உள்ளூர் செய்திகள்

கோவில் விளங்க குடி விளங்கும்!

இன்று, நாட்டின் பல்வேறு இடங்களில் பழுதுபட்டு கிடக்கும் ஒவ்வொரு பழமையான கோவிலுக்கு பின்பும், ஒரு உயிரோட்டமுள்ள வரலாறு உள்ளது. அதனால் தான், காஞ்சி மகா பெரியவர், 'புதுசு புதுசா கோவில் கட்டறதை விட, பழைய கோவில்களை புதுப்பிச்சு, விளக்கேத்தி, ஒரு வேளை பூஜையாவது நடக்கும்படி செய்வது பெரிய புண்ணியம்...' என்றார்.'கோவில் விளங்க குடி விளங்கும்' என்பது முதுமொழி. பழுதுபட்டு கிடக்கும் கோவிலை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வழிபட்டால், கடவுளின் அனுக்கிரகம் மட்டுமல்ல, குடும்பமும் சுபிட்சம் அடையும்.ஒரு ஊரில் தம்மக்கா என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் ராமரிடம் அளவில்லாத பக்தி கொண்டவள். நாளாக நாளாக, ராமரை நேராக தரிசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தம்மக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு நாளும், தன் மனதுள் உறைந்துள்ள ஆசையை விண்ணப்பமாக வைத்து, ராமபிரானிடம் வேண்டி வந்தாள் தம்மக்கா.சரணாகதி ரட்சகனான ராம பிரான், தம்மக்காவின் விருப்பத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார். ஒரு நாள், இரவு நேரம்... தம்மக்கா வழிபாட்டை முடித்து, ராமரைத் தியானித்தபடியே தூங்கி விட்டாள். கனவில் அவளுக்கு காட்சியளித்த ராமர், 'தம்மக்கா... இதோ அருகில் உள்ள மலையில் நான் இருக்கிறேன்; அங்கு வந்து வழிபாடு செய்...' என்று அருளி, மறைந்தார்.கனவு கலைந்தது; அதன்பின், தம்மக்கா தூங்கவில்லை.காரணம், நல்ல கனவு கண்டால், அதன் பின் தூங்கக்கூடாது; அப்போதுதான் அது பலிக்கும். கெட்ட கனவு கண்டால், அதன் பின் தூங்கிவிட வேண்டும்; அப்போது தான் அது பலிக்காது என்பர் பெரியோர். அதன் காரணமாக, கனவில் இறை தரிசனம் கிடைத்த தம்மக்கா, அதன்பின் தூங்கவில்லை.காலையில் எழுந்ததும், தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் தெரிவித்து, 'கனவில் வந்து கருணை பொழிந்த அந்த ராமருக்கு அவர் சொன்னபடியே, கோவில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும்...' என்றாள். தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் கொண்ட பெரும் செல்வந்தர் ஒருவர், 'அம்மா... நானே முன்னின்று உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்...' என்றார்.ஊர் மக்களும், தம்மக்காவும், கனவில் ராமபிரான் கூறிய மலைக்கு சென்றனர். நீண்ட நேரம் தேடிய பின், அங்கே ஒரு புதரின் அடியில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமார் ஆகிய நால்வரின் விக்கிரகங்கள் இருந்தன. அழகொழுகும் அந்த விக்கிரகங்களைத் தரிசித்ததும், கண்ணீர் விட்டு, கை கூப்பி தொழுது மகிழ்ந்தாள் தம்மக்கா.பின்னர், தரும சிந்தனை கொண்ட செல்வந்தர் மற்றும் ஊர் மக்களால், அம்மலை மேல், அழகானதொரு கோவில் உருவானது.கோவில் உருவாவதற்கு மூல காரணமாக இருந்த தம்மக்கா, ராமரை வழிபட்டு, திருவருள் பெற்றாள். தம்மக்காவால் உருவாகிய அக்கோவிலை, பிற்காலத்தில் அரசர் ஒருவர் செப்பனிட்டார். அதன்பின் கவனிப்பாரின்றி கால வெள்ளத்தில் அக்கோவில் பழுதடைந்து, முள்ளும், புதரும் மண்டிப் போனது. அக்கோவிலை மீண்டும் கோபமண்ணா என்பவர் புதுப்பித்தார். அக்கோவில்தான், பத்ராசல ராமர் கோவில். ராமரே வந்து வெளிப்படுத்திய அந்த விக்கிரகங்களை, இன்றும் நாம் தரிசிக்கலாம். தம்மக்காவிற்கு அருள் புரிந்த ராமர், நமக்கும் அருள் புரிவார்.பி.என்.பரசுராமன்விதுர நீதி!: ஒருவன், தன் வலிமையை தவறாகப் பயன்படுத்தியோ, விடாமுயற்சியுடன் உழைத்தோ, அறிவையும், ஆண்மையையும் கொண்டாட செல்வம் சம்பாதிக்கலாம். ஆனால், இவற்றால் மட்டுமே அவன் நற்பெயரோ, உயர்குடியில் பிறந்தோரின் நற்பண்பையோ பெற்றுவிட முடியாது.— என்.ஸ்ரீதரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !