உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

புகைப்படம் எடுப்பவரிடம் ஜாக்கிரதை!சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன்; அங்கு, பலர் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன், பெண்கள் இருந்த பக்கமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், ஒரு பெரியவர் எழுந்து, 'தம்பி... நிறுத்து...' என, கத்தினார். சத்தம் கேட்டு, மண்டபத்தில் இருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.'இந்த ஆள்... மண்டபத்தில் உள்ள இளம் பெண்களையே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்...' என பெரியவர் கூற, அதற்குள் ஒருவர், அவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கி சோதித்தார். மண்டபத்தில் இருந்த அழகான பெண்கள் அனைவரும், அதில் பதிவாகி இருந்தனர்.அந்த ஆள், பெண் வீட்டை சார்ந்தவரா, பையன் வீட்டை சார்ந்தவரா என, விசாரித்த போது இருதரப்பினருமே அவரை தெரியாது என, சொல்லி விட்டனர். அடுத்த நிமிடம், அவனுடைய மொபைல் போனை உடைத்ததுடன், அவனுக்கும் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்தனர். 'எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ...' நாளைக்கே, புகைப்படம் எடுக்கப்பட்ட பெண்களை, ஆபாசமாக, 'மார்பிங்' செய்து மிரட்டலாம்.ஆகவே, கல்யாண மண்டபத்தில் மொபைல் போனில் புகைப்படம் எடுப்பவர்களை உடனுக்குடன் விசாரித்து, உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.- பெயர் சொல்ல விரும்பாத, பெங்களூரு வாசகி.தவறான ஊக்கம்!சமீபத்தில், ஒரு தனியார் பள்ளி ஆசிரியையும், ஒரு மாணவனின் தந்தையும் பேசிக்கொண்டதை கேட்க நேர்ந்தது. மாணவனின் தந்தை, அந்த ஆசிரியையிடம்,'இந்தப் பரிசை என் மகனுக்கு கொடுத்துடுங்கன்னு, நானே வாங்கி வந்து, உங்ககிட்டே கொடுத்திருந்தேனே... அதை ஏன் அவனுக்கு மேடையில கொடுக்கலை? அவன் ரொம்ப, 'அப்செட்' ஆகிட்டான்; உங்க செலவிலா பரிசு வாங்கிக் கொடுக்க சொன்னேன்... என் சொந்த பணத்தில வாங்கிய, 'கிப்ட்'டை கொடுக்கக்கூட உங்களுக்கு கஷ்டமா...' என்று கோபப்பட்டார்.அதற்கு அந்த ஆசிரியை, 'புரியாம பேசாதீங்க சார்...உங்க பையன், 'நான் போட்டியில தோத்துப் போயிட்டா எங்க அப்பா என்னை திட்டுவாரு. அதனால பயமா இருக்கு'ன்னு சொல்லி, அழுதான். அதனால தான், அவன போட்டிக்கு செலக்ட் செய்யல. போட்டியிலே கலந்துக்காம எப்படி சார் அவனுக்கு பரிசு கொடுக்குறது... அவன் போட்டியில கலந்து தோத்துப் போயிருந்தாக் கூட, ஆறுதல் பரிசுன்னு சொல்லி, நாங்களே ஒரு பரிசக் கொடுத்திருப்போம்.'முதல்ல உங்க பையனுக்கு தைரியம் சொல்லி, அவன போட்டியில கலந்துக்க ஊக்கப் படுத்துங்க. தோத்துப் போனா, அடிக்கவோ, திட்டவோ செய்யாம, அவனால முடியும்ன்னு தன்னம்பிக்கைய ஏற்படுத்துங்க... அப்புறம் பரிசப் பத்தி கவலைப்படலாம். பிள்ளைய சந்தோஷப்படுத்துறதுக்காக இப்படி சொந்த பணத்தில், பரிசுப் பொருளை வாங்கிக் கொடுத்தா, எதிர்காலத்துல அவன் தவறான வழியில தான் செல்வான்...' என்றார் அந்த ஆசிரியை!சிந்தியுங்கள் பெற்றோரே!— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.பள்ளியில் மருத்துவ மையம்!பொதுவாக, பள்ளிக்கூடங்களில் அறிவியல் ஆய்வுக்கூடங்களைத்தான் பார்த்து இருப்போம். ஆனால், புதுச்சேரி வாணரப்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில், மருத்துவ மையம் ஒன்றை திறந்து இருக்கின்றனர். மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதில், கவனம் செலுத்தி வருவது போல், மாணவர்களின் உடல் நலனிலும் அக்கறை கொண்டு, மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.இங்கு ஜுரம், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி, வயிற்று வலி உள்ளிட்டவைகளுக்கு, மருத்துகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் துவக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தில், ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவ உபகரணங்களை சுத்திகரிக்கும் ஆட்டோ கிளேவ், ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்க, நெபுலைசர் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் உள்ளன.பள்ளி இயங்குகிற நேரத்தில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில், ஒரு டாக்டரும், ஸ்டாப் நர்ஸ் ஒருவரும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதையே, முன்னுதாரணமாக எடுத்து, மற்ற பள்ளிகளும் மாணவர்களின் நலனை கருதி, மருத்துவ மையம் அமைக்க முன்வரலாமே!— நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !