இது உங்கள் இடம்!
கடலில் தூக்கிப்போட்டாலும்...அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் என் நண்பனைக் காண சென்றிருந்தேன். அங்கே கார்களை கழுவிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், மொபைல் போனில், யாருக்கோ பொறியியல் கணித பாட சந்தேகங்களை விளக்கியபடி இருந்தான். அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த நான், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்த போது, 'நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்; நல்ல மதிப்பெண்களை பெற்று, பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். என் தந்தை மட்டுமே சம்பாதிப்பதால், அது, குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில், படிப்பை விடவும் மனமில்லை. அதனால், பெற்றோரை தொந்தரவு செய்யாமல், என் செலவுக்காக, கல்லூரி விடுமுறை நாட்களில் இத்தகைய வேலைகளை செய்து சம்பாதிக்கத் துவங்கினேன். 'பத்து வண்டிகளை கழுவினால், மாதம், 5,000 ரூபாய் கிடைக்கும்; வார இறுதியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதன் மூலம், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. என் செலவு போக, வீட்டிற்கு, 5,000 ரூபாய் அனுப்புகிறேன். அவசரத்திற்கு தேவைப்படும் என்று சிறிது சேமிக்கவும் செய்கிறேன். நேர்மையாக இருப்பதால், இது போன்ற வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கிறது...' என்றான்.பிள்ளை என்றால், இப்படியல்லவா இருக்க வேண்டும்; திறமையுள்ளவனை கடலில் தூக்கி போட்டாலும், மூழ்காமல், ஒரு முத்தை எடுத்து வெளியே வருவான் என்று கூறுவர்; அது எவ்வளவு உண்மை என்பது இவனை பார்த்த போது புரிந்தது. மனதார அவனை வாழ்த்தினேன்!— ஏ.சி.வர்மன், சென்னை.பெயர் மாற்றத்தால் வரும் தடுமாற்றம்!இன்று, பலரும், 'நியூமராலஜி' ஜோதிடத்தை உண்மை என்று நம்பி, ஏமாறுகின்றனர். பெயர் மாற்றம் என்ற பெயரில், தங்கள் பெயரில் கூடுதலாக சில எழுத்துக்களை சேர்த்தால், தொழில் வளம், லட்சுமி கடாட்சம் மற்றும் கல்வி மேன்மை அதிகரிக்கும் என்ற வாக்குறுதிகளை நம்பி, பின்னாளில் ஏற்படும் பிரச்னைகளை, யாரும் நினைத்து பார்ப்பதேயில்லை. இது, எனக்கு பல கசப்பான அனுபவங்களை கொடுத்து விட்டது.ரவி ராகுல் என்ற என் மகன் பெயரை, 'நியூமராலஜி படி, ஸ்ரீரவி ராகுல் என்று மாற்றினால், சூப்பராக இருக்கும்...' என்று கூறியதை நம்பி, பணம் செலவழித்து, அரசாங்க கெஜட்டில் பெயரை மாற்றினோம். பின், பள்ளி ரெக்கார்டுகளில் மாற்றம் செய்து, எழுதச் சொன்னோம்; ஆனால், பல இடங்களில் மாற்றி தரவில்லை.இப்போதே இப்படி என்றால், இனிவரும் பொதுத்தேர்வு மற்றும் காலேஜ் டிகிரிகளிலும் கண் கொத்திப் பாம்பாக, கழுகுப் பார்வையுடன் கவனித்து, எல்லா ஆவணங்களிலும் தன் பெயர் சரியான ஆங்கில எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். இதை நினைத்த போது, இதுபோல பல குழப்பத்தை ஏற்படுத்தும், 'நியூமராலஜி' தேவையா என்று யோசிக்க வைக்கிறது.பெயரில் உள்ள சில ஆங்கில எழுத்துகளை மாற்றினால், எல்லாரும் அதைப் போலவே எழுதுவர் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அரசு ஆவணங்கள், ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு என்று, பல பதிவுகளில் குழப்பம் வந்துவிடும். பின், நடையாக நடக்க வேண்டும். சொத்து பத்திரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் பெயர் மாற்றம் தேவையா என்று யோசியுங்கள் வாசகர்களே!— ஏ.எஸ்.யோகானந்தம், கோபிசெட்டிபாளையம்.இப்படியும் ஒரு கொடுமை!சமீபத்தில், பழனி சென்றிருந்த என் நண்பர், தன் வேலையை முடித்து, இரவு, 10:00 மணியளவில், பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், 'நாங்கள் பேருந்து நிலையம் வழியாக தான் செல்கிறோம்...' எனக் கூறி, அவரை அழைத்துள்ளனர்; நண்பரும், யதார்த்தமாக அவர்களது வண்டியில் ஏற, இருவரும் அவரை நடுவில் உட்கார வைத்து, வண்டியை ஓட்டியுள்ளனர். ஆனால், வண்டி பேருந்து நிலையம் செல்லாமல், வேறு பாதையில் செல்ல, நண்பர், 'என்ன இந்தப் பாதையில் போறீங்க...' எனக் கேட்க, அவரை மிரட்டி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரிடம் இருந்த மொபைல் போன், பணத்தை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.செய்வதறியாது திகைத்த நண்பர், வழியில் ஒரு திருமண மண்டபத்தில் மணவறை அலங்காரம் செய்த ஒருவரிடம் மன்றாடி போன் வாங்கி, பழனியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு, அவரது வீட்டில் இரவு தங்கி, அடுத்தநாள் ஊர் வந்து சேர்ந்துள்ளார். வாசகர்களே... முன் பின் தெரியாத யாரிடமும், 'லிப்ட்' கேட்காதீர்கள்; அழைத்தாலும் செல்லாதீர்கள்!— வி.ஜெயக்குமார், கோவை.