உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பயனுள்ள விடுமுறை!பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால், நாள் முழுவதும், 'டிவி' பார்ப்பதும், மொபைல் போனில் விளையாடுவதுமாக, வெட்டியாக பொழுதை போக்கினர், என் பிள்ளைகள்.இதனால், என் மொபைல் போனில் தினமும், 'வாட்ஸ் - ஆப்' மற்றும் 'பேஸ்புக்' மூலமாக வரும் அனைத்து புகைப்படங்களையும், லேப் - டாப்பில் பதிவிறக்கம் செய்து, அவற்றை, என் பிள்ளைகளிடம் கொடுத்து, இயற்கை, ஆன்மிக தலைவர்களின் கருத்து, உடல் ஆரோக்கியம் பற்றிய, 'டிப்ஸ்' பயனுள்ள வாழ்க்கை தத்துவங்கள், தலைசிறந்த கவிஞர்கள், அறிஞர்களின் வசனம் மற்றும் நகைச்சுவை டயலாக் என ஒவ்வொன்றையும் வெவ்வேறு தலைப்புகளில் பிரித்து, அதை, மைக்ரோசாப்ட் பவர் பாயின்ட்டில் போட சொன்னேன். இப்போது, பிள்ளைகள் ஒவ்வொரு தலைப்பையும், அருமையான, 'பவர் பாயின்ட் பிரசன்ட்டேஷனாக' மாற்றியுள்ளனர்.மேலும், அவர்களின் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்துள்ளனர். இதனால், அவர்களின் நேரம் வீணாவது குறைக்கப்பட்டு, புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்கின்றனர். இப்போது, அவர்களின் விடுமுறை, மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது.தினமும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் இதற்காக செலவழிக்க வேண்டும் என்றும், மாலையில் கண்டிப்பாக வெளியே விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளேன்.உங்கள் வீட்டு வாண்டுகளுக்கும், இதைப் பழக்கப்படுத்துங்களேன்!- ரா.ஸ்ரீதர், திருப்பூர்.மூன்று நாட்களுக்கு மேல் கூடாது!என் உறவினர் ஒருவர், அவருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை வந்து விட்டால், உடனே, உறவினர் யாருக்காவது போன் செய்து, வீட்டிற்கு வரவழைத்து விடுவார். இது, அவர் மனைவிக்கு தெரியாது. உறவினர் வந்து விட்டால், கணவன், மனைவி பேசாமல் இருக்க முடியுமா... பேசி விடுவர். சண்டை, சமாதானமாகி விடும்; உறவினரும் ஊர் திரும்பி விடுவார்.சண்டை வந்தால், உடனே சமாதானமாகி விட வேண்டும்; அதுதான் எல்லாருக்கும் நல்லது. விருந்து, மருந்து மட்டுமல்ல, சண்டையும் மூன்று நாட்களுக்குள் மேல் நீடிக்கக் கூடாது என்பார்.சிறு சிறு பிரச்னைகளை காரணம் காட்டி, பேசாமல் இருந்தால், வைராக்கியம் அதிகமாகி, இறுதியில், கணவன் - மனைவி பிரிவுக்கு காரணமாக அமைந்து விடும். ஜாக்கிரதை!— கோ.ருக்குமணி, கள்ளக்குறிச்சி.'காம்பவுன்ட்' விருந்து!சமீபத்தில், என் கணவரின் நண்பரைச் சந்திக்க, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். 'பிளாட்' முன் பந்தலிட்டு, குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து வலம் வந்தனர். 'என்ன விசேஷம்...' என்று கேட்ட போது, 'இன்று எங்களது, 'காம்பவுன்ட்' விருந்து...' என்றார், கணவனின் நண்பர். 'காம்பவுன்ட் விருந்தா...' என்று புரியாமல் விழித்தேன். 'எங்க, 'பிளாட்'டில் 10 குடும்பங்கள் இருக்கு; வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரும் ஒவ்வொரு வருஷமும், மே மாதம் ஏதாவது ஒரு நாள், எல்லாரும் ஒன்றாக சமைத்து, சாப்பிடுவது வழக்கம். அதோட, இந்த வருஷ கோடை விடுமுறைய கொண்டாட, நாங்க எல்லாரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லவும், ஒரு நாள் அனைவரும் திரைப்படம் ஒன்றுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்...' என்றார். 'ஆகா... இது அருமையான விஷயம்...' என்று பாராட்டினேன்.அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் வசிப்போர், தங்கள் குழந்தைகளின் விடுமுறையை இனிமையாக்குவதோடு, அவர்களிடையே நட்பு, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகளை வளர்க்க இது போன்ற நிகழ்ச்சிகள் வழிவகுக்கும். வெறுமனே புத்தகத்தில் இருக்கும் பாடத்தை மட்டும் கற்றுக் கொடுக்காமல், இதுபோன்ற உண்மையான உணர்வுகளை கற்றுக் கொடுத்தால், அவர்களின் வாழ்வில் உறவுகள் பலப்படும்.பெற்றோர்களே... அனைவரும் இதை பின்பற்றலாமே!— ந.விமலா, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !