உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

விவசாயத்திலும் பெருவாழ்வு பெறலாம்!

சமீபத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில், என் கல்லூரி நண்பனை சந்தித்தேன். ஆள் பார்ப்பதற்கு, 'டிப் - டாப்'பாக உடையணிந்து, சொகுசு காரில் வந்திருந்தான். அவனை நலம் விசாரித்து, 'நல்ல வசதி தான் போல... எந்த ஐ.டி., கம்பெனியில் வேலை பாக்குற...' என்று கேட்டேன். 'ஏன் ஐ.டி.,யில வேலை பாத்தால் தான் சம்பாதிக்க முடியுமா... விவசாயம் செய்தால் சம்பாதிக்க முடியாதா...' என்றான்.ஆச்சரியத்துடன், 'உயர் படிப்பு படித்து பட்டம் வாங்கிய உன்னால எப்படி சேற்றில் இறங்கி கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியும்?' என்றேன்.'இப்படித்தான் எல்லாரும் படிக்கிறதே ஏதோ ஆபிஸ் வேலை பாக்கத்தான்ங்கிற மாதிரி நினைக்கிறாங்க. ஆனா, நான், என் படிப்பு கொடுத்த அறிவை விவசாயத்தில் புகுத்தி, என்ன பயிர் விளைவிக்கலாம், எவ்வாறு சாகுபடி செய்யலாம், சிறு தானியங்களில் அதிக மகசூல் பெறுவது எப்படின்னு சிந்திச்சு, அதன்படி செய்து நல்லா சம்பாதிக்கிறேன். நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு, அடுத்தவங்களுக்கு அடிமையாக வேலை செய்யாமல், சுத்தமான காற்றை சுவாசித்து, இயற்கை அழகை ரசித்தபடி விவசாயம் செய்கிறேன். அதோட, இதுவரை எங்களைத் தாங்கி பிடித்த, எங்கள் பரம்பரை தொழிலான விவசாயத்தை, அழியாமல் பாதுகாக்கிறேன்ங்கிற மன திருப்தியும் கிடைக்கிறது...' என்றான்.அவன் எண்ணத்தையும், முன்னேற்றத்தையும் பாராட்டி, வாழ்த்தினேன்.— எஸ்.பிரியா, திருப்பூர்.

காக்கா முட்டை விளையாட்டு தெரியுமா?

அரசுப் பள்ளி ஆசிரியரான என் நண்பரை சந்திக்க, மதிய உணவு நேரத்தின் போது, அவர் பள்ளிக்கு சென்றிருந்தேன்.அப்போது, மாணவர்கள் வரிசையில் நின்று, மதிய உணவை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை படும்பாட்டை பார்த்து வியப்படைந்தேன்.முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து, அதை, வானத்தை நோக்கி ஒவ்வொருவராக வீசினர். அப்போது, பள்ளிச்சுவற்றின் மீது அமர்ந்திருந்த காக்கா கூட்டம், கரு, தரையில் விழாதவாறு பறந்தபடியே வாயில் கவ்விப்பிடித்து, பறந்து சென்றது. இதைப் பார்த்து, கைதட்டி ரசித்து, சிரித்தனர், மாணவ - மாணவியர்.யாருடைய முட்டையின் கரு, மண்ணில் விழுகிறது, யாருடையது, கீழே விழாமல், காகம் கவ்விச் சென்றது என்ற போட்டியும் நடைபெற்றது. ஆசிரியர் அசந்த நேரம் பார்த்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர், மாணவர்கள்.இதுபற்றி, நண்பரிடம் கேட்டதற்கு, 'தினமும் முட்டையுடன், விதவிதமான கலவை சாதங்களை வழங்கி வருகிறது, அரசு. தினமும் முட்டை வழங்குவதால், பெரும்பாலான மாணவர்கள் அதை வெறுக்கின்றனர். இதனால், முட்டையின் எண்ணிக்கையை குறைத்து, அரசு பால் வழங்கலாம்...' என்றார். மதிய உணவுடன், முட்டை வழங்குவதில் மாற்றம் கொண்டு வர அரசு யோசித்தால், முட்டை வீணாவது குறையும்!— சோ.ராமு, திண்டுக்கல்.

மகிழ்ச்சியை முதியவர்களோடு பகிர்வோம்!

நவராத்திரி கொலுவுக்கு என் தோழியை அழைத்திருந்தேன். தன், வயதான மாமனார், மாமியாருடன் கொலுவிற்கு வந்திருந்த தோழி, பாட்டு பாடியதுடன், தன் மாமனார், மாமியாரை, 'டூயட்' பாட்டு பாட வைத்து, சூழ்நிலையை கலகலப்பாக்கினாள்.அத்துடன், 'சின்ன வயசுல இவங்க ரெண்டு பேரும் நல்லா பாடுவாங்க; ரொம்ப திறமைசாலிகள்...' என்று, மற்றவர்கள் முன், அவர்களை புகழ்ந்தாள். அதைக்கேட்டு, அம்முதியவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம்.இதுகுறித்து தனியாக என்னிடம் பேசிய தோழி, 'வயதானால் வீட்டில் முடங்க வேண்டிய அவசியம் இல்ல. இப்படி நாலு வெளி இடங்களுக்கு வந்தால், தனிமை உணர்வும், அதனால், ஏற்படும் விரக்தி மனப்பான்மையும் குறையும். அதனால தான், கொலு மற்றும் எந்த விசேஷமாக இருந்தாலும், என் மாமனார், மாமியாரையும் அழைச்சுட்டு போறேன்...' என்றாள்.எல்லாருக்கும் கொடுப்பது போல் அவர்களுக்கும் வெற்றிலை - பாக்கோடு, பரிசு பொருட்களை கொடுத்த போது, மகிழ்ச்சியுடன் என்னை ஆசிர்வதித்தது, மிகுந்த மனநிறைவை தந்தது. தற்கால சமூக வாழ்க்கையில், மாமியார்- மருமகளிடையே மனித நேய உறவுகள் உதிர்ந்து விட்ட நிலையில், அதற்கு இன்னும் உயிர் இருக்கிறது என்பதை என் தோழியின் மூலம் உணர்ந்தேன்.- ஆர்.லதா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !