்டு, தலைமையாசிரியர் உட்பட அனைவரும் வெளியே வந்தனர்.தலைமையாசிரியருக்கு தர்மசங்கடமாகி விட்டது. அவருக்கு நன்றாக தெரியும்... 'அந்த மாணவி ஏதோ தவறு செய்திருக்கிறாள்... இல்லையென்றால், பிருந்தா டீச்சர் அப்படி நடந்திருக்க மாட்டாள்...' என்று!கூட்டம் சேரச் சேர, வந்திருந்தவர்களுக்கு உற்சாகம் வந்து விட்டது. ''பாத்தீங்கல்ல... எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுடுங்க... இல்லயின்னா இன்னும் பிரச்னை பெரிசாயிடும்,'' என்றான், அவர்களில் ஒருவன்.ஒரு நிமிடம் அவர்களையும், கூடியிருந்த மாணவ, மாணவியரையும் உற்று பார்த்தாள், பிருந்தா...மாணவ - மாணவியரின் முகத்தில் என்ன நடக்கிறது என்கிற ஆர்வம் மட்டுமே தெரிந்தது. இது போதும் இந்த கூட்டத்துக்கு, மேற்கொண்டு காய் நகர்த்த...ஏதோ பேச முயற்சித்த போது, ''கொஞ்சம் நில்லுங்கம்மா...'' என்ற குரல் கேட்டது.குரல் வந்த திசை நோக்கி கூட்டம் திரும்பி பார்க்க, 40 மற்றும் 30 வயது மதிக்கத்தகுந்த ஒரு தம்பதியர் நின்றிருந்தனர்.'நாங்கதான் நீங்க அடித்த பொண்ணோட பெற்றோர். எங்கள கொஞ்சம் பேச விடணும்...'கூட்டம் வழி விட, அவர்கள் படியேறி தலைமையாசிரியர் அறை முன் வந்தனர்.அங்குள்ள மாணவ - மாணவியர் கூட்டத்தை பார்த்து, கையெடுத்து கும்பிட்டு, 'முதல்ல இந்த பிரச்னைக்கு என் பொண்ணு காரணமாயிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறோம்...' என்று தலைமையாசிரிடமும், பிருந்தாவிடமும் கூறினர். ''குழந்தைகளே... நான், இதே பள்ளியில படித்தவன். இந்த டீச்சரோட அம்மா தான் எங்களுக்கு டீச்சரா இருந்தாங்க... கண்டிப்பு, ஒழுக்கம்ன்னு எங்களை கட்டுக்கோப்பா நடத்துனாங்க, அவங்களோட கண்டிப்பு தாங்காம படிப்பை விட்டுட்டு பாதியில ஓடிட்டேன். இப்ப, நானும், என் சம்சாரமும் ஒரு கடையில வேலை செய்யறோம்; ரொம்ப கஷ்டப்படுறோம். இந்த நிலைமை என் பொண்ணுக்கு வந்துடக்கூடாதுன்னு வாயை கட்டி, வயித்தை கட்டி படிக்க வைக்கிறோம்.''நான் செஞ்ச தப்பை என் பொண்ணு செஞ்சுடக் கூடாது; தயவு செய்து, இந்த டீச்சரோட கண்டிப்புலதான் என் பொண்ணு படிக்கணும்... தப்பு என் பொண்ணு பேர்லதான் இருக்குங்கறதை நாங்க வரும்போதே தெரிஞ்சுகிட்டோம்.''அதுக்காக தலைமையாசிரியர்கிட்டேயும், இந்த டீச்சர்கிட்டேயும் மன்னிப்பு கேட்கிறோம். தயவு செய்து என் பொண்ணை மன்னிச்சு, உங்களை மாதிரி பெரிய ஆளாக்கணும்ன்னு வேண்டிக்கறேன்...'' அந்த கூட்டத்தின் முன் கண்ணீர் விட்டு நின்றார், சாந்தியின் தந்தை. மாணவர்களுடன் நின்றிருந்த கூட்டம் சத்தமில்லாமல் வெளியேறியது. தாமோதரன்ஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !