உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம் !

எங்கே போய்விட்டது மனிதாபிமானம்!என் மகளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மகளோடு பேசிக் கொண் டிருக்கையில், ஒரு வயதான பெண் மணி வாசலில் வந்து நின்றார்.என் மகள் பதறியபடி, 'வாங்கம்மா... என்ன வேணும்?' எனக் கேட்டபடி உள்ளே அழைத்து வந்தாள். மெல்லிய குரலில் அவளிடம் அம்மூதாட்டி ஏதோ கூறினார்.அவசர, அவசரமாக ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு, மோர்விட்டு பிசைந்து, அதை, இரண்டு டிபன் பாக்சில் கட்டிக் கொடுத்து, 'வாங்க... நானே உங்களை கொண்டு போய் வீட்டில் விடுகிறேன்...' என்று கூறி, கைத்தாங்கலாக பிடித்து, அழைத்துச் சென்றாள். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவள், சொன்ன விஷயம் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன்.அம்மூதாட்டி எதிர் வீட்டில் குடியிருப்பவர். மகன், மருமகளுடன் தங்கியுள்ளார். இவருக்கும், இவரது மருமகளுக்கும் எட்டாம் பொருத் தம். இன்று அவளுக்கு என்ன கோபமோ, இவருக்கு சாப்பிட எதுவும் வைக்காமல், வேலைக்கு சென்று விட்டாள்.'இந்த அம்மாவுக்கு சர்க்கரையும், ரத்த அமுத்தமும்  உண்டு. மாத்திரை போட்டுக் கொண்ட சற்று நேரத்தில் சாப்பிட வேண்டும்.  ஒன்றுமே இல்லாத காரணத்தால், துடித்துப் போனவர்   அவர்கள் வளர்க்கும் நாய்க் காக தட்டில் வைக்கப்பட்டிருந்த  சோற்றை சாப்பிட்டு விட்டார்.'சாப்பிட்ட உடன் சிறிது ஆசுவாசம் கிடைத்து, டென்ஷனும் குறைந்த பின் யோசித்திருக்கிறார். நாய்க்குப் பசிக்குமே... அதற்காக சாப்பாடு கேட்டார்!' என்றாள் என் மகள்.மாமியார் கொடுமை என்று கேள்விப்பட்டுள்ளோம். இந்த மருமகள் கொடுமையை யாரிடம் போய் சொல்வது. மாமியாராகப் பார்க்க வேண்டாம்; மனுஷியாகப் பார்த்திருக்கலாமே! மனிதநேயம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?— என்.ராமமூர்த்தி, சேலையூர்.இறுதி ஊர்வலமே ஆயினும் எச்சரிக்கை தேவை!எல்லா ஊர்களிலும், இறுதி ஊர்வலங்களில் மலர் மாலைகளை பிணத்தின் மேலிருந்து எடுத்து வீசுகின்றனர். இறந்த பிணம் நோய் கிருமிகளின் கூடாரம் என்பர்... அதுவும்,  இறந்தவர் நோயாளி எனில், கிருமிகள் அந்த மாலைகளில் மிக அதிகமாக இருக்கும். அதை வீசி எறிவதால் அக்கிருமிகளால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, பிணத்தின் மீதுள்ள மாலைகளின் மீது கை வைக்காதீர்கள். என்ன தான் நமக்கு வேண்டியவராயினும், நோய்க் கிருமிகள் நம்மை தாக்காது இருக்குமா? ஊர்வலத்தில் மாலைகளை உயரமாகத் தூக்கி வீச, மின்சார ஒயர்களில் மாட்டிக் கொண்டு மின் வெட்டுக்கு வழி வகுக்கின்றனர். பட்டாசை கட்டுக் கட்டாக கைகளில் பிடித்து தூர வீசுவதால் தீவிபத்தும், தீக்காயங்களும் பலருக்கு ஏற்படுகின்றன. இறுதி ஊர்வலம் அமைதியாக, யாருக்கும் இடையூறு இன்றி நடக்க வேண்டும். இந்த இழி செயல்களால், மற்றவர்கள், இறந்தவர், அவர் தம் குடும்பத்தை அசிங்கமாகப் பேசக்கூடும். எனவே, இதிலும் கவனமாக இருக்கணும். அந்த காலத்தில் அறியாமையால் செய்ததை, இன்னும் தொடர்வது என்ன நியாயம்?— ம.நடராஜன், சேலம்.குளுகுளு நடைபாதை  அமைத்து தரலாமே!வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த என் மகன், மருமகள், பேரன், பேத்தியுடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கும், நிழல் விழாத கோபுர அதிசயத்தை பேரன், பேத்திகளுக்கு காட்டவும் சென்றோம். வழியில் சில கோவில்களை பார்த்த பிறகு, பிற்பகல் 11.30 மணிக்கு தஞ்சையை அடைந்தோம். கோவில் உள்ளே நுழைந்ததும், ஒரு ஜூஸ் கடையில் செருப்பை விட்டுவிட்டு சன்னதிக்கு செல்வதற்குள் கருங்கல் தரையில் சுட்டெரிக்கும் வெயிலில் பாதம் பட்டு, எரிச்சல் எடுத்து, மிக மிக சிரமப்பட்டோம். நாங்கள் மட்டுமா? எங்களை போன்ற சுற்றுலா பயணிகளில் வயதானவர்கள், குழந்தைகள் என்று எல்லாரும் பட்ட வேதனையை பார்த்து மனம் மிகவும் வருந்தியது. நடைபாதைக்கு நீண்ட கால் மிதி போட்டால், மக்கள் சிரமம் இல்லாமல் நடக்கலாம் அல்லவா? குஜராத்தில் சோம்நாத் கோவிலில் கூட, வெயில் நேரத்தில் நடந்து செல்ல, தென்னம் நாரினால் பின்னப்பட்ட கால் மிதியை நீள விரித்து, அதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, மக்கள் சிரமமில்லாமல் நடக்க வசதி செய்திருக்கின்றனர். காந்தி பிறந்த சபர்மதி ஆசிரமத்திலும் இதேபோல விரித்து இருக்கின்றனர். வட மாநிலங்களில் நிறைய கோவில்களில் மிதியடியை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் புராதானமான தஞ்சை பெரிய கோவிலில் வெயில் நேரத்தில் மக்கள் சிரமமில்லாமல் நடக்க, இந்து அறநிலைய அதிகாரிகளும், சுற்றுலா தலைமை அதிகாரிகளும் இதுகுறித்து ஆராய்ந்து மக்கள் வெயிலில் சிரமமில்லாமல் நடந்து சென்று, சாமி தரிசனம் செய்ய வழி செய்வரா?— ஆர்.ராஜலட்சுமி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !