உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

குடிகார கணவரா நீங்கள்?

என் அலுவலகத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை பெண் ஊழியரின் கணவர், சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி, கேட்டு, எப்படி இத்துயர செய்தியை, அப்பெண்ணிடம் பக்குவமாக கூறுவது; அவர் எப்படி இதை தாங்கிக் கொள்வார் என, பலவாறு சிந்தித்து, சில ஆண் ஊழியர்கள் கலந்து பேசி, பின், அப்பெண்ணை அழைத்து, தகவல் கூறினோம். அப்பெண், அச்செய்தியை மிக லேசாக எடுத்துக் கொண்டதுடன், ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் விட்டு விட்டு, விடுப்பு கடிதம் எழுதி தந்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார்.மறுதினம், சில அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், இறந்தவரின் வீட்டிற்கு சென்றோம். அப்பெண்ணே, எங்களை எதிர்கொண்டார். தன் கணவர் மிகப் பெரிய குடிகாரர் என்றும், அனுதினம் பணம் கேட்டு துன்புறுத்துவார் என்றும், மேல்நிலைப் படிப்பு படிக்கும் பெண் குழந்தை முன், செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதுடன், தகாத வார்த்தைகளால், வேறு ஒரு ஆண்மகனோடு இணைத்து பேசி அடிப்பார் என்றும், அனுதினம் செத்து பிழைத்தோம். என் பிரார்த்தனையை இன்று இறைவன் கேட்டு, கண் திறந்து விட்டார் சார்... இனி, நான் என் மகளுடன் குறைந்த வருவாய் என்றாலும், நிம்மதியாக வாழ்வை எதிர்கொள்வேன் என, பெருமூச்சு விட்டு பொருமினார். ஆறுதல் கூற சென்ற ஆண்களாகிய நாங்கள் தான், அழுது வருந்தினோம்; இப்படி ஒரு ஆண்மகனா என்று!இக்கடிதம், குடிகார கணவன், சந்தேகப் பேர்வழி கணவன்மார்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். நீங்கள் செத்து போனால் அழ, மனைவி, குழந்தைகள் வேண்டும். குடியைவிட்டுவிட்டு, வாழும் கொஞ்ச காலத்தில், மனைவி குழந்தைகளை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள். இல்லையேல், மேற்சொன்ன கதிதான் குடிகாரனாகிய உங்களுக்கும். — எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

மனித நேயம்...

எங்களுக்கு பக்கத்து தெருவில் குடியிருக்கும் நபர், தீபாவளிக்கு முன்தினம், துவைத்த துணிகளை தேய்ப்பதற்கு எடுத்துச் சென்றார். அங்கு துணிகளை தேய்த்துவிட்டு, தேய்த்த பெண்மணிக்கு தீபாவளி பரிசாக, 200 ரூபாய் வழங்கினார். அதோடு, முடி திருத்தகம் சென்றார். அங்கு கடந்த வாரம் தான் முடி வெட்டிக் கொண்டார். தீபாவளிக்காக மீண்டும் முடிவெட்டிவிட்டு, அவருக்கு கைலி, சட்டை ஆகியவைகளோடு, பணமும் கொடுத்து, தீபாவளி வாழ்த்துக் கூறினார்.ஐம்பது வயதான இவர், அதிகம் சம்பாதிப்பவர் இல்லையென்றாலும், அனைவரும் தீபாவளி கொண்டாடி மகிழ வேண்டும் என்ற மனித நேயத்துடன் செயல்பட்டதை, வெகுவாக வியந்து பாராட்டினேன். அவரிடம் கேட்கும்போது, 'நாம் வேலை செய்யும் இடங்களில், நமக்கு தீபாவளி போனஸ் வழங்குகின்றனர். அது, போல இவர் பணி செய்வது நமக்காக. ஆதலால், நாம் தான், 'போனஸ்' வழங்க வேண்டும்...' என்று கூறினார். இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடித்தால், மனித நேயம் வளரும்.— கே.குமார், ராமநாதபுரம்.

கறிக்கடை கலப்படம்!

நான் சொல்லப்போகும் பிரச்னை, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. எங்க ஊரில், பத்துக்கும் மேற்பட்ட மட்டன் கடைகள் உள்ளன. கறி தீர்ந்து விட்டால், புதிய ஆட்டை ரோட்டில் போட்டு, துடிக்க துடிக்க அறுப்பர். அது நல்ல ஆடா, சீக்கு பிடித்த ஆடா என ஆராய்ந்து, சுகாதார ஆய்வாளரால், சீல் குத்தப்பட்டதல்ல. தவிர, கடைகளில் வட்டவடிவ கட்டையில், மாமிச சப்பைகள் இருக்கும். இரு ஆட்டின் தொடைப்பகுதிகள் கொக்கியில் தொங்கவிடப்பட்டிருக்கும். நாம் அரைக்கிலோ மட்டன் கேட்டால், 300 கிராம் வரை தொடை கறியிலிருந்து அரிந்து, தராசில் இடுவர். மீதி இருநூறு கிராமுக்கு, கட்டை மீதிருக்கும் மாட்டுக்கறி மாமிசத்தை எடுத்து, தராசில் இட்டு, ஐநூறு கிராமாக்குவர். ஆட்டு மாமிசம் ரோஜா நிறத்திலும், மாட்டுமாமிசம் அடர் குங்கும நிறத்திலும் இருக்கும். இந்த கலப்படத்தை, நம் கண் முன்னே மூணு சீட்டுக்காரர் போல் செய்வர். இதனாலேயே நான் மட்டன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். மீறி வாங்கினால், தொங்கும் ஆட்டு சப்பையை அப்படியே எடைபோட்டு வாங்கி விடுவேன் அல்லது தலை மற்றும் சுட்டு ரோமம் நீக்கிய ஆட்டுக்கால்கள் வாங்குவேன். என் சந்தேகம் நியாயமானதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.— பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !