உள்ளூர் செய்திகள்

கடைசி சீன்!

''அவன் வந்துட்டானா...''அப்பா, அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.அவரது குரலின் அவசரம், எல்லாருக்கும் புரிந்தது. ஆனால், அந்த, 'அவனுக்கு' இந்த நேரத்தில், அப்படி என்ன முக்கியத்துவம் என்பது தான் புரியவில்லை.மரணப் படுக்கையில், இப்பவோ... அப்பவோ என்று இருந்த நிலையில், வைத்தியர் சித்தாசெட்டி, அப்பாவின் நாடியில் கையை வைத்தவர், எடுக்கவே இல்லை.அது, ஒவ்வொன்றாகத் துடிப்புத் தளர்ந்து, விழுந்து கொண்டிருப்பது, அவரது விரல்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருந்து கொண்டிருந்தது.'இத்தனை வருஷத்து சினேகிதனைப் பிரிய வேண்டியிருக்கிறதே...' என்ற துக்கம், வைத்தியரின் கண்களிலிருந்து, கண்ணீராக வடிந்து கொண்டிருந்தது.கிராமமாதலால், அனேகமாக, எல்லாப் பிரமுகர்களும், பெரிய வாத்தியார் விடை பெறப் போவதை காணக் குழுமியிருந்தனர்.கல்வி கற்பித்த ஆசானல்லவா! ஊரில், அந்த மரியாதை என்றைக்கும் குறைந்ததில்லை.''ஐயோ சாமி... மகராசா, எங்களை வுட்டுட்டுப் போயிடாதீங்க.''பால்காரக் கிழவி பதறினாள். மாடு வாங்க பணம் கொடுத்த மவராசன் இல்லையா... அதனால், கிழவிக்கு துக்கம்.ஊரிலே எல்லாரும் அவளை, பால்காரி என்பர். அப்பா மட்டும், 'கம்மலு கிழவி' என்பார். இப்போ கிழவியின் காதில் கம்மல் இல்லை; இருந்த காலத்தில் வைத்த பெயர்.இந்தப் பால்காரி கிழவி, ஏன் இப்போது வந்து பிலாக்கணம் வைக்கிறாள்...இவ அழுதான்னா உசிர் போயாச்சி அல்லது போயிடும்ன்னு அர்த்தம். மறுநாள், பாலு அவளிடமிருந்து தான். இது ஏறக்குறைய ஊரில், ஒரு வழக்கமாகவே ஆயிட்டுது.'பால்காரி வந்து போயிட்டாளா?''எல்லாம் ஆச்சு ஆச்சு...'அப்பாகிட்டே ரொம்ப நெருக்கமாக நின்ற கிழவியை, எதிர்வீட்டு நடேச நாடார், விண்ணென்று முழங்கையால், ஒரு நெட்டு நெட்டினார்.''தள்ளி நில்லுடி புள்ளே... ஐயா மூச்சு விடவே திணறிகிட்டு இருக்காரு... வந்துட்டா பிலாக்கணம் படிக்க... போடி அந்தாண்டை,'' என்றார்.சேலையை வாயில் அப்பிக் கொண்டு, அவள் வேறு பக்கம் போய் விட்டாள்.மூத்த அண்ணன்களும், அத்தையும், அப்பா என்னவோ சொல்லப் போகிறாரென்பதை, அவரது சிரமத்திலிருந்து தெரிந்து கொண்டு, ''சொல்லுங்க அண்ணா... உடம்புக்கு என்னண்ணா செய்றது? பஜனை கோவில், தீர்த்தம் மாமா கொண்டு வந்திருக்கார்; ஒரு சொட்டு குடிக்கிறீங்களா,'' என்று கேட்டனர்.அப்பாவிடமிருந்து, ஒரே முணுமுணுப்பு. ''அவன் வந்துட்டானா?''இத்தனை நூறு மனுஷங்க, அவரது புறப்பாட்டை பாக்க, இந்த வீடு பூராவிலும் வந்து அடைஞ்சாச்சு.ஆனா, அப்பா, அந்த ஒருத்தனுக்காக, 'வந்துட்டானா... வந்துட்டானா...' என்று, துடிக்கிறார்.அந்தக் கதாநாயகன், உள்ளூர் பஞ்சாயத்து போர்டு ஆபீசில் வேலை பார்க்கிற, ஒரு சாதாரண குமாஸ்தா தான்.அப்பாக்கிட்டே ரொம்ப மரியாதை... 'மாமா மாமான்'னு எது ஒன்றுக்கும், அப்பாகிட்ட தான் வந்து சந்தேகம் கேட்பான்.ஆசார, அனுஷ்டானம் பார்க்கிற குடும்பத்தை சேர்ந்தவன்.'நான் வண்டி வச்சிண்டு தான் வந்தேன். ரெண்டு நாளாக ரொம்ப ஜலதோஷம், இரண்டாம் தரக் குளியல் வேண்டாம்ன்னு பார்க்கிறேன்...' என்று, உறவினர் வீட்டு திவசத்துக்கு வந்த சாஸ்திரி மாமா, குளிப்பதற்கு அடம்பிடித்த போது, 'அதெல்லாம் முடியாதாம். இங்க வந்த எடத்துல குளிச்சித் தான் ஆகணும்ன்னு, பெரிய மாமா கூட சொல்றார்'ன்னு, ஒரு போடு போடட்டுமா...' என்று கேட்டு, அப்பாவிடம் யோசனைகளுக்கு வருவான்.அப்பாவுக்கு, பஞ்சாயத்து ஆபீஸ் குமாஸ்தாவை ரொம்ப பிடிக்கும்.'சின்ன வயசிலே எத்தனை சிரத்தை பார்...' என்று, எங்களிடம், அவனைப் பாராட்டுவார்.'அந்தக் குமாஸ்தாவுக்கு, அப்பா பெரிசாக, என்னவோ செய்ய போறார் போலிருக்கு. அதான், அவனையே தேடுறாரு. தன் கடைசி ஆசையாக, அவனுக்கு எந்த சொத்தை எழுதி வைக்கப் போகிறாரோ...' என்று, எங்களுக்கெல்லாம், உள்ளுக்குள் பயம் அடித்துக் கொண்டது.அப்பா, தெய்வம் மாதிரி; அவருடைய வார்த்தைக்கு, மறு வார்த்தை, இந்த வினாடி வரை, யாரும் பேசியது இல்லை.வைத்தியர், குலுங்கி குலுங்கி அழுதார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பாவின் கழுத்தில் விழுந்த சுருக்குக் கயிறை, யாரோ முரட்டுத்தனமாக இழுப்பது, வைத்தியர் கண்ணுக்கு தெரிகிறதோ என்னவோ!குமாஸ்தா பையனுக்கு, அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அப்பா, சில வினாடியிலே சொல்லி விடப் போகிறார்.''பஞ்சாயத்து சார் வந்தாச்சு... வந்தாச்சு.'' எதிர்வீட்டு நாடார், சிறிது பலத்தை பிரயோகித்து, கூட்டத்தை விலக்கி, அப்பாக்கிட்ட குமாஸ்தா வருவதற்கு வழி செய்தார்.குமாஸ்தா மாமா, அப்பாவை பார்த்ததும் ஆடிப் போய் விட்டார். குமுறிக் குமுறி அழுதார். 'எப்படி தன் திறமையெல்லாம் காட்டி, அழறார் பாருங்க...' என்று, எங்களுக்குள் ஜாடையாய் பார்த்துக் கொண்டோம். 'காட்டம்பட்டி ரோடு, வீடு தான் பறி போகிறது....' என்றும், 'இல்லை; என்... ரெண்டு ஜோடி வளையல் அம்மாவுடையது இருந்ததே, அதுகூடப் பறி போகலாம்...' என்றும் பேசிக் கொண்டோம்.குமாஸ்தா மாமாவுக்கு, சின்ன சிவப்பு உதடு; வெள்ளை வெளேர்ன்னு அழகான பல் வரிசை; கறுப்பா கிராப்; மூக்கு கொஞ்சம் நீளம். எப்போதும், 'பளிச்'சென்று, வெள்ளை வெளேர் வேட்டிச் சட்டை; 'வி' கழுத்து பனியன்; தோளில் மடிச்ச துண்டு போட்டிருப்பார்.அப்பாவின் கையை பற்றி, ''மாமா... அய்யோ மாமா...'' என்று கதறினார். குமாஸ்தாவை கட்டிலில் உட்காரும்படி, அப்பா ஜாடை காட்டினார். தன் தலைமாட்டு பக்கமாக, அவர் உட்கார சொன்னதை, குமாஸ்தா புரிந்து கொண்டு, அப்பாவின் தலைமாட்டில் போய் உட்கார்ந்தார்.குடும்பத்தினர் எல்லாருடைய முகத்திலும், ஒரு சஸ்பென்ஸ்; பரபரப்பு. சில வினாடிகளில், முடிவு தெரியப் போகிறது. குமாஸ்தாவிற்கு, எந்த வீட்டை அல்லது நிலத்தை, அப்பா அளிக்கப் போகிறார் என்று.மரண காலங்களில், சில பேர், திடீர் கர்ண பிரபுவாக மாறுவது உண்டு.குமாஸ்தா தலைமாட்டில் உட்கார்ந்ததும், ''நாராயணா...'' என்றார் அப்பா.''சொல்லுங்க மாமா,'' என்றார் பஞ்சாயத்து.அப்பா, ஏதோ சொன்னார்.ரொம்பப் பலவீனமான குரலாதலால், பெரிய அண்ணாவுக்கு மட்டும் கேட்டது. அப்பாவின் வாய் அருகில், காதை வைத்து, ஜாக்கிரதையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரிய அண்ணா.''அப்பா என்ன சொல்றார்?''பெரிய அண்ணா, பஞ்சாயத்து மாமாவிடம் சொன்னார்... ''சார்... உங்கள் மடியில, அப்பா தலையை வைத்துக்கணுமாம்.''''கேக்கணுமா இதை...'' என்பது போல், குமாஸ்தா மாமா அழுது கொண்டே, அப்பாவின் தலையை, அண்ணாவின் உதவியோடு, ஜாக்கிரதையாகத் தூக்கி, தன் மடியிலே வைத்துக் கொண்டு கதறினார்.அப்பாவின் தலையை அணைத்தவாறு, ''மாமா, உங்களுக்கு ஒண்ணுமில்லை; தைரியமாய் இருங்க,'' என்று, கூறி அழுதார்.அப்பா சிரமப்பட்டு, ''நாராயணா, நாராயணா, நாராயணா...'' என்றார்.அதுதான், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.கூடியிருந்தவர்களில், சிலர் பெரியண்ணாவை அந்தண்டை அழைத்துப் போய், ''அப்பா என்ன சொன்னார்... குமாஸ்தாவிற்கு, எதைக் கொடுக்க சொன்னார்?'' என்று கேட்டனர்.''நாங்க எல்லாம் உனக்கு ஆதரவாக சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறோம். சாகிறவர் கடைசி நிமிஷத்திலே, உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லிட்டுச் செத்துப் போகக்கூடும். அதைப் பெருசாக எடுத்துக்கிட்டு, அப்படியே செய்யணும்ன்னு அர்த்தம் இல்லை,'' என்றார் ஒன்று விட்ட சித்தப்பா.அப்பாவின் பிராணன் பிரிந்தாயிற்று.குமாஸ்தா நாராயணனின் மடியில், தலை வைத்தவாறு படுத்திருந்த, அப்பாவின் முகத்தில் இன்னமும்கூட அவர் ஏதோ, பேச விரும்புவது போன்ற ஆவல் தெரிந்தது.நான், என் துக்கத்தை அடக்கிக்கொண்டு, நாராயண மாமாவிடம், ''அப்பா கடைசியாய் என்ன சொன்னார். உங்க காதில் சரியாக விழுந்ததா? நான் ஒரு பாவி; எனக்குக் கேட்கக் கொடுத்து வைக்கல. அந்த சமயம் பார்த்து, உள்ளே போய்விட்டேன். நான் ஒரு பாவி,''என்றேன்.குமாஸ்தா மாமா சொன்னார்... ''நீங்க பாவி இல்ல; புண்ணியவான். அப்பாவுடைய கடைசி ஆசையை, தப்பாமல் நிறைவேத்திட்டீங்க.''''நான் என்னத்த நிறைவேத்தினேன்,''என்று புலம்பினார் பெரிய அண்ணா.''அப்பா சாகுறதுக்குள்ள என்னை கூட்டிட்டு வந்தீங்களே... அதுதான் புண்ணியம். உங்க அப்பாவுடைய கடைசி ஆசையை நிறைவேத்திட்டீங்க,''என்றார் குமாஸ்தா.''அப்பா கடைசியாக, என்ன ஆசைப்பட்டார் என்றே எங்களுக்கு தெரியாது. உங்கள் காதில என்னமோ சொன்னாரே... என்ன சொன்னார்?''பெரிய அண்ணா கேட்டார். ''அவர் உயிர் போகும் போது, 'நாராயணா' என்று சொல்லிக் கொண்டுதான் சாகணும்ன்னு எங்கிட்டே முன்பே சொல்லியிருந்தார். 'நாராயணா, நீ எங்கயிருந்தாலும், நான் சாகறப்போ வந்துடு. சாகறப்போ, அந்தக் கடைசி நிமிஷத்திலே, சுவாமி பெயர் ஞாபகத்துக்கு வருமோ, வராதோ. நீ வந்துட்டியானா உன்னைப் பார்த்தவுடன், நாராயணன் பேரு ஞாபகம் வந்துடும். உன் மடிமேலே, தலையை வைத்து, வாயிலே 'நாராயணா நாராயணா'ன்னு சொல்லிக்கிட்டே இந்த உயிரை விடணும்...' என்று சொல்லிக் கொண்டிருந்தார். கடைசி நிமிஷத்தில், அவர் வாய் முணுமுணுத்தது, நாராயணா என்ற என் பேரத்தான்,'' என்றார்.சொத்துகளில், எதை இனாமாக குமாஸ்தாவுக்கு வழங்கும்படி, அப்பா சொல்லியிருப்பாரோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்த வீட்டவர்களின் முகம் தெளிவாயிற்று. விடை பெற்றவரின் முகத்திலும், விருப்பம் நிறைவேறிய தெளிவு.ஜ.ரா. சுந்தரேசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !