உள்ளூர் செய்திகள்

துர்வாசர் காட்டிய வழி!

ஆதித்தபுரம் எனும் ஊரில், விச்வாவசு எனும் வியாபாரி இருந்தார்; காசு பணத்திற்கு குறைவே இல்லை. அந்த வியாபாரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.பிள்ளைகளை சீரும், சிறப்புமாக வளர்த்த வியாபாரி, தகுந்த வயது வந்ததும், அவர்களை தனியே வியாபாரம் செய்ய சொல்ல தீர்மானித்தார்.நால்வருக்கும் பெரும் பொருளை தந்து, 'குந்தித் தின்றால் குன்றும் குறையும். ஆகையால், நீங்கள் நால்வரும், இனி, தனியாக வியாபாரம் செய்யுங்கள்... நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்... வாக்கு தவறாதீர்கள்...' என்றெல்லாம் அறிவுரை சொல்லி வாழ்த்தினார்.'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை மனதில் ஏற்று, பிள்ளைகள் நால்வரும், நல்லவிதமாகவே செயல்பட்டனர். நன்கு பராமரிக்கப்படும் சோலை செழிப்பாக வளர்வதை போல, அந்த பிள்ளைகளின் செல்வமும், நாள்தோறும் செழித்து பெருகியது. ஆனால், அவர்களிடமிருந்த நல்ல குணங்கள் குறைய துவங்கின.அவர்கள் இருந்த ஆதித்தபுரத்தில், ஒரு சிவன் கோவில் இருந்தது. பழுதடைந்திருந்த அக்கோவிலை புதுப்பிக்க நினைத்தார், குருக்கள். ஊரார், அவரவர்கள் இயன்றதை கொடுத்தனர்; அதிகமாக பொருள் கொடுக்க இயலாதோர், திருப்பணியில் பணியாளராக வேலை செய்தனர்.ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலர், 'குருக்களே... அந்த வியாபாரியின் பிள்ளைகள் நான்கு பேரும், நல்ல வசதியாக இருக்கின்றனர். அவர்களிடம் கேட்டால், தாராளமாக நிதி உதவி செய்வர்...' என்று ஆலோசனை கூறினர். இதையடுத்து, வியாபாரியின் மகன்கள் நால்வரையும் பார்த்து, விபரம் சொல்லி, நிதி உதவி கேட்டார், குருக்கள். 'தாராளமாக, கண்டிப்பாக தருகிறோம்; நாளை வாருங்கள்...' என, பதில் கூறினர். மகிழ்ச்சியோடு திரும்பினார், குருக்கள்.சொன்னபடி மறுநாள் போய், நால்வரையும் பார்த்தார். 'ஏனய்யா... நாளைக்கு வாருங்கள் என்றால், மறுநாளே வந்து நிற்பீர்களா... போய், ஒரு வாரம் கழித்து வாருங்கள், பார்க்கலாம்...' என்று, விரட்டி விட்டனர்.பொது வாழ்வுக்கு வந்தால், பொறுமை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த, குருக்கள், அமைதியாக திரும்பினார். பலமுறை சென்றும், தோல்வியே மிஞ்சியது.மனம் உடைந்த, குருக்கள், 'ப்ச்... செல்வந்தர்களின் நிலை, இது தான் போலிருக்கிறது...' என்றபடியே திரும்பினார். அதன் பின், உதவி கேட்டு அவர்களிடம் போகவில்லை.சில நாட்கள் சென்றதும், வியாபாரியின் மகன்கள் நால்வரும், கடல் வாணிபம் செய்ய, கப்பலில் ஏராளமான சரக்குகளை ஏற்றி, புறப்பட்டனர். புயலில் கப்பல் கவிழ்ந்து, அனைத்தும் முழ்கின. 'செய்த பாவத்துக்கு தண்டனை தான் இது...' என, புலம்பினர். செய்கிறேன் என்று சொல்லி, செய்யாமல் விட்டால், பலரிடமும் கெட்ட பெயர் உண்டாகும்; பொருள் நஷ்டமும் ஏற்படும். வாக்கு தவறக் கூடாது என்பதை விளக்க, துர்வாசர் சொன்ன கதை இது. பி. என். பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !