உள்ளூர் செய்திகள்

கதவுகள் திறந்தன!

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், பிறகு தெய்வத்தை எவ்வாறு உணர்வது... நாமொன்று நினைக்க, அதைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் தெய்வம். என்ன, ஏது என்று உணர்வதற்குள் அடுத்தது வந்து, வேறு திசையில் அழைத்து போய் போடும்.என்ன, ஏது, எப்போது, எப்படி என்பவைகளை யாராலும் அறிய முடியாது. ஆழ்ந்த இறை பற்றும், அதனால் விளையும் அனுபவமுமே வழிகாட்டும்.மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலம், அது. நெடுஞ்செழியன் என்ற பாண்டியர், அரசாண்டு வந்தார். இவருடைய ஆட்சி காலத்தில், மதுரையில் இருந்த பராசரன் எனும் கல்விமான், சேரநாடு சென்று ஏராளமான வெகுமதிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.வரும் வழியில், திருத்தண்கால் எனும் ஊரை அடைந்தபோது, அங்கே சிறுவன் ஒருவன், மறைகளை முறைப்படி ஓதுவதை பார்த்தார், பராசரன். மகிழ்ச்சி தாங்கவில்லை அவருக்கு. உடனே சிறுவனை நெருங்கி, 'மறைகளை நீ மனம் பொருந்தி ஓதுவது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றை வைத்துக்கொள்...' என்று சொல்லி, தான் பெற்று வந்த வெகுமதிகளில் சிலவற்றை சிறுவனிடம் தந்து ஆசி கூறிச் சென்றார். சிறுவன் வேகமாக வீடுபோய், தான் பெற்ற வெகுமதிகளை, தன் தந்தை வார்த்திகனிடம் தந்து, நடந்தவற்றை சொன்னான். மகன் தந்தவை அனைத்தும் விலை உயர்ந்தவையாக இருந்தது கண்டு வியந்தார், வார்த்திகன். அதேசமயம், துர்க்கை கோவிலுக்கு சென்று, அம்பாளை வழிபட்டு வீடு திரும்பிய தாய், நடந்ததை அறிந்து மனமாற அம்பிகைக்கு நன்றி செலுத்தினாள்.அடுத்த வீட்டுக்காரர் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தால், அதைத்தாங்காத ஜீவன்கள் என்றும் உண்டு. வார்த்திகனின் அண்டை, அயலார் சும்மாயிருப்பரா...'விலை உயர்ந்தவைகளை வார்த்திகன் எங்கிருந்தோ, திருடி வந்து விட்டான்...' என்று, ஊர்க்காவலரிடம் புகார் செய்து, சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர்.சிறையில் அடைக்கப்பட்டார், வார்த்திகன். அவர் மனைவியோ, துயரத்தில் துடித்தாள்; வழி தெரியவில்லை அவளுக்கு. திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை.துர்க்கை கோவிலுக்கு போய், மூடியிருந்த வாசலில் நின்று, அம்பிகையிடம் முறையிட்டு அழுதாள், வார்த்திகனின் மனைவி.சற்று நேரத்தில் வந்த கோவில் நிர்வாகிகள், கோவிலைத் திறக்க முயன்றனர்; ஆனால், அவர்களால் கோவிலை திறக்க முடியவில்லை.இத்தகவலை, பாண்டிய மன்னரான நெடுஞ்செழியனுக்குத் தெரிவித்தனர்.மன்னர் வந்தார்; நடந்ததை அறிந்து, உண்மை உணர்ந்தார். வார்த்திகனைச் சிறையில் இருந்து விடுவித்தார். அது மட்டுமல்ல, 'ஊர்க்காவலர்கள் அறியாது செய்த தவறுக்கு, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்...' என, வேண்டினார். அதன்பிறகே கோவில் கதவுகளைத் திறக்க முடிந்தது; வழிபாடுகளும் நடந்தன.'தெய்வம் தேவையானவற்றை வழங்கும்; துயரம் வரும்போது, அதைத் துடைக்கவும் செய்யும்; திக்கற்றவர்க்கு தெய்வமே துணை...' என, விளக்கும் கதை இது. பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !