இது உங்கள் இடம்!
மனைவிமார்களே... ஓர் எச்சரிக்கை!என் உறவுப் பெண், 48 வயதாகும் தன் கணவர் மிகவும் குண்டாக இருப்பதாக குறைபட்டுக் கொள்வார். அவரது எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஒரே மாதத்தில் எடை குறைப்பதாக கூறிய ஒரு கிளீனிக்குக்கு, தன் கணவரை அழைத்துச் சென்றார்.பரிசோதித்த மருத்துவர், இயற்கை மூலிகை சாறு என கூறி, ஒரு ஜூசைக் கொடுத்ததுடன், 'ஒரு வார பயிற்சி கட்டணம், 2 ஆயிரம் ரூபாய்; இந்த பயிற்சிக்கு பின் தான், நியூட்ரிசன் தேவையா, புரோட்டின் தேவையா என முடிவு சொல்ல முடியும்...' எனக் கூறி உள்ளார்.மனைவியின் தொல்லையால் தினமும் பயிற்சிக்கு சென்றும், மூலிகைச்சாறும் அருந்தியுள்ளார். அது, அவரது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல், ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் உரிந்து புண்ணாகி விட்டது. அதன்பின், அலோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து, குணமாகி வீடு திரும்புவதற்குள் அவர் பட்டபாடு சொல்லிமாளாது. அவரை காப்பாற்றி, வீடு திரும்ப, 25 நாட்களும், 65 ஆயிரம் ரூபாய் செலவும் ஆகிவிட்டது.தேவையா இந்த அவஸ்தையும், பண நஷ்டமும்!உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அத்தகைய பயிற்சியை உடனே விட்டுவிடவும். மீறி எடுத்தால், உறவுப் பெண்ணின் கணவர் பட்டபாடு தான் உங்களுக்கும்!— அ.செல்வி அருண், சிவராமபேட்டை.சபாஷ்!தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பனைக் காண, அவனது நிறுவனத்துக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் காத்திருந்த போது, தற்செயலாக எதிரே இருந்த நோட்டீஸ் போர்டை கவனித்தேன். அதில், 'நம் நிறுவனத்தில் பணிபுரியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பணியாளர்கள் யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகனச்சான்றிதழ், வாகன காப்பீடு போன்றவற்றின் நகல்களை கண்டிப்பாக நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்காத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டூவீலர் வைத்திருக்கும் பணியாளர்கள், அவசியம் தலைக்கவசம் வைத்திருக்க வேண்டும்...' என, அறிவுறுத்தி எழுதப்பட்டிருந்தது. தினமும் பலர், புதிதாக பணிக்கு வருவதால், இவ்விஷயத்தில் நிர்வாகம், அவர்களது நலன் கருதி கண்டிப்புடன் இருப்பது, நண்பன் மூலம் தெரிந்தது.ஒரு தனியார் நிறுவனம், தன் பணியாளர்களில் நலனை கருத்தில் கொண்டு, இப்படி ஒரு கட்டாயத்தை கடைப்பிடிக்கும் போது, லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட அரசு, கட்டாயப்படுத்தி ஏன் செயல்படுத்தக்கூடாது? அரசும், பிற தனியார் நிறுவனங்களும், தம் ஊழியர்களின் நலன் கருதி, இதை அமல்படுத்தலாமே! — உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.இப்படியும் உற்சாகப்படுத்தலாமே!தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அப்பா... நாளைக்கு காலைல உங்கள எங்க கிளாஸ் மிஸ் கூட்டிட்டு வர சொன்னாங்க...' என்று கூறினான். 'என்ன காரணம்...' என்று கேட்டதற்கு, 'தெரியாது' என்றான்.என்னவோ, ஏதோ என குழம்பிய நிலையில், மறுநாள் காலை, அலுவலகத்துக்கு விடுமுறை போட்டு, பள்ளிக்கு சென்றேன். என் மகனின் வகுப்பிற்கு சென்ற போது, என்னை வகுப்பிற்குள் வர சொன்ன அந்த ஆசிரியை, எல்லா மாணவர்களையும் எழுந்து நின்று கை தட்டச் சொன்னார். எனக்கு எதுவும் புரியவில்லை; உடனே என்னிடம், 'உங்க பையன் அழகா எழுதுறான்; நல்லா படிக்குறான்; ஒழுங்கா வீட்டுப்பாடம் செய்றான். அதோட போன மாசம், காமராஜர் பிறந்தநாள் அன்னிக்கு ஸ்கூல்ல நடந்த பேச்சு போட்டில கலந்துக்கிட்டு முதல் பரிசும் வாங்கிருக்கான்; அதை சொல்லவே உங்கள கூப்பிட்டேன்...' என்றார். மேலும், மாணவர்கள் பக்கம் திரும்பி, 'நீங்களும் இதே போல உங்க பெற்றோரை பெருமைப்படுத்தணும்...' என்றவர், என்னிடம், 'சிரமம் பார்க்காமல் வந்ததுக்கு நன்றி...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.பெற்றோரை அழைத்தாலே ஏதோ புகார் என்று பதற்றத்தை தரும் ஆசிரியர்கள் மத்தியில், அந்த ஆசிரியையின் புதுமையான நடவடிக்கை எனக்கும், என் மகனுக்கும் உற்சாகத்தை தந்தது.— பி.ராமச்சந்திரன், மதுரை.அட... இதுவும் கரெக்ட் தான்!என் தோழி, புது ப்ளாட்டில் குடி புகுந்தாள். புதுமனை புகுவிழாவுக்கு சென்றிருந்தேன். அந்த காம்ப்ளக்சில் நீச்சல் குளம், பார்க் மற்றும் 'ஏசி' ஜிம் என, வசதிகள் ஏராளம். வீடும் செம மாடர்னாக இருந்தது. இத்தாலிய டைல்சில் சமையலறை, டிசைனர் வார்ட்ரோப் என, படு அமர்க்களம். வீட்டை சுற்றி காண்பித்துக் கொண்டே வந்த போது, பாத்ரூம் மட்டும் இண்டியன் ஸ்டைலில் இருந்தது. 'ஏண்டி... வீட்டை இவ்வளவு பிரமாதமா கட்டிட்டு, டாய்லெட்டை மட்டும் ஏன் இண்டியன் ஸ்டைல்ல வச்சுருக்க; வெஸ்டர்ன் மாடலே வச்சிருக்கலாம்ல...' என்றேன்.'நமக்கு இந்தியன் டாய்லெட்டோட அருமை தெரியல; நம்மை அறியாமலேயே உட்கார்ந்து, எழுந்து உடற்பயிற்சி செய்றோம். நான் கர்ப்பமா இருந்தப்ப டாக்டர் என்னை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், இந்தியன் டாய்லெட்டையே, பயன்படுத்தச் சொன்னார். இது ஒரு வகையில, சுக பிரசவத்துக்கு வழி வகுக்குமாம். நம்ம பிள்ளைகளுக்கும், இதை உபயோகப்படுத்தி பழக்கணும்; அதான், உடம்புக்கும் நல்லது...' என்றாள்.அட, இதுவும் சரி தான்!-ஆர்.அம்பிகா, பழங்காநத்தம்.கடையில் பொது அறிவுப்போட்டி!எங்கள் ஊரிலுள்ள ஒரு பிரபலமான துணிக்கடைக்கு எங்கள் குடும்பம் மற்றும் உறவினர்கள் குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தோம்.பல்வேறு பிரிவுகளுக்கு சென்று, தேவையானதை தேர்ந்தெடுக்கும் போது, எங்களுடன் வந்திருந்த பள்ளியில் பயிலும் எங்கள் குடும்பத்து பிள்ளைகளை, 'கம்ப்யூட்டர் கேம் விளையாட வருகிறீர்களா...' என, அக்கடையின், ஒரு பகுதியில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர், அழைத்தார். கூடவே, 'உங்களுக்கு நிறைய பரிசுப் பொருட்களும் கிடைக்கும்...' என்றார். நாங் களும் குஷியுடன், 'எங்கள் குழந்தைகள் கலந்து கொள்வர்...' என தெரிவித்து, கம்ப்யூட்டர் முன் ஒவ்வொருவராக அமர வைத்தோம்.ஒவ்வொருவருக்கும், ௧௦ பொது அறிவுக் கேள்விகள் கேட்டனர். கேள்வியின் தன்மை வகுப்புக்குத் தக்கபடி மாறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு பதில் கீழே இருக்கும்; சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டும். எத்தனை பதில் சரியாக இருக்கிறதோ, அதற்குத் தகுந்தார் போல பரிசு என்ற நிபந்தனையுடன், பொது அறிவு போட்டி துவங்கியது.வந்திருந்த மூன்று பிள்ளைகளும், ஆளுக்கு ஒரு பரிசைப் பெற்றனர்; இது சந்தோஷமான நிகழ்வாக அமைந்தது.புத்தக அறிவு மட்டும் போதாது, அதையும் தாண்டி, நுாலகம் செல்ல வேண்டும்; செய்தித்தாள் படிக்க வேண்டும். பொது அறிவு நுால்கள் வாசிக்க வேண்டும் என்று இந்த போட்டி உணர்த்தியது. இந்த வித்தியாசமான பொது அறிவு, கேள்வி - பதில் போட்டியை நடத்தி வரும் கடை நிர்வாகிகளைப் பாராட்டிவிட்டு வந்தோம்.பிற வர்த்தக நிறுவனங் களும் இது போன்று நடத்த முன் வரலாமே!— எஸ்.ராமு, நிலக்கோட்டை.