இது உங்கள் இடம்!
'கட் - அவுட்' கலாசாரம் தேவையா?இப்போதெல்லாம் காது குத்து, பூப்புனித நீராட்டு விழா மற்றும் திருமணம் போன்றவற்றுக்கு முக்கிய சாலைகளில், 'கட் - அவுட்' வைப்பது பேஷனாகி விட்டது. என் உறவினர் வீட்டுப் பெண்ணின், பூப்புனித நீராட்டு விழாவிற்கு, இதேபோல் டிராபிக் சிக்னலில் பெரிய, 'கட் - அவுட்' வைத்தனர். ஆணும், பெண்ணும் இணைந்து படிக்கும் அவள் பள்ளிக்கு, அதன் வழி தான் செல்ல வேண்டும்; அப்பள்ளி மாணவர்கள், 'கட் - அவுட்'டை பார்த்து, அவளை கிண்டலடித்துள்ளனர்.இதனால், பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அழுது அடம் பிடித்ததால், வேறு வழி இல்லாமல், தற்போது வேறு பள்ளி மாற்றியிருக்கின்றனர். இதேபோல், திருமண, 'கட்- அவுட்'களை பார்த்து, 'இந்த பெண்ணுக்கு, மாப்பிள்ளை சரியில்லை; இந்த மாப்பிள்ளைக்கு, பொண்ணு சரியில்லை...' என்று, பலர் கிண்டலடிப்பதை கேட்டிருக்கிறேன். பெற்றோரே... வீண் விளம்பரம் தேவையா? உங்களது இந்த, 'கட் - அவுட்'கள், உங்கள் பெண்ணின் மனநிலையை எந்த அளவு பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!— சி.செல்லதுரை, மதுரை.மாயை வேண்டாமே!ஆடித்தள்ளுபடியில், வழக்கமாக துணி வாங்கும் கடையில், 400 ரூபாய்க்கு, ஒரு சுடிதார் வாங்கினேன். தற்போது, ஆடித்தள்ளுபடி முடிந்துள்ள நிலையில், ரொம்ப நாளாகவே, என் மனதில், ஆடித்தள்ளுபடி என்பது உண்மை தானா என்ற சந்தேகம் இருந்ததால், அதை சோதித்து பார்க்க, அதே கடைக்கு சென்று, நான் வாங்கிய சுடிதார் மாதிரி வேறு இருக்கிறதா என்று பார்த்தேன். வேறு கலரில் இருந்தது. கடை சிப்பந்தி கூறிய விலையைக் கேட்டதும், எனக்கு, தலை சுற்றியது. காரணம், ஆடித்தள்ளுபடியில், 400 ரூபாய்க்கு வாங்கிய சுடிதாருக்கு, 350 ரூபாய் விலை கூறினார். ஆடி தள்ளுபடி என்ற மாயையில் அகப்பட்டு, 350 ரூபாய் சுடிதாரை, 400 ரூபாய்க்கு வாங்கிய என் மடத்தனத்தை எண்ணி, தலையில் அடித்துக் கொண்டேன். தோழிகளே... சில பெரிய கடைக்காரர்கள் தவிர பெரும்பாலானோர், ஒன்றும் நமக்கு சும்மா தருவதில்லை. நம் ஆசையை தூண்டி, அவர்கள் அதில் குளிர் காய்கின்றனர் என்பதே உண்மை. ஆடித்தள்ளுபடி மாயையிலிருந்து வெளியே வாருங்கள்!— சு.பானுசுப்ரமணியன், சென்னை.நண்பனின் புத்திசாலித்தனம்!சமீபத்தில், என் நண்பரை சந்திக்க சென்றிருந்த போது, அவரது வீட்டில், அழகான மண் உண்டியல் இருந்தது. 'என்ன இது... உண்டியல் எல்லாம் வச்சிருக்கே...' என்றேன். 'அதுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்குப்பா...' என்ற நண்பர், 'என் பையன் தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்; அப்பள்ளியில், மாணவர்கள் தமிழில் பேசினால், அபராதம் கட்ட வேண்டும். அதனால், அங்கு தமிழில் பேச முடியாத சூழ்நிலை. தாய்மொழி மீது மதிப்பில்லாத அப்பள்ளியில், என் மகனை சேர்த்து, படிக்க வெச்சு பெரிய தப்பு செய்துட்டோம்ன்னு தோணுச்சு. இப்படியே விட்டால், தாய் மொழியில் மட்டுமல்லாமல், அவனோட சிந்தனை, செயல் கூட, நம் கலாசாரதிலிருந்து மாறிடும்ன்னு பயம் வந்தது.'அதற்கு பின்தான் என் மகனிடம், 'நீ பள்ளியில் இருக்கும் போதும் மட்டும் தான் ஆங்கிலத்தை உபயோகப்படுத்தணும்; மற்ற நேரங்கள்ல குறிப்பாக வீட்டில் இருக்கும் போது, ஆங்கிலம் கலவாத தமிழில் தான் பேசணும்ன்னு சொல்லிட்டேன்...' என்றார்.'அப்படின்னா இது, அபராத உண்டியல்ன்னு சொல்லு. ஸ்கூல்ல தமிழில் பேசினால் அபராதம்; வீட்டில் ஆங்கிலத்தில் பேசினால், அபராதம். பாவம்டா உன் பையன்...' என்றேன்.அதற்கு நண்பன், 'அவசரப்படாதே... இது அபராத உண்டியல் இல்ல; பரிசு உண்டியல். என் மகன் ஆங்கிலம் கலவாத தமிழ் பேசுகிற தினமெல்லாம், பரிசாக, 20 ரூபாய் தந்து, உண்டியல்ல போடச் சொல்றேன். இதனால, போன மாத தேர்வில் தமிழ் பாடத்தில், 40 மதிப்பெண்கள் எடுத்தவன், இந்த மாத தேர்வில், 70 மதிப்பெண்கள் எடுத்திருக்கான்...' என்றார் சந்தோஷமாக!என் நண்பருடைய புத்திசாலித்தனமான செயல் குறித்தும், தாய்மொழி மீது அவருக்குள்ள பற்றுதலையும் அறிந்து வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.வாசகர்களும் இதுபற்றி யோசிக்கலாமே!— விஜயநிர்மலன், சென்னை.நிஜமான தொண்டு!சமீபத்தில், எங்கள் பகுதியிலுள்ள அம்மன் கோவில் வாசலில், இலவசமாக நில வேம்பு கஷாயம் வினியோகித்தனர், சில பெண்கள். டெங்கு காய்ச்சல் அபாயமிருப்பதால், பலரும் போட்டி போட்டு வாங்கிப் பருகினர். நில வேம்பு எங்கே கிடைக்கும் எனத் தெரியாமல், அதில், கஷாயம் தயாரிக்கும் முறையையும் அறியாமல் விழிக்கும் நகர மக்களுக்கு, இவ்வாறு, அத்தியாவசியமான மருந்தை, இலவசமாக வினியோகிப்பது தான், உண்மையான சமூகத் தொண்டு!வீட்டு விசேஷம் மற்றும் கோவில் திருவிழாக்களில் அன்னதானம் செய்வோர், புளி மற்றும் தயிர் சாதம் மட்டும் வினியோகிப்பதுடன், ஆரோக்கியத்திற்கு உகந்த நீர் மோர், கற்றாழை சாறு, கீழாநெல்லி சாறு மற்றும் நிலவேம்பு கஷாயம் போன்றவற்றையும் வினியோகிக்கலாமே!வாசகர்களே... நாட்டு மருத்துவம் குறித்த விழிப்புணர்வூட்டும் இத்தகைய தொண்டை நாமும் செய்யலாமே!— மல்லிகா அன்பழகன், சென்னை.