உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பணம், பகட்டு, பந்தா!

எனக்கு தெரிந்த பையன் ஒருவன், ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், 2,500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தான். நல்ல உழைப்பாளி. ஒரு ஆண்டு கழித்து, தெரிந்தவர்கள் மூலம், 5,500 ரூபாய் சம்பளத்தில், ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்தான். ஓவர் டைம் எல்லாம் சேர்த்து, 6,500 ரூபாய் வந்தது. அவனுக்கு ஒரே சந்தோஷம். அப்போதே இரண்டு மொபைல் போன் வைத்திருந்தான்.சில ஆண்டுகளுக்கு பின், கல்யாண பத்திரிகையுடன் வந்தான். செல்வ செழிப்பு தெரிந்தது, மனதிற்கு சந்தோஷம். கல்யாணத்தில் இரண்டு வீடியோ. 'அனாவசியமாக எதற்கு, இரண்டு வீடியோ...' என்று கேட்டதற்கு, அவன் அம்மா, ஒரே பையன் கல்யாணம், நன்றாக செய்யலாமென கடன் வாங்கி செய்வதாக சொன்னார்.சமீபத்தில், அவன் எனக்கு போன் செய்தான்... 'மேடம் என்னை வேறு ஆபீசிற்கு மாற்றி விட்டனர். சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. பழைய ஆபீசில், 20 ஆயிரம் வாங்கினேன்... அதை நம்பி, கல்யாணத் திற்கு நிறைய கடன் வாங்கி விட்டேன் என்றதுடன், இந்த வேலையை விட்டுவிடலாம் என்றிருக்கிறேன்...' என்றான்.இப்போது, அவன் மனைவி கர்ப்பம் வேறு. 'ஏதேனும் வேலை இப்போது கிடைக்கும்படி உள்ளதா?' என்றால், 'இல்லை' என்றான். நான், 'நல்ல கம்பெனி. இதிலேயே முயன்று முன்னேறப் பார் அல்லது வேறு எங்காவது நல்ல வேலை கிடைத்த பின், இந்த வேலையை விடு. சிக்கனம், சேமிப்பு இரண்டையும் மறந்து விடாதே...' என, அவனுக்கு அறிவுரை கூறினேன்.எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற இன்றைய தலைமுறை யின் செயல் கண்டு அதிர்ந்தேன். பணம் வந்த வுடன், பறக்க நினைக்காமல், பாதுகாக்க கற்று கொள்ளவும் வேண்டும்.— பிரபாஸ்ரீ, சென்னை.

காதலர்கள் இல்லாத பீச் அழகோ அழகு!

சமீபத்தில், சென்னையில் வசிக்கும் என் மாமா வீட்டிற்கு, குடும்பத்தோடு சென்று வந்தோம். இதுவரை கடலை பார்க்காத என் குழந்தைகளை, மெரினா பீச்சிற்கு கூட்டிச் செல்லுமாறு, என் மாமாவிடம் கேட்டுக் கொண்டேன். உடனே, அவரும், 'நாளை காலை, 5.00 மணிக்கு பிள்ளைகள் அனைவரையும் எழுப்பி, தயார் படுத்துங்கள்... போய்விட்டு வரலாம். அதோடு, காலை நேர கடற்கரையின் அழகை காண, அவர்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...' என்றார்.சொன்னபடியே, மறுநாள் அதிகாலை குழந்தைகளுடன், கடற்கரைக்கு சென்று, சூரியோதயம், மீனவர்கள் படகில் செல்லுதல், அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வோரை எல்லாம் காட்டி, விளக்கம் கூறியதோடு, வழியில் டிபன் வாங்கி கொடுத்து, 10.00 மணிக்கு வீட்டிற்கு கூட்டி வந்தார். பள்ளியில் படிக்கும் என் பிள்ளைகளும், என் தங்கையின் பிள்ளைகளும், தாங்கள் ரசித்ததை, புத்துணர்வோடு எங்களிடம் பரிமாறிக் கொண்டனர்.பிறகு நான், 'எல்லாரும் மாலை வேளையில் பீச்சிற்கு செல்ல விரும்புவர்... நீங்கள் மட்டும் ஏன், காலை வேளையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?' என, மாமாவிடம் கேட்டேன்.அவர் சொன்னார், 'நாம சின்ன பசங்கள முதல் முறையா பீச் பார்க்க கூட்டிட்டு போறோம். சாயங்கால வேளைல போனா, காதலர்களின் கண்றாவியான நடவடிக்கைகள், காவல்துறை கண்காணிப்பு, கண்ட கண்ட தின்பண்டங்கள் இதையெல்லாம் பார்த்து, அவர்களோட கவனத்தையும், கடல் ரசிப்பையும் திசை திருப்பி விடும். அதனால், காலைல போனா, கடல், கப்பல், சூரியன் மற்றும் உடற்பயிற்சி என, உருப்படியான விஷயங்களை பார்க்கலாமே...' என்றார்.அவரது அணுகுமுறையும், அனுபவமும் ஏற்கத்தக்கதாகவே இருந்தது.— எஸ்.சக்திவேல், சோழவந்தான்.

பதினெட்டு நிரம்பினால் பரிசு!

என் மகனுக்கு, 18 வயது நிரம்பியதை கொண்டாட, அவனுக்கு ஐந்து பரிசுகள் அளித்தேன். ஒன்று - டிரைவிங் ஸ்கூல் மூலம், அவனுக்கு போக்குவரத்து விதிகள் பற்றி பாடம் நடத்தி, பைக்; இரண்டு - இரு அரசுடமை வங்கிகளில், அவனுக்கு கணக்கு ஆரம்பித்துக் கொடுத்தேன்.மூன்று - அவனுக்கு சம்பாத் தியம் இல்லாவிட்டாலும், பான்கார்டு அப்ளை செய்து கொடுத்தேன்; நான்காவது - பாஸ்போர்ட் விண்ணப்பித்து, வாங்கித் தந்தேன்; ஐந்து - வாக்காளர் அட்டை அப்ளை செய்து, வாங்கிக் கொடுத்தேன். நீங்களும், உங்கள், 18 வயது மகன்களுக்கு, மேற்சொன்ன ஐந்து பரிசுகளை வழங்கி மகிழலாமே!— எம்.அலாவுதின், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !