உள்ளூர் செய்திகள்

நான் கண்ட கனவு!

பத்து நாட்களுக்கு முன், 'ஆக்சிடென்டில்' இறந்து விட்டான், சுபத்ராவின் கணவன். இறந்த அன்று போயிருந்தாலும், கண்ணீர் சிந்தாமல், பிரமை பிடித்தவள் போல் சிலையாக அமர்ந்திருந்த, சுபத்ராவிற்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. ''இன்று, சுபத்ராவை பார்த்து, மன தைரியத்திற்கு நாலு வார்த்தை பேச வேண்டும். கிளம்பியாச்சா, போகலாமா?'' கேட்டாள், வனிதா. வங்கியில் ஒன்றாக வேலை பார்க்கும், 10 பேரும், ஆறுதல் சொல்ல, சுபத்ராவின் வீட்டிற்கு கிளம்பினர். சுபத்ராவிற்கு இரண்டு பெண், ஒரு ஆண் என, மூன்று பிள்ளைகள். பெரியவள், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு; அடுத்தவள், முதலாம் ஆண்டு; மகன், 9ம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.'கணவன் இல்லாமல் எப்படி சமாளிக்க போகிறாளோ, தவித்து கொண்டிருப்பவளை தேற்ற வேண்டும்...' என்றனர். ஹாலில் உட்கார்ந்து சின்ன மகளும், மகனும் எழுதிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும், வரவேற்றாள். பார்ப்பதற்கு சற்று தெளிவாக இருப்பது போல் தெரிந்தது. ''சுபத்ரா... வருத்தப்படாதே... பிள்ளைகளை நினைச்சு, மனசை சமாதானம் பண்ணிக்க... எங்களுக்கே மனசு ஆறலை... அன்னைக்கு உன்கிட்ட பேச முடியலை... அதான் இன்னைக்கு எல்லாரும் புறப்பட்டு வந்தோம்.''''சாகற வயசா அது... அந்த கடவுளுக்கு கண் இல்லாமல் போச்சே,'' குரல் கரகரக்க ஒருத்தி சொல்ல, அனைவரது கண்களிலும் கண்ணீர் முட்டியது. ஆனால், சுபத்ரா சிறிதும் கலங்காமல், இறந்த அன்று உட்கார்ந்திருந்ததை போல் இருப்பது, ஆச்சரியமாக இருந்தது. ''சரி... போனவர் போயிட்டாரு, அதையே நினைச்சு என்ன செய்ய முடியும்... அவர் இந்த உலகத்தில் வாழ வேண்டிய நாட்கள் முடிஞ்சிடுச்சு,'' என்ற சுபத்ரா, மகனிடம், ''ஹோம் ஒர்க் முடிச்சுட்டியா, சிவா... உள்ளே போய், 'டிவி'யில், 'கிரிக்கெட் மேட்ச்' பாரு... அபி, நீ கம்ப்யூட்டர் வகுப்புக்கு கிளம்பும்மா,'' என்றாள்.இருவரும் எழுந்து, உள்ளே சென்றனர். எங்கோ போய் வந்த பெரிய மகளிடம், ''ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தியா... சிவா கேட்டானே?'' துக்கம் நடந்த வீடு மாதிரி இல்லாமல், சகஜமாக இருப்பதை பார்க்கின்றனர்.''சொல்லுங்க... அப்புறம், இன்னும் ஒரு வாரத்தில் நான் வேலைக்கு வந்திடுவேன்,'' என்றதும், வந்தவர்களுக்கு, அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ''இருங்க, எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வரேன்,'' என, எழுந்தாள். 'அதெல்லாம் வேண்டாம்...' என, துக்க வீட்டில் சொல்லிக்க கூடாது என்பதால், எழுந்து வெளியே வந்தனர். ''வேன் எடுத்துட்டு, எல்லாரும் வந்திருக்கவே வேண்டாம். புருஷன் போனதை பெரிசாவே எடுத்துக்கலை, சுபத்ரா. இவ்வளவு சகஜமாக இருப்பான்னு நினைக்கலை,'' என்றாள், வனிதா.''எனக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. எல்லாம் கலி காலம். துடைச்சு போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கிறாங்க. இத்தன வருஷம் வாழ்ந்தவன் போயிட்டான்கிற சுவடு கொஞ்சமும் அவ முகத்தில் தெரியலை,'' என்றாள், இன்னொருத்தி. ''என்னவோ போ... பந்த, பாசம் இல்லாம, பிள்ளைகளை பெத்தெடுத்து வாழ்ந்திருக்கா,'' என, சுபத்ராவை, ஆளாளுக்கு விமர்சித்து, புறப்பட்டுச் சென்றனர்.''அம்மா சாப்பிட வாங்க, நாங்க ரெடி... சாப்பிட்டு நான் பரிட்சைக்கு படிக்கணும்,'' என்றாள், பெரியவள்.''நீங்க மூணு பேரும் சாப்பிடுங்க... அம்மாவுக்கு வியர்வையா இருக்கு, குளிச்சுட்டு வரேன்மா!''''சரிம்மா!'' அவர்கள் சாப்பிட, பாத்ரூமில் நுழைந்து, கதவை சாத்தி, வாளியில் தண்ணீரை திறந்தாள். தண்ணீர் தபதபவென கொட்ட, அந்த சத்தத்தில் அவள் அழுவது வெளியே கேட்காது என்பதால், ஓவென பெரும் குரலெடுத்து, கதறி அழுதாள்.''ஐயோ... என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டிங்களே... பிள்ளைகளுக்காக, என் மன வேதனையை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கிறேனே... நான் கண்ட கனவு கனவாகி போச்சே... கடவுளே, நான் என்ன செய்வேன்...'' அவள் அழுகையும், குரலும், தண்ணீர் விழும் சத்தத்தில் காணாமல் போனது. ''அம்மா... இன்னுமா குளிக்கிறே, வாம்மா... வந்து ஐஸ்கிரீம் எடுத்து தா... நீ கொடுத்தா தான் சாப்பிடுவேன்,'' சிணுங்கலுடன் அழைத்தான், மகன், சிவா.கண்ணீரை துடைத்து, ''இதோ, ஒரு நிமிஷம் வந்துட்டேன், கண்ணா!'' என்று, பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, துக்கத்தை மறைத்து, ஒரு தாயாக, புன்னகையுடன் வெளியே வந்தாள், சுபத்ரா.பரிமளா ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !