உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பரந்த மனப்பான்மையை வளர்ப்போமே!பெரும் பணக்காரரான என் உறவினரின் மகளுக்கு வரன் தேடுவதாக அறிந்ததும், மருத்துவர், இன்ஜினியர், வெளிநாட்டில் பணிபுரிபவர் மற்றும் தொழிலதிபர்கள் என, உறவினர்கள் பலர், பெண் எடுக்க போட்டி போட்டனர்.இந்நிலையில், நகரில் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் தூரத்து உறவினர் மகனுக்கு, அவரது மகளை நிச்சயம் செய்யப் போவதாக அறிந்து, அதிர்ந்து போனோம். என் பெற்றோர் நேரில் சென்று விசாரித்த போது, பெண்ணின் தந்தை, என் அம்மாவிடம், 'அந்த பையன, ரொம்ப நாளா பாத்திட்டு வர்றேன். கடையை கண்ணும், கருத்துமா கவனிக்கிறான்; பெற்றோர் மீது அக்கறையாக இருக்கிறான்; எந்த கெட்ட பழக்கமும் இல்ல; எனக்கு மட்டுமில்ல, என் வீட்டில் எல்லாருக்கும் பையன ரொம்ப பிடிச்சிருந்ததால, நாங்களே, அவங்க வீட்டிற்கு சென்று, பேசி முடிவு செய்தோம்.'யாரோ ஒரு பணக்காரருக்கோ, பதவியிலிருக்கிற மாப்பிள்ளைக்கோ, என் மகளை கொடுக்குறத விட, நல்ல பையனுக்கு கொடுத்து, எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாமே...' என்று கூறியுள்ளார்.பணம், பணத்தோடு தான் சேரும் என்ற நடைமுறை கோட்பாட்டை மாற்றி, தன்னை விட வசதி குறைவானாலும், நல்ல பையனுக்கு, மகளை தாரை வார்க்க முன் வந்த அவரது பரந்த மனப்பான்மையை பாராட்டினோம்.— பி.சதீஷ்குமார், மதுரை.ஆசிரியர் நினைத்தால்...அரசு துவக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு, கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை; எவ்வளவு முயன்றும், அவனால் கணக்குகளை புரிந்து கொள்ள முடியவில்லை.எங்கள் கவலையை உணர்ந்த அவனது வகுப்பாசிரியர், ஒருநாள், எங்கள் வீட்டுக்கு வந்து, அவனை, பூங்காவுக்கு அழைத்து சென்றார். மரம், செடி மற்றும் பூக்கள் என, இயற்கையோடு தன்னை மறந்து விளையாடிய அவனிடம், 'இந்த செடியில், எத்தனை பூக்கள் இருக்குன்னு எண்ணு...' என்று கூறியுள்ளார்.அவன் சரியாக எண்ணி சொல்லியுள்ளான். 'இந்த மொத்தப் பூக்களில், நான்கை மட்டும் கழித்து விட்டால், மீதி எத்தனை இருக்கும்...' என்று கேட்க, உடனே அவன், நான்கு பூக்களை விட்டு விட்டு, மீதியை எண்ணி, சரியாக கூறியுள்ளான். தொடர்ந்து, 'அப்படியே இந்த மொத்த பூக்களில், ஐந்தைக் கூட்டினால், மொத்தம் எத்தனை பூக்கள் இருக்கும்...' என்று கேட்க, அதற்கும், சரியாக பதிலளித்துள்ளான். 'இந்த பூக்களை, இரண்டிரண்டாக பிரித்தால், மொத்தம் எத்தனை ஜோடி வரும்?' என்று கேட்க, சிறிது நேரத்தில் அதற்கும் சரியாக பதில் சொல்ல, 'இதுதான்பா கணக்கு... இதைப் பாட புத்தகத்துல படிக்கும் போது சிரமப்படுறியே...' என்று கூற, அவன் தெளிவடைந்தான்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்போது, கணக்கில், நூற்றுக்கு நூறு மார்க் வாங்குகிறான். இச்செயலை, நாங்கள் செய்திருந்தால் கூட, அவன் இவ்வளவு பக்குவம் அடைந்திருக்க மாட்டான். ஆசிரியர்கள் மனது வைத்தால், தரிசு நிலத்திலும், சாகுபடி செய்ய முடியும் என்பதை, நிரூபித்து விட்டார், அந்த ஆசிரியர்.இக்காலத்திற்கு இவர் போன்ற ஆசிரியர்களே தேவை!— எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஆச்சரியப்பட வைத்தார்!சமீபத்தில், என் நண்பர் மகளின், மஞ்சள்நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருப்பதால், உடன் வேலை செய்வோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, நிறைய பேர் வந்திருந்தனர்.சடங்கு ஆரம்பித்த சில நிமிடங்களில், 'ராணியை கூப்பிடுங்க...' என்று உரக்க குரல் கொடுத்தார் நண்பர். மண்டப வாசலில் நின்றிருந்த அப்பெண், மேடை அருகே வந்தவள், அருகில் வர, தயங்கி நின்றாள். காரணம், அவள், அவர்களது வீட்டில் வேலை செய்பவள்.நண்பரின் மனைவி, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, மேடை ஏற்றி, தன் மகளை அவருடைய காலில் விழ வைத்து, ஆசீர்வாதம் வாங்க வைத்தாள். அதை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, உடனே, நண்பரின் மனைவி, 'நானும், என் கணவரும் பணி நிமித்தமாக, அடிக்கடி வெளியூர் சென்று விடுவோம். அதனால், நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. என் மகளை பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கிய பெருமை, எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் ராணியையே சேரும்...' என்று, உணர்ச்சி ததும்ப கூறினார்.அதைக் கேட்ட நாங்கள் எல்லாரும் சிலிர்த்துப் போனோம்.— ஜெ.ஆர்.ஜோயல் ஜெபஸ்டின், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !