உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம் !

வாடகை வீட்டில் இருந்தாலும் ... என் நண்பனை பார்க்க  வெளியூர் சென்றிருந்தேன். அந்த நேரம், என் நண்பன், ஆட்களை வைத்து, வீட்டிற்கு வெள்ளையும், கதவு, ஜன்னல்களுக்கு பெயின்டும் அடித்துக் கொண் டிருந்தார்.வெள்ளையடிப்பதை பார்த்த நான், 'என்ன... வீட்ல ஏதாவது விசேஷமா?' என்று கேட்டேன். 'இல்ல... வீட்ட காலி பண்ணப் போறேன்...' என்று சொன்னான்.இதை கேட்ட நான், அதிர்ச்சி கலந்த ஆச் சரியத்துடன், 'டேய்... வீட்ட காலி பண்றேன்னு சொல்ற... அப்புறம் ஏன் வீட்டிற்கு பெயின்டிங் எல்லாம் பண்ற?' என்று கேட்டேன்.'இந்த வீட்டுக்கு நான் குடி வரும் போது, இது புது வீடு. நான்தான் முதன் முதலா குடி வந்தேன். அப்போ இந்த வீட்ட ஒயிட் வாஷ், பெயின்ட் செய்து,  ரொம்ப அழகா கொடுத்தாங்க.'நாம காலி பண்ணும் போது, அவுங்க கொடுத்த மாதிரியே, அழகா பெயின்ட் பண்ணி கொடுக்கறது தானே முறை. நம்ம வீடா இருந்தா நாம சும்மா விட்டுடுவோமா?' என்று நண்பன் சொன்னதை கேட்டு,  அவனை பெருமையுடன் பார்த்தேன். இப்படி வாடகை வீட்டில் இருக்கும் ஒவ் வொருவரும் நடந்து கொண்டால், குடியுருப்பவர் களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையே நல்லுறவு வளரும்; வீட்டு வாடகையும் அவ்வப் போது உயர்வது நிற்கும். — நூர்தீன்,  திருப்பூர்.வாழ்த்து அட்டை கொடுப்போரே...சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணம் மிக அருமையாக நடந்தது. மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டி முடித்த உடன், சாக்லேட்  வைத்த வாழ்த்து அட்டை ஒன்றை எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த அட்டையின் பின்பக்கத்தில் சில சாமி படங்கள் இருந்தன.  சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு, அந்த  அட்டையை எல்லாரும் தூக்கி எறிந்ததால், அதை அனைவரும் மிதித்து சென்றனர். நான் முஸ்லிம் தான் என்றாலும், மற்ற மதங்களையும் மதிக்கிறவன். சாக்லேட் கொடுத்த அட்டையில், பூ படம் அல்லது வெறும் அட்டையை கொடுக்கலாமே! ஒவ்வொருவரும் சாமி படங்களை மிதித்து விட்டு போனது என் மனதை வேதனைப்படுத்தியது. ஆசாமிகளுக்கு மரியாதை கொடுத்தால் மட்டும் போதாது; நாம் வணங்கும் தெய்வங்களுக்கும் மரியாதை தர வேண்டும்.— எ. டபிள்யூ. ரபீ அஹமத்,  சிதம்பரம்.இதற்கு கூடவா லஞ்சம் ?  இதற்கு கூடவா லஞ்சம்?சகோதரியின் இறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்றிருந்தேன். சம்பந்தப்பட்ட அலுவலர் அது இதுவென இழுத்து, வைட்டமின், 'ப'விற்கு அச்சாரம் போட்டார். இளம் வயது சகோதரியின் இழப்பில் இருந்த எனக்கு, இது மிகுந்த வருத்தத்தையும், கோபத் தையும் ஏற்படுத்தியது. உடனே, நான் அவரிடம், 'இப்போதே என்னோடு வாருங்கள். என் சகோதரி இறந்தது (வீட்டில் தான் இறந்தார். மருத்துவமனையில் அல்ல என்பதால் இந்த பிரச்னை.) உண்மை தானா என்று ஊரில் உள்ளவர்களிடம் விசாரியுங்கள். அதிலும், நம்பிக்கை இல்லை என்றால், அடக்கம் செய்து நான்கு நாட்களே ஆன என் சகோதரியின் பிரேத சவப் பெட்டியை வெளியே எடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது என்னோடு வந்து பார்த்து சகோதரியின் இறப்பை உறுதிபடுத்திக் கொண்டு, இறப்பு சான்றிதழ் தர வேண்டும். இல்லையென்றால், இறப்புசான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டதாக அலுவலக வாசல் முன் நின்று சத்தம் போடுவேன்...' என்று நான் கத்த,  அந்த அலுவலர் ஆடிப் போய் விட்டார்.மறுகணமே, கையெடுத்து கும்பிட்ட அலுவலர் இறப்பு சான்றிதழை வழங்கி விட்டார். இறப்பு சான்றிதழுக்குக் கூட லஞ்சம் கேட்கும் ஒரு தேசம் உண்டு என்றால், அது இந்தியாவாகத்தான் இருக்கும்.இப்படிப்பட்ட லஞ்சப் பேய்களுக்கு நாம் தான் சரியான கடிவாளம் போட வேண்டும். சாட்டையைச் சுழற்றுவோம் வாசகர்களே!— ஆர். ஜென்ஸி, அறந்தாங்கி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !