பாக் பந்தயம் எனும் பாரம்பரிய புலி பந்தயம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே, வியக்க வைக்கும் பாரம்பரியம், இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. 'பாக் பந்தயம்' என்ற போட்டி தான் அது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் வாழும், பழமையான பழங்குடி சமூகங்களில் ஒன்று, பைல் இன மக்கள். இவர்கள் தான், இந்த பந்தயத்தை நடத்துகின்றனர். பைல் பழங்குடியின மக்கள், புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மரங்களில் வாழ்ந்த தங்கள் முன்னோர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக, 'பாக் பந்தயம்' எனும், மரம் ஏறும் பந்தயத்தை நடத்துகின்றனர். பாக் பந்தயம் என்ற வார்த்தைக்கு, புலி பந்தயம் எனப் பொருள். உயரமான மரங்களின் உச்சியை நோக்கி, வேகமாகவும், திறமையாகவும் ஏறுவது தான், அந்த பந்தயம். போட்டி நாளில், கிராம மக்கள் கூடி, ஆரவாரத்துடன் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவர். இது வெறும் விளையாட்டல்ல; அவர்களின் பழமையான வாழ்விடத்துடனான தொடர்பை புதுப்பிக்கும் ஒரு சடங்கு. மரங்களில் தாவி, கிளைகளைப் பிடித்து, சில நொடிகளில் உச்சியை அடையும் அவர்களின் திறமை, பிரமிக்க வைக்கும். சில பகுதிகளில், வெற்றியாளர்களுக்கு பாரம்பரிய பரிசுகளும் வழங்கப்படும். இயற்கையுடன் இணைந்த இந்த பந்தயம், பழங்குடி மக்களின் துணிச்சல் மற்றும் சுறுசுறுப்பை வெளிப்படுத்துவதோடு, அவர்களின் வரலாற்றையும் உலகிற்கு நினைவூட்டுகிறது. - ஜோல்னாபையன்.