நாக்கு!
எனக்கு எதிரில் தரையில் அமர்ந்து பிழியப் பிழிய அழும் லட்சுமியை பரிதாபமாகப் பார்த்தேன்.''எத்தனை தவமிருந்து பெத்தேன் அம்மா இவனை... ஒரு பொல்லாத சொல் பேசியிருப்பேனா... அடிச்சிருப்பேனா... அப்பப்ப அவ அப்பன் கோவத்திலே இவனண்டை கத்தும்போது கூட, இவனுக்காகத் தானேம்மா பரிஞ்சு பேசுவேன்... இந்தப் பாவிப் பய என்னண்டை எதுவுமே சொல்லாம இருந்திருக்கிறானே... ''அவங்க ஸ்கூல் டீச்சர் வேறொரு பிள்ளை மூலமாகச் சொல்லி அனுப்பி, எங்கள வரச்சொல்லிப் பேசினப்புறம்தானே தெரியுது... இந்தக் கழுதை, இஸ்கூலுக்குப் போவாம, எங்கெங்கோ காலிக் கழுதைங்களோட சுத்தித் திரிஞ்சிக்கிட்டு இருந்தான்னு,'' கண்ணீர் மழை.நான் சமாதானமாக பேசினேன்.''சரி... நடந்தது நடந்து போச்சு லட்சுமி... இப்ப அழுது என்ன பிரயோஜனம்... அவங்கிட்ட படிப்போட அவசியத்தைப் பத்தி நல்லவிதமா எடுத்துச் சொல்லு... இல்ல, என்கிட்ட கூட்டிட்டு வா, நான் பேசுறேன். இங்க ஐயாவை விட்டுப் பேசச் சொல்றேன்,'' என்றேன்.புடவை தலைப்பால் கண்ணீரை துடைத்தபடி எழுந்தாள், லட்சுமி. பின், சற்று தயக்கத்துடன் சொன்னாள், ''இன்னும் ஒண்ணும்மா... இந்தப் பய, 'இஸ்கூல் பீஸ்' கட்ட கொடுத்த பணத்தைக் கண்டபடி செலவு பண்ணி தீர்த்திட்டு இருக்கான். இப்ப எல்லா, 'பீஸை'யும் ஒழுங்காகக் கட்டாட்டி, இஸ்கூலிலிருந்து பையனை வெளிய அனுப்பிச்சுடுவேங்கறாங்கம்மா. இவன் படிச்சுத் தலையெடுத்துத்தானம்மா குடும்பம் ஒயரும்ன்னு கனவு கண்டுட்டிருந்தேன்,'' மீண்டும் விம்மல், அழுகை.எனக்குப் புரிந்தது, அவளுக்கு இப்போது பணம் தேவை.''எத்தனை ரூபா கட்டணுமாம்?''''ஐயாயிரம்கறாங்கம்மா,'' என்றாள், மெதுவான குரலில்.''அடப்பாவி... உன் பிள்ளை அப்படி என்ன செலவு பண்ணியிருப்பான் அந்தப் பணத்தை எல்லாம்,'' என்றேன், திடுக்கிட்டு.''யாருக்கும்மா தெரியும்... கண்டவங்க பேச்சும் கேட்டு, பாழாப் போயிருக்கான். கேட்டா, சினிமா போனேன்... ஊருக்குப் போனேன்... 'ப்ரண்டு' கடன் கேட்டான் கொடுத்தேன்,'' என்கிறான்.எனக்கு ஆயாசமாக இருந்தது.லட்சுமிக்கு, கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை என்று புருஷனும், அவன் குடும்பத்தினரும் அவளைத் தள்ளி வைக்க இருந்தனர். அந்தச் சமயத்தில் அவள் மண வாழ்க்கையைக் காக்கும் கடவுளைப் போல் இந்த மணிகண்டன் பிறந்தான். ஆனால், அதற்குப் பின் விடுவிடுவென்று லட்சுமிக்குத் தொடர்ந்து மூன்று குழந்தைகள் பிறந்து விட்டன. இரண்டு பெண், ஒரு பையன். மணிகண்டனுக்கு இப்போது வயது, 16. பெண்களுக்கு, 12, 9. கடைசி குழந்தைக்கு, 5 வயது. லட்சுமியின் புருஷன், ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறான். லட்சுமி, ஐந்து வீடுகளில் வேலை பார்க்கிறாள்.''இப்ப என்ன வேணும்கறே,'' என்றேன்.''காசுதாம்மா... 3,000 நீங்க கொடுங்க, கோகிலாம்மா கிட்டயிருந்து, 2,000 ரூபா வாங்கிக்கறேன்,'' என்றாள், லட்சுமி.ஏதோ பேச வாயெடுத்த நான், ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று, 3,000 ரூபாயை, லட்சுமியிடம் நீட்டினேன். முகம் மலர்ந்த லட்சுமி, ''உங்களுக்குத்தாம்மா பிள்ளைங்க அருமை தெரியுது... வந்து பார்க்கச் சொல்லு, பேசறேன்னீங்க... பணமும் கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றிம்மா... மாசா மாசம் சம்பளத்தில் இருந்து, 500 ரூபாய் பிடிச்சுக்கிடுங்க,'' என்றாள்.நான் வெறுமே தலையசைத்தேன். அவள் பாராட்டிலும், நன்றியிலும் இருந்த சன்னமான ஊசி என்னைக் குத்தாமல் இல்லை.'உங்களுக்குத்தாம்மா பிள்ளைங்க அருமை தெரியும்...'- எனக்கு குழந்தைகள் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறாள். என் வீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறாள், லட்சுமி. நல்ல உழைப்பாளி. கடன் வாங்குவதும், திருப்பித் தருவதும், தராமல் இருப்பதும் சகஜம் என்பதால், நாங்கள் அதை பெரிதுபடுத்துவதில்லை.லட்சுமியின் பையனை பார்த்து பேசி இருக்கிறேன். அருமையாக பிறந்து, அவர்கள் தகுதிக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்த, இன்னும் வளரும் பிள்ளை என்று எனக்குத் தெரியும். துடுக்கு அதிகம். சற்று முரடனும் கூட. என் கணவருக்கு அவனைப் பிடிக்காது. 'அவன் சரியில்லை...' என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்.நானும் ஆபீஸ் போகும்போதும், வரும்போதும், சில நேரங்களில் கண்ணில் பட்டிருக்கிறான். பரட்டைத் தலை, பீடி, சிகரெட் இவற்றுடன், கூட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருப்பான். என்னைப் பார்த்தால், சட்டென்று எவனாவது ஒருவன் பின்னால் மறைந்து கொள்வான்.லட்சுமியிடம் பேசும்போது, ஒருநாள் இதை சொல்லி இருக்கிறேன்.'நீங்க சொல்றது சரிதாம்மா... சில பசங்க அவ்வளவா நல்லவங்க இல்ல... இருந்தாலும், இவன் தப்புத் தண்டாவுக்குப் போக மாட்டாம்மா...' என்று வக்காலத்து வாங்குவாள். நானும் அதிகம் பேசுவதில்லை.மறுநாள் வரும்போது மணிகண்டனை கூட்டி வந்தாள், லட்சுமி.இன்றைய கீழ்மட்ட இளம்தலைமுறையின் பிரதிநிதியாக இருந்தான். வினோதமாக வெட்டப்பட்ட முடி அலங்காரம். இறுக்கிப் பிடிக்கும் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அழுக்காக. நன்றாக அரும்பி இருக்கும் மீசை. கண்களில் விரோதம். ''பேசுங்கம்மா... நான் போய் வேலயப் பாக்கிறேன்,'' என்று உள்ளே போய் விட்டாள், லட்சுமி.மணிகண்டனைக் கூர்ந்து பார்த்தேன். என் பார்வையைத் தவிர்க்க தலை குனிந்து கொண்டான். உன் அம்மா சொன்னாங்க, ''பணத்தைப் பாழ் பண்ணி விட்டாயாமே... படிக்கிற காலத்தில் உன் முழுக் கவனமும் படிப்பில் தான் இருக்கணும். வேறு நடவடிக்கைகளில் கவனம் சிதறக் கூடாது,'' என்றேன்.ஒரு வினாடி என்னை நிமிர்ந்து பார்த்து, தலையசைத்தான்.''அம்மா - அப்பா இரண்டு பேரும், எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்து, உன்னைப் படிக்க வைக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுமா?'''தெரியும்...' என்கிறாற்போல் தலையசைத்தான்.பொறுமை போய்க்கொண்டு இருக்கிறது என்பது அவன் உடல்மொழியில் தெரிந்தது. நான் மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை. என் மரியாதைதான் கெடும் என்று புரிந்தது. ''சரி... போ... இனிமேலாவது பொறுப்புடன் நடந்து கொள்,'' என்று அழுத்தமாகச் சொன்னேன்.விடுக்கென திரும்பி நடந்தான். காலில் இருந்த, 'ஸ்போர்ட்ஸ் ஷூ'வைப் பார்த்தேன். இரண்டாயிரத்துக்குக் குறையாது. சற்று நேரம் கழித்து, வேலை முடித்து, லட்சுமி போகையில், ''நல்ல வார்த்தை சொல்லி அனுப்பினீங்களாம்மா?'' என்று கேட்டாள்.வாய் பேசாமல், தலையசைத்தேன்.இது நடந்து ஆறு, ஏழு மாதங்களுக்குப் பின், ஓர் இரவு, அழைப்பு மணி ஓசை கேட்டு, போய் திறந்தேன். தலைவிரி கோலமாக, கோவென கதறி அழுதபடி தரையில் சரிந்து விழுந்தாள், லட்சுமி.''ஏய்... என்ன இது... எழுந்திரு... என்ன ஆச்சு?'' என்று அவள் தோளைப் பிடித்துத் துாக்கினேன்.''ஐயோ, நான் என்னன்னு சொல்ல... மணிகண்டனைப் போலீசு பிடிச்சுக்கிட்டுப் போயிடிச்சு,'' மீண்டும் கதறினாள்.திடுக்கிட்டேன்.''போலீசா... எதற்கு?''''என்னத்தம்மா சொல்வேன்... பொம்பளப் பசங்கள கிண்டல் பண்ணினான்னு இழுத்துக்கிட்டுப் போய் ஸ்டேஷனில் வச்சு அடிக்கிறாங்கம்மா... அய்யோ... நான் என்ன பண்ணுவேன்,'' என்று ஒப்பாரி வைத்தாள்.எனக்கு இப்போது இரக்கம் வரவில்லை; கோபம் தான் வந்தது.''எப்படி பிடிச்சாங்க... இவன் ஒண்ணும் பண்ணாம?'' என்றேன்.''இவங்கூட இருந்த பசங்க பண்ணினதால, இவனையும் கூட இழுத்திட்டுப் போயிட்டாங்க,'' என்று அழுதாள்.அவள் பேச்சைக் கேட்டதும், என் கோபம் இன்னும் அதிகம் ஆயிற்று.''உன்கிட்ட அன்னிக்கே சொன்னேன்... சகவாசம் சரியில்ல என்று, நீதான் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியல.''''அய்யோ, சொன்னேம்மா... அவங்களோட சகவாசம் வாண்டாம்ன்னு... என்கிட்ட, 'அவங்ககூடப் பேசல்ல, பழகல்ல'ன்னுதாம்மா சொன்னான்... இப்பவும் நா சொல்றேன், இவன் ஏதும் செஞ்சிருக்க மாட்டாம்மா... அந்தப் பசங்க தான்... அய்யோ... எம் புள்ளய எப்படி எல்லாம் அடிக்கிறாங்களோ,'' என்று பெரிய குரலெடுத்து அழுதாள்.எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.''சரி... இப்ப என்ன பண்ணணும்கறே?''''கோகிலாம்மா வீட்டுக்குப் போனேன். அவங்க எங்கோ ஊருக்குப் போய்ட்டாங்களாம். நீங்கதானே பக்கத்தில இருக்கீங்க... நீங்களும், ஐயாவும் வந்து போலீசிலே கொஞ்சம் பேசுங்க... உங்கள மாதிரி கவுரவமான ஆளுங்க வந்து பேசினா, அவங்க வுட்டுடுவாங்கன்னு தோணுதும்மா,'' என்றாள், பெரும் அழுகைக்கிடையே.என் கணவரைப் பார்த்தேன்.நாங்கள் பேசியது எல்லாம், அவர் காதில் கேட்டிருக்கும். இருந்தாலும், அவர் என் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை.''நீ இதில் தலையிடாதே... அந்தப் பையன் நல்ல பையன் இல்லை,'' என்றார், ஆங்கிலத்தில்.கோபம் வந்தது, எனக்கு.என் வீட்டில் மாடாக உழைக்கும் ஒரு ஏழை பெண், உதவி கேட்கிறாள். அதுவும் வெறும் வாய் வார்த்தை... அதைச் செய்தால் என்ன?''என்னங்க இப்படிப் பேசுறீங்க... நான்கு பிள்ளங்கள வச்சுக்கிட்டு அவ என்ன பண்ணுவா?''''அது சரி, லட்சுமி... உன் புருஷன் எங்கே?'' என்றேன்.''அவரு டிரைவர்தானே... வெளியூர் போயிருக்காரு,'' என்றாள், அழுதபடி.''இவங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு அப்புறம் மத்தவங்க வந்து காப்பாத்தணும்பாங்க... அதுக்கு யார் வருவாங்க?'' என்றார், என் கணவர்.''நான் போகிறேன்,'' என்றேன், விறைப்பாக.''உன் இஷ்டம்,'' என்று கூறி, உள்ளே போய்விட்டார்.செருப்பை மாட்டி, கையில் பர்ஸை எடுத்து, லட்சுமியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்தேன்.இரவு நேரம் என்பதால், இன்ஸ்பெக்டர் மட்டும் தான் இருந்தார். வாசலில் ஒருவரும், உள்ளே ஒருவரும், இரண்டு கான்ஸ்டபிள்கள் இருந்தனர்.உள்ளே போகும் முன், லட்சுமியிடம் சொன்னேன், ''த பாரு... அங்கே வந்து இந்த மாதிரி அழுது, 'சீன்' எல்லாம் போடக்கூடாது. சரியா... நான் பேசுகிறேன்,'' என்று எச்சரித்தேன்.''சரிங்கம்மா,'' என்று தலையாட்டினாள்.அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இளைஞனாகத்தான் இருந்தார்.நான் போய் அறிமுகம் செய்ததும், உட்காரச் சொன்னார். பின்புறம் நின்று கொண்டிருந்த லட்சுமியைப் பார்த்து, யார்... என்பது போல் கண்களால் கேட்க, ''இவள் பெயர் லட்சுமி... என் வீட்டில் வெகு நாட்களாக வேலை செய்கிறாள்... அவள் பிள்ளை மணிகண்டனை, உங்கள் ஸ்டேஷனில் பிடித்து வைத்திருப்பதாக வந்து அழுதாள்... பாவம்... அதுதான் என்ன என்று விசாரித்து, அவனை விடுதலை செய்ய முடியுமா என்று கேட்க வந்தேன்,'' என்றேன்.என்னைப் பார்த்து, ஒரு நிமிஷம் மவுனமாக இருந்தார், அவர்.பின், லட்சுமியைப் பார்த்து, ''அம்மா... நீங்க போய் அந்த பெஞ்சில உக்காருங்க... நான் இவங்ககிட்ட பேசறேன்,'' என்றார்.ஓரமாக இருந்த பெஞ்சில் அமர்ந்தாள், லட்சுமி.''மேடம்... இந்த காலத்து விடலைப் பசங்களின் குணம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.''''உண்மை தான் சார்... மணிகண்டன் கொஞ்சம் முரட்டு ஆள் தான்... ஆனாலும், ரொம்ப மோசமானவன் இல்லை,'' என்றேன், சமாதானமாக. ''யாரு மணிகண்டன்... அந்த கும்பலில் கொஞ்சம் களையாக, கண்களில் மை இட்டாற் போல் இருப்பானே... அவன் தானே?'' என்றார்.எப்படி இவ்வளவு துல்லியமாக வர்ணிக்கிறார் அவனை என்று அதிசயித்த போது, அவரே தொடர்ந்தார்...''அவனுக்கு, தான் பெரிய, 'ஹீரோ' என்று எண்ணம். அவனுடன் இருந்த மிச்ச நாலும் வெறும் குப்பைக் காலிகள்.''''அது போகட்டும், இவன் என்ன தப்பு பண்ணினான்,'' என்று கேட்டேன், சற்று பொறுமை இழந்து.''அவங்க உங்ககிட்ட சொல்லலையா?'' என்றார், இன்ஸ்பெக்டர், லட்சுமியை காட்டி.''ம்... சொன்னாங்க... ஏதோ பொண்ணுங்களை கிண்டல் பண்ணினதாக... ஈவ் டீசிங்கா?'' என்றேன்.''அடே அப்பா... பலே ஆசாமிங்க இவங்க... ஈவ் டீசிங்கா... இவன் ஏதோ ஒரு பெண்ணை தினம் பின்னாடியே போய் காதலிக்கிறதா சொல்லி இருக்கிறான்... அது, ஒருநாள் இவனை மிரட்டியிருக்கிறது... இவரு தான், 'ஹீரோ' ஆச்சே, கோவம் வந்து, தன்னோட நாலு பசங்களக் கூட்டிப்போய், 'மூஞ்சில ஆசிட் ஊத்துவே'ன்னு பாட்டிலை காட்டி மிரட்டி இருக்கான். ''நல்லவேளை, அது அவங்க அப்பா கூட வந்திருக்கு... அவரு வந்ததப் பார்த்ததும் ஓடியிருக்கானுங்க... அவரு சத்தம் போடவே, பக்கத்தில் இருந்தவங்க, இவனையும், அந்தக் காலிகளையும் பிடிச்சு ஒப்படைச்சுட்டாங்க,'' என்றார், அவர் நிதானமாக.எனக்கு நெருப்பில் கை வைத்தது போல் இருந்தது.என்ன விளக்கம் தருவது என்று தெரியாமல்,''இப்ப என்ன பண்ணுவீங்க?'' என்றேன்.''நீங்க கவலைப்படாம போங்க... சும்மா மிரட்டி, ரெண்டு தட்டு தட்டி, நாளை காலைல அனுப்பிடுவோம்... அந்த அம்மாவ, பிள்ளைய கவனமா வளக்கச் சொல்லுங்க,'' என்றார். ''நன்றி!'' சொல்லி, எழுந்து நடந்தேன். எனக்கு ஏனோ அப்போது லட்சுமியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை.நான் வெளியே வருவதைப் பார்த்து, பின்னாலேயே ஓடி வந்த லட்சுமி, ''அம்மா... அம்மா... என்னம்மா சொன்னாரு அவரு... எம் புள்ள நிரபராதிதானே... விட்டுடுவாங்களாம்மா?'' என்று மீண்டும் கண்ணீருடன் புலம்பினாள்.அவளைத் திரும்பி, ஆழமாகப் பார்த்தேன்.''உன் பிள்ளை தான் தப்பு செய்திருக்கான்... இன்னிக்கு இரவு ஜெயில் தான்... அனுபவிக்கட்டும்,'' என்று சொல்லி, வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.என் வார்த்தைகளைக் கேட்டு, ஒரு நிமிஷம் திகைத்தவள், நான் செல்வதைப் பார்த்து, உரத்த குரலில் கூச்சலிட்டாள், லட்சுமி.''உங்ககிட்ட உதவி கேட்டு வந்தேனே... உங்களுக்கு எப்படி பிள்ளைங்களோட அருமை தெரியும்... அய்யோ, நான் என்ன பண்ணுவேன்... என் ராசா,'' என்று அழுது புலம்ப ஆரம்பித்தாள்.நான் ஒரு கணம் சூடுபட்டவள் போல் நின்றேன். என்ன சொன்னாள், 'உங்களுக்கு எப்படி பிள்ளைங்களோட அருமை தெரியும்?'அன்று, 'உங்களுக்குத்தாம்மா பிள்ளைங்களோட அருமை தெரியும்...' என்று சொன்ன அதே நாக்கு.என் அம்மா சொல்லும் ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது.'நீரில் கிடக்கும் நாக்குக்கு விவஸ்தை கிடையாது...' சரியானது தான்!நான் திரும்பிப் பார்க்காமல், வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.லட்சுமி, நாளைக்கு வேலைக்கு வரலாம்; வராமலும் போகலாம். வந்தாலும், நான் அனுமதிக்கப் போவதில்லை.தேவவிரதன்