இது உங்கள் இடம்!
ஆறு, குளங்களில் குளிக்கும் போது...அலுவலக நண்பனின் திருமணத்திற்காக, பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அவனது ஊருக்கு, குழுவாக சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம் என்றாலும், ஊரை சுற்றிப் பார்க்கும் ஆவலில், இரண்டு நாள் முன்னரே, சென்று விட்டோம்.காலையில் குளிப்பதற்காக எங்களை குளத்துக்கு அழைத்துச் சென்றான், நண்பன். தினமும் பாத்ரூமில் காக்கா குளியல் போடும் எங்களுக்கு, அது அலாதியான அனுபவமாக இருந்தது; ஆசை தீர குளித்தோம். கரையேறும் போது அங்கிருந்த பெரியவர், 'ஒரு பிடி மண்ணை எடுத்து, கரையேறுங்க...' என்றார். 'இதென்ன புது சடங்கு...' என்று, நாங்கள் ஆச்சரியமாக பார்க்க, அவரே விளக்கினார்...'அந்தக் காலத்துல எல்லாரும் ஆத்துல, குளத்துல குளிக்கிறது தான் வழக்கம். குளிச்சுட்டு கரையேறும்போது, ஒரு பிடி மண்ணை எடுத்து, கரையில வைச்சுட்டு வருவாங்க. இப்படி செய்தா, தூர் வார்றது தானா நடந்துடும்; அரசாங்கம் எப்ப செய்யும்ன்னு காத்திருக்க வேணாம் பாருங்க...' என்றார்.மிகப் பெரிய பணியை, எத்தனை எளிமையாக, நம் முன்னோர் செய்திருக்கின்றனர் என்பதை அறிந்து, ஆச்சரியமடைந்தேன்.— அஜித், சென்னை.கட்டட மேஸ்திரியின் மனிதாபிமானம்!எங்கள் வீட்டில் புதிய கட்டட பணிகள் நடந்து வருகின்றன. வேலைக்கு வந்திருந்த பெண் தொழிலாளி ஒருவர், கட்டட மேஸ்திரியிடம் சென்று, 'இன்னிக்கு ரெண்டு பேருக்கு மாத விலக்கு...' என்று, மெல்லிய குரலில் கூறினார்.அதைக்கேட்ட மேஸ்திரி, 'அவங்க ரெண்டு பேருக்கும் கஷ்டமான வேலை எதுவும் கொடுக்க வேணாம்; இலகுவான வேலை மட்டும் செய்யட்டும்... அவங்க வெயில்ல நின்னு, வேலை செய்ய வேணாம்...' என்றார்.மேஸ்திரி அங்கிருந்து சென்ற பின், அப்பெண் என்னிடம்,'மாதவிலக்கோடு வேலைக்கு வரும் பெண்கள் விவரத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லணும்ன்னு சொல்லியிருக்கார், மேஸ்திரி. அவங்களுக்கெல்லாம் மூணு, நாலு நாளைக்கு கஷ்டமான வேலை கொடுக்க மாட்டார்...' என்றாள்.கூலி தொழிலாளி தானே என்று அலட்சியம் செய்யாமல், அவர்களிடம் பரிவை காட்டும் கட்டட மேஸ்திரி, என் மனதில் உயர்ந்து நின்றார்.— வி.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்.புகையிலை பழக்கத்தை விடுவது எளிது!புகையிலை பழக்கத்திற்கு அடிமையான, என் கணவரை மீட்டெடுத்த விஷயத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...என் கணவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்ததால், தொலைக்காட்சியில் வரும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு விளம்பரங்கள் என்னை பாதித்தது. அப்போது, எனக்கு ஒரு யோசனை தோன்ற, உடனே, என் கணவரை அழைத்து, இரண்டு கிராம்புகளை கொடுத்து, வாயில் வைத்திருக்க சொன்னேன். முதலில் தயக்கம் காட்டி, பின், கிராம்புகளை வாயில் அடக்கியவர். புகையிலை போலவே உணர்வு கிடைப்பதாக சொன்னார்.இதுபோல், இரண்டு மாதம் கிராம்பு வைத்திருப்பது தொடர்ந்தது. அப்புறம், சிறிது மிளகை ஒன்றிரண்டாக தட்டி, வாயில் ஒதுக்கி வைக்கச் சொன்னேன். சுறுசுறுவென்று, சற்று கூடுதல் உணர்வை தருவதாக சொன்னவர், மிளகுக்கு அடிமையாகி, புகையிலையை மறந்தார். இப்போது, புகையிலை பற்றிய சிந்தனையே இல்லை. அத்துடன், இந்த விஷயத்தை கூடுமானவரை நண்பர்களுக்கும் சொல்லி வருகிறார்; எனக்கு மிகப் பெரிய நிம்மதி.நண்பர்களே... கெட்ட பழக்கங்களை விடுவது கடினம் என்று நினைக்காதீர். மாற்றி யோசிப்பதுடன், முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் தான்!— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.