இது உங்கள் இடம்!
தீராத கோபம் யாருக்கு லாபம்!எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், 'மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.எல்லா மாணவர்களும், ஒரே குரலில், 'ஆமாம்...' என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, 'மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன...' என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்...' என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். பின், அவர்களிடம், 'இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, 'இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை - பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்...' என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!-- எம்.பூபதி, மதுரை.அஞ்சல் வழி அன்புசென்னையில் இருக்கும் உறவுக்காரரின் மகள் திருமணத்துக்கு, உறவினர்கள் புடைசூழ சென்று வந்தோம்.அடுத்த வாரமே, அங்கிருந்து, எங்கள் அனைவருக்கும், தனித்தனியே கடிதம் வந்தது.'திருமணத்திற்கு வந்திருந்து, சிறப்பாக நடத்தி வைத்ததற்கு நன்றி. அந்நேர அவசரத்தால், தங்களுக்குச் செய்ய வேண்டிய விருந்தோம்பலில், ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால், மன்னியுங்கள். இன்னொரு முறை, தாங்கள் நிதானமாக வந்து, தங்கி, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும்...' என்று, பெண்ணின் பெற்றோர் எழுதியிருந்தனர்.கல்யாணத்துக்கு வந்த அனைவருக்கும், சோம்பல் படாமல் இப்படி கடிதம் எழுதியது மட்டுமல்லாமல், மணமகன், மணமகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும், பிரின்ட் போட்டு, ஒவ்வொருவருக்கும் அனுப்பியிருந்தனர். இத்தனைக்கும், இருவருமே வேலைக்குப் போகிறவர்கள்.கல்யாண வீட்டில், ஒவ்வொருவரையும் கவனிப்பது, இயலாத காரியம் தான். ஆனால், இப்படி ஒரு அற்புதமான கடிதம், அந்தக் குறையை இல்லாமல் செய்து விடுகிறது பாருங்கள்!- உ.சுல்தானா, கீழக்கரை.'குடி'யை தாண்டி வருவாயா?தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பர் ஒருவர், சமீப காலமாக, இரவு வேலை முடிந்ததும், நேரே வீட்டிற்குச் செல்லாமல், தெருமுனையில் உள்ள கடையின், படியில் அமர்ந்திருப்பதை கவனித்தேன். 'இரவு, 10:00 மணியை தாண்டியும், ஏன் வீட்டிற்கு செல்லாமல், இப்படி உட்கார்ந்து இருக்கீறீர்கள்?' எனக் கேட்டதற்கு. அவர் சொன்ன பதில், என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர், தினமும், இரவு வேலை முடிந்ததும் உற்சாக பானம் அருந்துவதால், வீட்டிற்கு சென்றதும், குழந்தைகள், அவர் மீது வரும் வாடை குறித்து விசாரிக்கின்றனராம். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாததால், இப்படி உட்கார்ந்திருந்து தாமதமாக போகிறாராம். குழந்தைகள் துாங்கிய பின், அவர் மனைவி, மொபைலில் அழைத்து, 'சிக்னல்' கொடுத்த பின் தான் வீட்டிற்குச் செல்கிறாராம்.குழந்தைகளின் பாசத்தையும், அன்பையும் தாண்டி, 'குடி' தேவைதானா? வேலை முடித்து, அப்பா எப்போது வருவார் என, ஏங்கும் பிள்ளைகளின் தவிப்பை, இது போன்ற அப்பாக்கள், இனியாவது தெரிந்து, திருந்துவரா? - வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.