உள்ளூர் செய்திகள்

திருவையாறு அசோகா அல்வா!

திருநெல்வேலி என்றால் அல்வா, தூத்துக்குடி என்றால் மக்ரோன்ஸ் என்று ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்போ, காரமோ அல்லது ஏதோ ஒரு சிறந்த உணவு வகை இருக்கும். அவ்வகையில், வெவ்வேறு ஊர்களின் சிறப்பு உணவு வகைகள் இப்பகுதியில் இடம் பெறும். சங்கீதத்திற்கு பெயர் பெற்ற, திருவையாறுக்கு, இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது, சுவையான, அசோகா அல்வா!அல்வாவின் நடு நடுவே இருக்கும், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை; வாயில் வைத்தாலே, வழுக்கியபடி உள்ளே போகும் அதன் மென்மை; சாப்பிட்ட பின்பும், கையில் ஒட்டியிருக்கும் நெய் மணம் என, இதற்கு பல சிறப்புகள் உண்டு என்றாலும், காவிரி நீரில் தயாரிக்கப்படுவதே இதன் சுவைக்கு முக்கிய காரணம்.பாசிப்பருப்பு மற்றும் கோதுமை சேர்த்து தயாரிப்பதால், இது, உடலுக்கு ஆரோக்கியமானது. இதனாலேயே அசோகா அல்வாவோடு, சிறிது மிக்சர் மற்றும் காபியையும் குடித்து, வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பலர் இன்றும் இப்பகுதியில் உண்டு.அசோகா அல்வா எனும் இனிப்பு சாம்ராஜ்யத்தை துவங்கி வைத்தவர், ராமய்யர் எனும் சமையல்காரர். 'வழக்கமான இனிப்புகளில் இருந்து, மாறுபட்டு இருக்கணும்; உடலையும் கெடுக்கக் கூடாது...' என்ற எண்ணத்தில் உருவானதே அசோகா அல்வா. அவரது காலத்தில், அசோகா அல்வா மற்றும் தூள் பஜ்ஜி ரொம்ப பிரபலம்; காலப்போக்கில், அசோகா அல்வா மட்டும் நிலைத்தது.திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா நடக்கும் போது, உலகமெங்கும் இருந்து இசை ரசிகர்கள், திருவையாற்றில் கூடுவர். 'செவிக்கு இசை; நாக்கிற்கு அசோகா என, பரவசத்தில் திளைத்திருப்பர், ரசிகர்கள். அப்போது, பார்சல் பொட்டலங்கள் அதிகம் விற்கும்...' என்கிறார் அசோகா அல்வா தயாரிப்பில், முன்னணியில் இருக்கும், ஆண்டவர் கடையை நடத்தி வரும், கணேச மூர்த்தி. கணேசமூர்த்தி தொலைபேசி எண்: 04362 260279 மற்றும் 261 902.- மு.ஆதவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !