இது உங்கள் இடம்!
போதையில்லா நட்பால் பயன் இல்லையா?என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். 'ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை. என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, 'உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, 'கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, 'லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே... எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், 'ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், 'ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.***குழந்தைகளுக்கு மொபைல் தேவையா?என் தோழிக்கு ஒரே மகள். ரொம்ப செல்லம். மகள் நச்சரிக்கவே, அவளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.நீண்ட நாட்களுக்குப் பின், தற்செயலாக ஒரு நாள், தன் மொபைல் போனில் சார்ஜ் இல்லாததால், மகளின் மொபைல் போனை வாங்கி பேசியவள், அவளது மெமரியில், ஏகப்பட்ட ஆபாச படங்கள் இருப்பதைப் பார்த்து, அதிர்ந்து விட்டாள். இத்தனைக்கும், தோழியின் மகள் ஏழாவது தான் படிக்கிறாள். தோழி துருவித் துருவி விசாரித்த போது, டியூஷனில் படிக்கிற பசங்கள், ஏத்தி விட்டதாக சொல்லியிருக்கிறாள். தோழி என்னிடம் விஷயத்தை சொன்னாள்.இருவரும் அவளுக்கு புத்தி கூறி, 'கவுன்சிலிங்' செய்தோம். அவள் கவனத்தை, இறை வழிபாட்டில் திருப்பினோம். 'இதையெல்லாம், தெரிந்து கொள்ள வேண்டிய வயதில், தெரிந்து கொள்ளலாம். இப்போது படிக்க வேண்டிய வயது. படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்து' என்றோம். இப்போது, டியூஷனை மாற்றி, மொபைல் போனுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டு விட்டது.தன் குழந்தைகளுக்கு, மொபைல் போன் வாங்கிக் கொடுக்க நினைக்கும் பெற்றோர், இதை எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் செல்லம் காட்டுவதுடன், கண்காணிப்பும், கண்டிப்பும் அவசியம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.— சாந்தினி ரவி, காரைக்குடி.திருமண வரவேற்பு விழாவில், மரக்கன்று வினியோகம்!மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என, நகராட்சி, பேரூராட்சி, நெடுஞ்சாலை துறை உட்பட, அனைத்து அரசு அலுவலக சுவர்களில், அரசு சார்பில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த வாசகங்களை படித்து, எத்தனை பேர் மரம் வளர்க்கின்றனர் என்பது, இதுவரை தெரியவில்லை.என் நண்பர், இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. கிராமம் மற்றும் நகர்ப்புறத்திலிருந்து உறவினர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.திருமணத்திற்கு வந்தோருக்கு, புளியமரம், வேப்ப மரக் கன்றுகள் உட்பட, 13 வகையான மரக்கன்றுகளை பையில் போட்டு, தாம்பூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து, என் நண்பர் கூறும் போது, 'தேங்காய் கொடுக்கும் செலவே, மரக்கன்றுகள் கொடுப்பதற்கும் ஆகிறது. இப்படியாவது, மரம் வளர்ந்து மழை பெறுவதற்கு, என்னால் முடிந்த காரியத்தை செய்து உள்ளேன் சிலருக்கு, மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும் என்று தெரிவது இல்லை. இங்கு இலவசமாக மரக்கன்றுகள் கொடுப்பதால், அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்...' என்றார்.இனிவரும் காலங்களில், இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய், பழத்திற்கு பதிலாக, ஆளுக்கொரு மரக்கன்று கொடுத்தால், மரம் வளர்ப்பதும், மழை பெறுவதும் எளிதாக இருக்கும்.இந்த ஐடியாவை எல்லாரும் கடைப்பிடிப்பரா?— பி.நாராயணன், திருத்தணி.