உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

வேலியே பயிரை மேயலாமா?திருச்சிக்கு செல்வதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் தூங்கலாம் என்று காத்திருந்தேன். இரவு, 10:00 மணிக்கு, ரயில் கிளம்பியது. நேரம் ஆக ஆக, எங்கள் கோச்சில், ஒவ்வொருவராக தூங்க துவங்கினர். நானும், விளக்கை அணைத்துவிட்டு, பர்த்தில் படுத்துவிட்டேன். நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை போய், திரும்பும் போது, நான் கண்ட காட்சி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது!லோயர் பர்த்தில், மார்புச் சேலை விலகியது கூட தெரியாமல், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் அழகை, கள்ளத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தார் டி.டி.ஆர்., என்னைப் பார்த்ததும், சட்டென்று சுதாரித்த அவர், 'எல்லாரும் டிக்கெட் காட்டுங்க...' என்றார். இவர்களைப் போன்ற, 'ஜொள் மன்னர்'களை பொறுப்புள்ள பதவியில் அமர்த்தும் முன், ரயில்வே நிர்வாகம், தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.அகாலத்தில் எழுப்புவதால், ஆழ்ந்த தூக்கம் பறிபோய் விடுவதோடு, நேரம் கடந்து பரிசோதகர், தங்கள் பணியை செய்ய முற்படுவது, வேலியே பயிரைத் தாண்டுவது போல் உள்ளது.- பாலா சரவணன், சென்னை.உண்மை காதலுக்கு வயதில்லை!நீண்ட இடைவெளிக்கு பின், என் பழைய தோழியை சந்தித்தேன். நலம் விசாரித்து கொண்டிருக்கையில், 'உனக்கு, 'மெனோபாஸ்' ஆகிவிட்டதா...' என்று கேட்டாள். 'இன்னும் இல்லை...'என்றேன். தனக்கு, 'மெனோபாஸ்' ஆகி, இரண்டு ஆண்டுகளாகிவிட்டது என்றும், யோகா, டயட் என்று எடுத்து கொண்டிருப்பதாகவும், என்ன இருந்து, என்ன பயன்... மனசு ஆரோக்கியமா இல்லையே... என்று வருத்தப்பட்டாள். 'ஏன், என்ன ஆச்சு...' என்றேன்.'இனி, வேலைக்கு ஆகமாட்டே, வயசாயிடுச்சு, எனக்கு அப்படி இல்ல. நாளுக்கு நாள், இளமை கூடுது, பவர் ஏறுது...' என்று, அவர் கணவர் கூறி, அலட்சியப்படுத்துவதாக கூறி வருத்தப்பட்டாள். நான், அவளுக்கு ஆறுதலும், தேறுதலும் கூறி, மனநல மருத்துவரை பார்க்கும்படியும் கூறி அனுப்பினேன். மனைவிக்கு வயது ஏறினால், கணவருக்கும்தானே வயது கூடும். இதில், மார்தட்டிக் கொள்ள என்ன இருக்கிறது! 65ல் வாங்கிய காரை கூட, விற்க மனமில்லாமல், ஷெட்டில் நிறுத்தி, 'பளீர்' என்று துடைத்து பழைய நினைவுகளோடு பார்த்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம். உயிரும், உணர்வும் உள்ள மனைவியை, இயற்கையாக நிகழும், மெனோபாஸ் விஷயத்திற்காக, புறக்கணிப்பது என்ன நியாயம்? இந்த வயதில் தானே மனைவி மீது, அதிக அன்பு செலுத்த வேண்டும்.ஆண்களே... பிரசவம், மாதவிடாய் இப்படி, பலவற்றுக்கு ரத்த அணுக்களை இழந்து, தியாகம் செய்து செய்தே உங்களுக்கும், வாரிசுகளுக்கும் உழைத்து ஓடாய் தேய்ந்து போகிறவள் பெண், அத்தகைய பெண் இனத்திற்கு, குறிப்பிட்ட வயதிற்கு பின், இயற்கை, தானாய் ஓய்வு கொடுத்து விடுகிறது. இந்த ஒய்வு உடலுக்குத்தானே தவிர, மனதுக்கல்ல. அதனால், மனதை நேசியுங்கள், மாறாதது, காதல்; காமமல்ல... புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே!- ராஜேஸ்வரி வெங்கட், சென்னை.உயிரோடு விளையாடலாமா!சமீபத்தில், உறவினர் ஒருவர், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில், அல்சர், பிரஷர், தலை சுற்றல் போன்ற பிரச்ரனைகளுக்காக, ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக, நானும், என் மூத்த சகோதரரும், ஐ.சி.யூ., அறைக்குள் சென்றோம்.அப்போது அவர், எங்களிடம், 'எனக்கு மயக்கமாக வருகிறது...' என்றார். அருகில் இருந்த நர்சிடம் கூறியபோது, அவர், 'திருதிரு'வென விழித்தார். காரணம், அந்த நர்ஸ், வட மாநிலத்தை சார்ந்தவர். ஐ.சி.யூ.,வில் உள்ள நோயாளி சொன்னது அவருக்கு புரியவில்லை. நாங்கள் அரைகுறை ஆங்கிலத்தில் கூறியும், சைகையில் விளக்கிய பின்னர் தான் அவருக்கு புரிந்து, பின், மருத்துவரை அழைத்து வந்தார்.தமிழே புரியாதவர்களை, இன்றியமையாத உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை அறைக்குள், பணியமர்த்தினால், நோயாளியின் நிலை என்னவாகும்? மருத்துவமனை நிர்வாகத்திற்கு இது, ஏன் புரியவில்லை?பயிற்சி பெறுபவர்கள், கல்லூரி மாணவிகள் என்று, என்ன தான் காரணம் கூறினாலும், ஐ.சி.யூ.,வில் பணியமர்த்த வேண்டுமா?மொழி தெரியாதவர்களை, ஐ.சி.யூ.,வில் பணிக்கு அமர்த்தி, உயிரோடு விளையாடும் விபரீத போக்கை மருத்துவமனைகள் உடனே நிறுத்த முன்வர வேண்டும்.- ஆ.சிவமணி, புன்செய்புளியம்பட்டி.பெற்றோர் மனம் குளிர்ந்தால்...மாத சம்பளம் வாங்கும், என் நண்பன், ஒவ்வொரு மாதமும், சம்பளம் வாங்கியவுடன், முதல் வேலையாக, தன் பெற்றோருக்கு குறிப்பிட்ட தொகையை, அனுப்பிவிட்டு, அதன்பின், மீதிப் பணத்தை, தன் செலவிற்கு உபயோகப்படுத்துவதாக, கூறினான். அவனது வருவாயோ, குடும்ப செலவு, குழந்தைகள் பள்ளி கட்டணம், டியூஷன் கட்டணம், வீட்டு வாடகை, வட்டிப்பணம் இவைகளுக்கே பற்றாக்குறை நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில், பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவது அவசியமா, எனக் கேட்டேன்.அதற்கு அவன், 'எனக்கு எவ்வளவு தான் பிரச்னைகள் இருந்தாலும், சம்பளம் வாங்கியதும், முதலில், என் பெற்றோருக்கு பணம் அனுப்புவதால், ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. அதனால், எனக்கு ஏற்படும் பிரச்னைகளும் எப்படியோ தீர்ந்து விடுகின்றன. இதனால், வாழ்க்கையில், ஒரு நிறைவும், சந்தோஷமும் ஏற்படுகிறது...' என்று கூறினான்.இதை கேட்டதும், நானும் அவ்வாறு செய்து வருகிறேன். இன்றுவரை, நானும் சந்தோஷமாக வாழ்கிறேன். ஆகையால், நீங்களும் அவ்வாறு செய்து பாருங்கள். நிம்மதியான உறக்கமும், கவலையில்லாத சந்தோஷ வாழ்க்கையும் அமையும். வசதி படைத்த பெற்றோராக இருந்தாலும், அவர்களுக்கு பணத்துக்குப் பதிலாக, அவர்கள் விரும்பி உபயோகப்படுத்தும் துணி, காலணி மற்றும் விரும்பிச் சாப்பிடும் ஆகாரம் போன்றவை வாங்கிக் கொடுத்து, மனம் குளிர மகிழ்வியுங்கள்.- தமிழ் அரசன் முத்துக்குட்டி, திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !