இது உங்கள் இடம்!
கூட்டம் வேண்டாமே!நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில், பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தனர். அந்த சம்பிரதாய நிகழ்ச்சியில், பெண்ணின் குடும்பத்திலிருந்து நெருங்கிய உறவினர் உட்பட, மொத்தம் ஐந்து பேர்தான் இருந்தனர். ஆனால், மாப்பிள்ளை வீட்டிலிருந்து, 15க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகியிருந்தனர். அதில், மூன்று வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் அடக்கம்.நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அறிந்திராத குழந்தைகள், அங்கிருக்கும் பல பொருட்களை கேட்டு, அடம் பிடித்து, அனைவரின் கவனத்தையும், தங்கள் மீது ஈர்த்தனர். 'குழந்தைகள் பசும்பால்தான் குடிக்கும்...' என்று, பிள்ளை வீட்டார் கோரிக்கை வைத்தனர். அதை எதிர்பார்க்காத பெண் வீட்டார், தெரிந்தவர்கள் பலரை தொடர்பு கொண்டு, பசும்பால் ஏற்பாடு செய்வதில் நேரத்தை செலவழிக்க நேரிட்டது.இருவீட்டாரும் பேசி, ஒருவரையொருவர் சற்றே புரிந்து கொள்ளும் நிகழ்ச்சியில், பெண் வீட்டாரின் கவனம் வேறு திசைகளில் செலுத்தப்பட்டது கண்டு, வேதனையாக இருந்தது. பிள்ளை வீட்டார், ஒவ்வொரு வரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, காபி, டீ, ஜூஸ் என, பலவித பானங்களை ஆர்டர் செய்தனர்.பெண்ணிடம், மாப்பிள்ளை தனியாக பேசியபோது கூட, குழந்தைகள் அடம்பிடித்து, அவருடனேயே இருந்து விட்டதால், அமைதி யான சூழலில் மனம் விட்டு பேசும் வாய்ப்புகள் நழுவின. அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட பலவித குழப்பங்களுக் கிடையே, பெண் வீட்டார் சரியான முடிவை எட்ட முடியா மல், திருமணத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.இரு குடும்பத்தினர், ஒருவரையொருவர் ஓரளவு புரிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படும் இம்மாதிரி நிகழ்ச்சிகளில், பிள்ளை வீட்டார் சார்பில் கூட்டத்தை தவிர்த்து, குறைந்த அளவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வதால், வீண் குழப்பங்களும், பெண் வீட்டாரின் அசவுகரியங்களும் தவிர்க்கப்படும். எனவே, விவரம் அறியாத குழந்தைகளை, இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்கலாமே!— எஸ்.ராமன், சென்னை.இப்படியும் ஒரு திருட்டு!வசதி படைத்த என் தோழியின் சகோதரன், சமீபத்தில் தனியே வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது, ஒரு அழகான இளம்பெண் வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டிருக்கிறாள்.பிச்சைக்காரி போலில்லாமல், நவ நாகரிகமாய் இருந்தவளைப் பார்த்து, தோழியின் சகோதரன் மயங்கி, 500 ரூபாய் பணத்தைக் கொடுத்து, வீட்டின் உள்ளே அழைத்துபோய், தன் ஆசையைத் தீர்த்து கொண்டிருக்கிறார்.அந்தக்கணமே அந்த பெண், மொபைல் போனில் யாரையோ அழைக்க, இரண்டு ஆண்கள் அங்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். 'கையில், கழுத்தில் போட்டிருக்கும் நகைகள், பணத்தையெல்லாம் கொடுத்து விடு, இல்லையென்றால், பிச்சை எடுக்க வந்தவளை கற்பழித்து விட்டதாக ஊரைக்கூட்டி விடுவோம்...' என, அவர்கள் மிரட்ட, பிச்சைக்காரர்கள் வேஷத்தில் திட்டமிட்டு விபச்சாரம் நடத்தும், உண்மை நிலையை தாமதமாக உணர்ந்த தோழியின் சகோதரன், அதிர்ந்து போனார். குடும்ப கவுரவத்திற்காக பயந்த அவர், நான்கு சவரன் நகையையும், 5,000 ரூபாயையும் கொடுத்து, அவர்களை விரட்டியடித்திருக்கிறார்.வாசகர்களே... இந்த கலியுகத்தில், இப்படி எதுவும் நடக்கலாம். வரும் சூழ்ச்சியை உணராமல், அதில் விழுந்து சிக்கிக் கொள்ளாதீர்! — அ. துஷாலி, அறந்தாங்கி.உத்தம புத்திரன்!என் தோழி, சின்ன வயதில், நிறைய கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். கணவன் வருமானம் போதாததால், இவளும் வேலைக்குப் போய், சம்பாதித்து குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்தாள். அது தவிர, சொந்தபந்தங்களும் உதவின. இன்று, அவள் கணவர் இல்லை. வயதும் ஆகி, மூட்டு வலியால் அவதிப்படுவதால், வெளியே போவதில்லை.அவள் மகன் நல்ல வேலையில் இருந்து, அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான். அவள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, மாதா மாதம், அவள் கையிலும் கணிசமாக ஒரு தொகையைக் கொடுத்து விடுகிறான். 'எல்லா வசதியும் தான் செய்து கொடுத்திருக்கிறாயே... அதற்குமேல் பணமாகவும் ஏன் கொடுக்கிறாய்...' என்று, நான் அவனிடம் கேட்டபோது, அவன், 'ஆன்ட்டீ... ஒரு காலத்தில், என் அம்மா கஷ்டப்பட்ட போது, உற்றார், உறவினர் நிறைய உதவினர். இன்று, நாங்கள் நல்ல நிலைக்கு வந்து விட்டோம். அதனால், இப்போது பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று, அம்மா ஆசைப்படலாம்...'அவர்களுக்கோ, வெளியே போய் ஒன்றும் வாங்க முடியாது. அதனால், அவர்கள் விரும்பியவர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளச் சொல்லலாம். என்னிடம் நேரிடையாக பணம் கேட்க, அம்மாவின் தன்மானம் இடம் தராது... 'தவிர, எப்போதும் கையில் கொஞ்சம் பணம் இருந்தால், வயதானவர்களுக்கு அது மன நிம்மதியும், சந்தோஷமும் தரும். அதனால் தான் அம்மாவுக்கு, 'பாக்கெட் மணி' கொடுக்கிறேன்...' என்றான். இவனை மகனாக பெற்ற தோழியின் அதிர்ஷ்டத்தை, நான் மனதாரப் பாராட்டினேன்!— சாவித்திரி, சென்னை.தேவை அடையாள அட்டை!இல்லத்தரசிகளான நானும், என் தோழியும் ஷாப்பிங் சென்றிருந்தோம். என் தோழி, பில்லுக்குக் கொடுக்க, கைப்பையிலிருந்து பணம் எடுத்த போது, கூடவே ஒரு, 'ஐடென்டி கார்டும்' கையோடு வந்தது. எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டை கவனித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு ஏது, 'ஐடென்டி கார்டு? என வியந்த நான், அவளிடமே விசாரித்தேன்.'என் கணவருடைய, ஐ.டி.,கார்டின் நகல் இது. எதிர்பாராத விபத்தோ, பேச இயலாத அளவுக்கு திடீர் உடல்நலக்குறைவோ ஏற்பட்டால், என் கணவரை, பிறர் தொடர்பு கொள்ள வசதியாக, இதை என் கைப்பையில் எப்போதும் வைத்திருப்பேன்...' என்றாள் தோழி. அசத்தலான, இந்தச் செயலுக்காக, தோழிக்கு ஒரு சபாஷ் போட்டேன். மறுநாளே, என்னவரின் அடையாள அட்டையை நகல் எடுத்து, என் கைப்பையில் வைத்தேன். இல்லத்தரசிகளான வாசகியரே... இதைக் கடைப்பிடிப்பது, மிகவும் நல்லது.— ஆர்.கலைச்செல்வி, தாம்பரம்.