உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மறதியா... ஓவியம் வரையுங்கள்!அரசு உதவி பெறும் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே, நான் வரைந்து காட்டும் படங்களை, மாணவர்களை வரைய வைப்பதில், நிறைய நடைமுறை சிக்கல்களை எதிர் கொண்டேன்.அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், 'நீங்கள் தூங்கச் செல்லும் முன், ஏதாவது ஒரு ஓவியத்தை வரைந்து பழகிய பின், தூங்கச் செல்லுங்கள்; அது, உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்துவதோடு, கல்வியிலும் ஜொலிக்கலாம்...' என்று, விஞ்ஞான ரீதியாக, நிரூபணமான உண்மையை, அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால், படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவ - மாணவியர் கூட, இன்று, ஆர்வத்துடன் படிப்பதுடன், நான் வரையும் படங்களை எளிதாக வரைந்து விடுகின்றனர்.ஆசிரியர்களே... கலைகளின் வழியாக, கல்வியை எளிமையாக கற்றுக் கொடுங்கள்; நிச்சயம் உங்கள் மாணவர்கள் அனைவரும் கல்வியில் ஜொலிப்பர்!— நா.உண்ணிகிருஷ்ணன், கோவை.இளைஞர்கள் தெருக்களில் சுற்றினால்...எங்கள் பகுதியில், எப்போதும் நாலு பசங்க சுற்றிக் கொண்டிருப்பர். காலை, மாலை என்றில்லாமல், சில சமயம் இரவு நேரத்தில் கூட, ஏதாவது ஒரு தெருவில், இவர்களை மொத்தமாக பார்க்க முடியும்.ஏதோ தலை போகிற பிரச்னையை, பேசி தீர்க்க முயல்கிறவர்கள் போல, விவாதித்தபடியே செல்வர்.'என்றைக்காவது ஒருநாள், சந்தேக கேசில், மொத்தமாக உள்ளே போக போகின்றனர்...' என்று, எரிச்சல்படுவேன்.இந்நிலையில், சமீபத்தில், என் நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு, இந்த நால்வர் அணி இருப்பதை பார்த்து, 'இவனுங்கள ஏன் உள்ளே விட்டீங்க; வெட்டிப் பசங்க...' என்றேன்.'இவங்க தான், இந்த பங்ஷனுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் எடுக்கறவங்க. முதல்ல இந்த வேலைய, வேறு ஒருத்தருக்கு தான் கொடுக்கறதா இருந்தேன். இவங்க வந்து, 'எங்களுக்கு நல்லா படம் எடுக்கத் தெரியும். வேலை இல்லாம இருக்கோம்; வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்டு, அவங்க எடுத்த படங்களை காட்டினாங்க; படம் நல்லா இருந்துச்சு. கேமரா, ஸ்டாண்டு உட்பட, எல்லா பொருளுமே, வாடகைக்கு தான் கொண்டு வந்திருந்தாங்க. ஆர்வமா இருக்கிறதோட, உள்ளூர் பசங்களாவும் இருக்கிறதாலே இவங்களுக்கே, 'ஆர்டர்' கொடுத்தேன்...' என்றார்.அவர்களை தவறாக நினைத்து விட்டோமே என்று வெட்கப்பட்டேன்.நண்பர்களே... நாலு பேர் ஒன்றாக பேசித் திரிவதை கண்டால், உருப்படாததுகள் என்று முணுமுணுக்காதீர்கள்; அவர்கள், தங்கள் எதிர்காலம் பற்றி திட்டமிடுவோராகவும் இருக்கலாம்!— எஸ்.சந்திரன், சென்னை.சொந்த தொழில் செய்பவருக்கு ஓய்வு பெற விழா!சமீபத்தில், என் நண்பரின் மகன், எனக்கு, 'இன்விடேஷன்' தந்து, 'அங்கிள்... அப்பாவுக்கு, 'ரிடையர்மென்ட்' விழா ஏற்பாடு செய்திருக்கேன்; கண்டிப்பாக வரணும்...' என்றான்.'உங்கப்பா மெக்கானிக் ஷாப் தானே வச்சிருக்கார்; இதுல எங்க, 'ரிடையர்மென்ட்' விழா...' என்று கேட்க, 'என்ன அங்கிள் இப்படி கேட்டுட்டீங்க... அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறையில வேலை செய்யறவங்களுக்கு மட்டும் தான், பணி நிறைவு ஓய்வு கொடுக்கணுமா... எங்க அப்பா போல, சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு உழைச்சு, தன் சொந்த முயற்சியால முன்னுக்கு வந்தவங்களுக்கும் பாராட்டு விழா நடத்தி கவுரவிச்சா, அவங்க மனசு, எவ்வளவு சந்தோஷப்படும். அதனால தான், என் குடும்பத்துல உள்ள எல்லாருமா சேர்ந்து, இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கோம். அப்பாவோட பிறந்த நாளன்று பணி நிறைவு விழாவையும் கொண்டாடப் போறோம். விழாவுக்கு பின், தொழிலை நான் கவனிச்சுக்கப் போறேன்...' என்றான்.இவரைப் போல், மற்ற பிள்ளைகளும், சொந்த தொழில் செய்யும் தன் தந்தைக்கு, இப்படி ஒரு மகிழ்ச்சியை அளிக்கலாமே!— பி.பிரேம்குமார், பெரம்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !