இது உங்கள் இடம்!
வீட்டு வேலையும் கவுரவமானதே!சமீபத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் என் தங்கையை பார்க்கச் சென்றிருந்தேன். இருவரும் முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, மிக நாகரிக உடையணிந்த இளம்பெண் ஒருவர், சகஜமாக உள்ளே நுழைந்தவள், கைப்பையை ஓரமாக வைத்து, வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரம் கழுவி, மிஷினில் துவைத்த துணிகளை உலர்த்தி விட்டு, 'மடமட'வென கிளம்பி விட்டாள்.'யார் இந்தப் பெண்?' என்று தங்கையிடம் விசாரித்ததில், அவள் கூறிய விவரங்கள், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.பி.காம் படித்துள்ள அப்பெண், குடும்ப ஏழ்மையால் மேலே படிக்க வசதி இல்லாத நிலையில், வேலையும் கிடைக்காமல் இருந்துள்ளாள். தன் வீட்டிற்கு அருகில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பலர், வேலைக்கு செல்லும் பெண்கள் என்பதால், வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுவதை அறிந்த அப்பெண், பட்டதாரி பெண் என்றும் பாராமல், வீட்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளாள்.ஒரு வீட்டுக்கு, 2,500 ரூபாய் வரை வசூலிக்கும் அவள், 13 வீடுகளில் வேலை செய்கிறாள்.அத்துடன், மாலையில், குடியிருப்பவர் களின் குழந்தைகளுக்கு, ட்யூஷனும் எடுக்கிறார். தன் குடும்பத்திற்கு கண்ணியமான முறையில் வருவாய் ஈட்டித்தரும் இப்பெண், தற்போது, தன் தோழிகளையும், இவ்வேலைக்கு வரவழைத்துள்ளார்.எந்த வேலை செய்தாலும், உழைப்பே உயர்வானது என்று நினைக்கும் அந்த இளம் பெண்ணுக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.— ஏ.சங்கமித்ரா நாகராஜன், கோவை.உண்மையான அக்கறை!சமீபத்தில், என் நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கே, கல்லா அருகில், மாலை அணிவிக்கப்பட்ட ஒருவரது புகைப்படமும், அதனருகே உண்டியலும் இருந்தது. உற்றுப்பார்த்த போது, அது, சர்வர் புகைப்படம் என தெரிந்தது. அது குறித்து, ஓட்டல் முதலாளியிடம் விவரம் கேட்டேன்.அந்த சர்வர், பணிபுரியும் போது, திடீரென மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், அவருக்கு இரு குழந்தைகள் இருப்பதால், அவரது மனைவிக்கு சமையல் உதவியாளர் வேலை தந்து, அக்குடும்பத்துக்கு தன்னால் இயன்ற நிவாரண நிதியும் அளித்திருப்பதாகவும் கூறினார்.மேலும், அந்த சர்வர், வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்றவர் என்பதால், அவரது சேவையை நினைத்து, அவரது குடும்பத்துக்கும், பிள்ளைகளின் படிப்புக்கும் வாடிக்கையாளர்கள் உதவிட நினைத்தால் செய்யட்டுமே என்பதற்காக, அவரது புகைப்படத்தை மாட்டி, உண்டியல் வைத்திருப்பதாகவும் கூறினார்.அவரது மனிதநேயத்தை வியந்த நாங்களும், எங்களால் இயன்ற பணத்தை உண்டியலில் செலுத்தி, வேலையாளின் மேல் உண்மையான அக்கறை கொண்ட அவரையும் பாராட்டினோம்.முதலாளிகளே... இவரைப் போல் நீங்களும், உங்கள் பணியாளர்களின் நலன் கருதி ஆவன செய்ய முற்படுவீர்களா?— ஜி.சக்தி, திருப்பூர்.'வணக்கம் பலமுறை சொன்னேன்!'பொதுவாக, திருமணத்திற்கு சென்று வந்தவர்கள் சொல்லும் குறை, 'என்னை, யாருமே வாங்கன்னு சொல்லல... சரியாக, 'ரிசீவ்' செய்யல. வரவேற்பு சரியில்ல...' என்பதாகவே இருக்கும். மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் சடங்கு, சம்பிரதாய வேலைகளில் சிக்கி விடுவதால், இது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.சமீபத்தில், நான் சென்ற திருமணத்தில், மணமேடையில் அமரும் முன், மணமக்கள், தம் பெற்றோருடன் மேடையின் விளிம்பில் நின்று, நான்கு புறமும் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பு செய்ததில், மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதை, எல்லா திருமணங்களிலும் பின்பற்றினால், வரவேற்கவில்லை என்ற குறையில்லாமல் போய்விடுமே!- கவிதா, மதுரை