இது உங்கள் இடம்
* காரணம் புரிந்தது! - பரிசு ரூ.1500என் கணவர் எப்போது வெளியூர் சென்றாலும், உணவு விடுதியுடன் கூடிய ஓட்டலில் தான் தங்குவார். சாதாரண ஓட்டல்களை விட, உணவு விடுதியுடன் கூடிய ஓட்டல்களில் கட்டணம் கொஞ்சம் அதிகம். அதற்காக, பலமுறை நான் அவரை கடிந்து கொண்டதுண்டு. சமீபத்தில், அவருடன் ஆந்திராவுக்குச் செல்ல நேர்ந்தது. தெலுங்கானா போராட்டம் காரணமாக திடீரென, 'பந்த்' அறிவித்துவிட, ஊரே முடங்கிப் போனது. சாதாரண ஓட்டல்களில் தங்கியிருந்தவர்கள் நிலை பரிதாபமானது. காபியோ, டீயோ, டிபனோ, சாப்பாடோ கிடைக்காமல், அவர்கள் பட்ட அவதி மகா கொடுமை. நாங்கள் தங்கி இருந்த ஓட்டலின் வெளி கேட் மூடி இருந்தாலும், உள்ளே எல்லாமே நேரம் தவறாமல் கிடைத்தது. என் கணவர், 'உணவு விடுதியுடன் கூடிய ஓட்டலில் தங்குவதற்கான காரணம் இப்போதாவது புரிந்ததா?' எனக் கேட்ட போது, வெட்கமாகி விட்டது எனக்கு! - கீதா கிருஷ்ணமூர்த்தி, மயிலாப்பூர்.* நல்வாக்கு வாங்க வந்த உறவுகள்! - பரிசு ரூ. 1000என் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், கடும் பண நெருக்கடியான சூழ்நிலையில் தனியார் மருத்துவமனை, பிறகு மதுரை அரசு மருத்துவமனையிலும், சிகிச்சை அளித்தோம். அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்களாக இரவு, பகலாக சிரமப்பட்டோம். அப்போதெல் லாம் உடன் இருக்கவோ, வந்து பார்க்கக் கூட எந்த உறவினர்களும் முன்வரவில்லை. தினமும் 50 ரூபாய் கூலி, சாப்பாடு கொடுத்து, வயதான ஒரு பெண்ணை ஊரில் இருந்தே அழைத்துச் சென்று, மருத்துவமனை யில் உதவிக்காக வைத்திருந்து சிகிச்சை பார்த்தோம்.எவ்வளவு பார்த்தும் சரியாக்க முடியாது என்பதால், டாக்டர்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல சொன்னதையடுத்து, வீட்டிற்கு அழைத்து வந்தோம். இந்த தகவலை என் அம்மாவிடம் கூட தெரிவிக்காமல், தாய்மாமாவிடம் மட்டும் கூறினேன். குடும்பமே கடும் மன வேதனையில் இருந்தபோது, என் மாமா, சித்தி உறவுகள் என 15 பேர், அம்மாவை பார்க்க வந்தனர். உறவினர்கள் வந்த ஆறுதலில் மிக்சர், காபி தயாரிப்பில் நான் கவனம் செலுத்தினேன். அப்போது என் அம்மாவிடம், 'அக்கா... நல்ல வாக்கு கொடு...' என, அம்மாவின் கையை பிடித்து தங்களது தலையிலும், தங்களது மகன்கள் தலையிலும் வைத்து ஆசி கூற சொல்லிக் கொண்டிருந்தனர்.அவர்களின் செயலை கண்ட நான், மனதால் இறந்தேன். எந்த உதவியும் செய்யாத, வந்து கூட பார்க்காத அந்த உறவுகள், நல்ல வாக்கு கேட்டதால், என் அம்மாவிற்கும், தான் இறப்பது புரிந்து விட்டது. அவர்கள் சென்ற பிறகு, என் அம்மாவை பிடித்துக் கொண்டு நான் அழுத அழுகை சொல்லி மாளாது. அன்பான உறவுகளே... உதவி செய்யுங்கள், இல்லாவிட்டால் ஆறுதலாவது கூறுங்கள். இதுபோன்று நல்வாக்கு கேட்டு, வெந்த புண்ணில் யாரும் வேலை பாய்ச்ச வேண்டாம். - கே.ராஜா, வேடசந்தூர்.* வண்டியை இரவல் கொடுக்கிறீர்களா? - ரூ.500 பரிசுநண்பன் ஒருவன், என், 'பைக்'கை இரவல் கேட் டான். 'அவசர வேலை இருப்பதால், இப்போது தர முடியாது...' என்றேன். பத்தே நிமிடத்தில் வருவதாக கூறிக் கெஞ்சினான். பெட்ரோல் விலை கருதி நான் மறுத்தேன். சிறிது நேரத்தில் என் வண்டியைக் காணாமல், அதிர்ந்து போனேன். அரை மணி நேரம் கழித்து, இரவல் கேட்ட நண்பன் சிரித்தபடி, பைக்குடன் திரும்பி வந்தான். இக்னீஷியனில் வேறு சாவி இருந்தது.'எப்படிடா சாவி தயார் செய்தாய்?' என்று நான் வினவ, 'சென்ற முறை நீ இரவல் தந்தபோது, பின்னாளில் நீ இடக்கு செய்தால் என்ன செய்வது என நினைத்து, கம்ப்யூட்டர் டூப்ளிகேட் சாவி தருமிடத்தில் தயார் செய்து வைத்து விட்டேன்...' என பதிலளித்தான். என் பிரச்னை நண்பனுடன் போனது. அடுத்தவரிடம் சாவி கொத்தை கொடுத்துச் செல்லும் அன்பர்கள் யோசித்தல் நலம்! - யு.ஏ.முனீர், உடுமலை.