உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கற்பனையை தூண்டுங்கள்!சமீபத்தில், எங்களது குடியிருப்பு சங்கத்தின் சார்பாக, ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் களை கட்டின. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறுவர் - சிறுமியருக்கான கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், நிகழ்ச்சியை நடத்துபவர், ஒரு கதையை ஆரம்பிப்பார்; அதன் முடிவுகளை மாற்றி, புதிய கதையாக உருவாக்க வேண்டும் என்பதே போட்டி விதிமுறை. பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து, காகம், குடத்தில் கற்களை போட்டு நீர் அருந்திய கதை வரை, ஒவ்வொரு கதைக்கும் சிறார்கள், மாற்று கோணத்தில் சிந்தித்து, புதிய முடிவுகளை கூறி, பாராட்டு பெற்றனர்.இடையில், முயலும், ஆமையும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட கதையைக் கூறி, 'போட்டி எப்படி முடிந்தது, யார் ஜெயித்தது?' என்று நிகழ்ச்சி நடத்தியவர் கேள்வி கேட்டதும், ஒரு சிறுவன் எழுந்து, 'சார்... போட்டி தரையில நடந்ததா, தண்ணீரில் நடந்ததான்னு நீங்க கூறவேயில்லயே... தரையில் நடந்திருந்தால், முயல் ஜெயிக்கலாம்; சமயத்தில், ஆமையும் ஜெயிக்கலாம். ஆனால், போட்டி நீரில் நடந்திருந்தால், அதில், முயல் பங்கேற்கவே முடியாது. எனவே, உண்மையான சாம்பியன் ஆமையே...' என்று, அவன் கூறியதை கேட்டதும், பலத்த கை தட்டல். எவருமே எதிர்பார்க்காத விளக்கம் என்பதால், அனைவரும் மெய் சிலிர்த்தோம்.போட்டி நடத்தியவர், கலந்து கொண்ட அனைவரையும் கடைசியாக, பாராட்டி, பரிசுகள் வழங்கும் போது, 'இந்நிகழ்ச்சி நடத்தியதில் எனக்கு முழு திருப்தி; சிறுவர் - சிறுமியரிடம் ஒளிந்திருக்கும் கற்பனை திறனை வெளிக்கொண்டு வருவதும், படைப்பாற்றலை ஊக்குவிப்பதும் நம் கடமை. சமயம் கிடைக்கும் போதெல்லாம், பெற்றோரும், ஆசிரியர்களும் இதை தொடர்ந்து செய்யுங்கள்...' என்றார்.வளரும் சிறார்களின் கற்பனை திறனை ஊக்குவிப்பதன் மூலம், எதிர்காலத்தில், அவர்கள் கலைஞர்களாக, படைப்பாளிகளாக, அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக பரிமளிப்பர் என்பதோடு, அறிவார்ந்த சமுதாயம் உருவாகும் என்பது புரிந்தது!— வே.மகேஷ் ராஜன், தல்லாகுளம், மதுரை.எங்களால் முடிந்தது!தற்போதுள்ள கோடையின் கடுமையை உணர்ந்து, எங்கள் தெருவிலுள்ள அனைத்து வீட்டினரும் கலந்து பேசி, தினமும் ஒருவர், தன் வீட்டு வாசலில், தண்ணீர் பந்தல் வைக்க வேண்டும் என பேசி முடிவெடுத்தோம். அதற்கு ஆகும் செலவை தெருவாசிகளாகிய நாங்களே பிரித்து செலவழிக்கிறோம்.தற்போது, எங்கள் தெரு வழியாக செல்லும் பாதசாரிகள் பயன் பெறுவதுடன், நன்றியோடு வாழ்த்தியும் செல்கின்றனர்.வசதியும், மனமும் உள்ளவர்கள், கடுமையான வெயில் வாட்டும் இந்த ஒரு மாதத்திற்காவது, இதுபோன்று முயற்சித்து பார்க்கலாமே!— ஆனந்த் சீனிவாசன், பெருங்களத்தூர், சென்னை.கை கொடுத்த உபரி பணம்!அரசு ஊழியரான என் உறவினர் மிகவும் நேர்மையானவர். லஞ்ச லாவண்யம், வேலையில் ஓ.பி., அடிப்பது எதுவும் கிடையாது. படித்து முடித்த காலத்தில், வேலை கிடைக்கும் வரை, ஒரு கடையில் சேர்ந்து, எலக்ட்ரிகல் வேலைகளை கற்றிருந்தார்.வேலை கிடைத்த பின், விடுமுறை நாட்களில் தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளில் எலக்ட்ரிகல் வேலை ஏதும் இருந்து அழைத்தால், செய்து கொடுத்து, கொடுப்பதை வாங்கிக் கொள்வார்.உபரியாக கிடைத்த அந்த சொற்ப பணத்தை தனியாக சேமித்து வந்தார்; அப்பணம், சமீபத்தில் நடந்த, அவர் மகன் திருமண செலவுக்கு, மிகவும் உதவியாக இருந்தது. கூடுதல் பணம் தானே என்று ஊதாரித்தனமாக செலவழிக்காமல், பொறுப்புடன் சேமித்ததால், கடன் வாங்கும் அவசியம் இல்லாமல், நல்ல முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.வேலையில் இருந்தாலும், கூடுதலாக கைத்தொழில் ஒன்றை அறிந்து வைத்திருப்பது, என்றாவது ஒருநாள் உதவும் என்பதை உணர்ந்து, இப்போது, நானும், 'பேப்பர் கப்' செய்து பழக ஆரம்பித்துள்ளேன்.— எஸ்.வாசன், சேலையூர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !