இது உங்கள் இடம்!
எல்லாருமே தலைவன் தான்!என் மகன் படிக்கும் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும், 'எல்லாரும் தலைவன்' என்ற பாணியை கடைபிடித்து வருகின்றனர். 'வழக்கமாக படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களையே, வகுப்புத் தலைவனாக நியமிப்பர். உங்கள் பள்ளியில் ஏன் இதுபோன்று செய்கிறீர்கள்?' என, பள்ளித் தாளாளரிடம் கேட்ட போது, அவர் கூறிய பதிலில், நான் அசந்து போனேன்... 'ஒவ்வொரு வகுப்பிலும் வருகைப் பதிவேட்டின்படி, தினமும் ஒருவர் வகுப்புத் தலைவனாக பொறுப்பேற்றுக் கொள்வர். வகுப் பின் தினசரி செயல்பாடுகள், வீட்டுப் பாட ஒப்படைப்பு, வகுப்பில் அமைதி, மகிழ்ச்சி, தோழமை உணர்வு, கீழ்படிதல், சுதந்திரம் போன்ற குணங்களை, எல்லா மாணவர்களுக்கும் இயல்பாக பரவலாக்க, இத்திட்டம் உதவி செய்கிறது. 'ஆளுமைத் திறனும், தலைமை பண்புகளும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் வேறுபடுகிறது. ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க, இதுபோன்ற, சுழற்சி முறை பொறுப்புகள் அவர்களை பக்குவப்படுத்துகிறது...' என்றார். மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் பல்வேறு பள்ளிகளுக்கிடையே, இதுபோன்ற திட்டங்களால், மாணவர்களுக்கு சமத்துவம் அளிப்பது, அரிய விஷயமாகவே எனக்குப் பட்டது. இத்திட்டத்தைப் பற்றி, என் மகள் படிக்கும் பள்ளியில் எடுத்துக் கூறினேன். அவர்களும், விரைவில் இதையே கடைபிடிக்கப் போவதாக உறுதி கூறினர். கல்வியையும் தாண்டி, மாணவர் களிடம் வளர்க்க வேண்டிய விஷயம் நிறையவே உள்ளது என்பதை இது, எனக்கு உணர்த்தியது.— எம்.கதிரவன், விளாங்குடி.காந்தி டைரியா... வேண்டவே வேண்டாம்!காந்திய கருத்துப் பிரசார வழிகளில் ஒன்றாக, காந்தி டைரிகளை விற்பனை செய்யும் முயற்சியில், சில கடைக்காரர்களை, நான் அணுகுவது வழக்கம். ஒரு மருந்துக் கடை உரிமையாளர் மற்றும் ஒரு தொழிலதிபர், சென்ற ஆண்டு காந்தி டைரிகளை வாங்கிய நினைவில், இந்த ஆண்டும் அவர்களை அணுகினேன். இருவருமே, 'ஐயா... உங்கள் காந்தி டைரி வேண்டாமய்யா. சென்ற ஆண்டு வாங்கியதில் சில, இன்னும் அப்படியே உள்ளன. அரசாங்க அதிகாரிகளுக்கு, புத்தாண்டு வாழ்த்துக் கூறி, காந்தி டைரியைக் கொடுத்தால், காந்தி படத்தைப் பார்த்ததுமே, 'ஐயா... இது என் மேஜையில் இருந்தாலே, எங்கள் மனதை உறுத்துகிறது. ஆகையால், பொருளாகவோ அல்லது வேறு டைரியோ இருந்தால் கொடுங்கள்...' என்கின்றனர். எனினும், நேரில் வந்து கேட்பதால், எனக்காக ஒன்று போதும்!' என்று கூறினர். ஊழல் புரியும், லஞ்சம் வாங்கும் அலுவலர்களுக்கு, காந்தி என்றதுமே, மனதை உறுத்துகிறது. அந்த அளவில், காந்திய தாக்கம் மக்களிடையே இருக்கிறதே என்று, என்னை நானே ஆறுதல்படுத்திக் கொண்டு திரும்பினேன்.— ம.மு.விசுவநாதன், மதுரை.தொல்லை தரும் நட்பு!சொந்தக் காலில் நின்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடனும், ஒரு முதலாளியாக இருந்து, சிலருக்காவது வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமுடைய நான், பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறேன். நடுத்தர வர்க்கத்தின் பெண்களையே முழுக்க, முழுக்க நம்பி இருப்பதால், கட்டணங் களை அளவாகக் கொண்டு, நல்ல நிலையில் நடந்தி வரும் எனக்கு, பிரச்னையே என் தோழிகளும், உறவினர்களும் தான்.சிநேகிதி என்ற முறையில், கடையில் வந்து அமர்ந்து பல மணி நேரம், 'டேரா' போடுவதும், வரும் வாடிக்கையாளர்களிடம் ஊர் வம்பு அடிப்பதும், பேஷியல் மற்றும் மேக்-அப் செய்து கொண்டு, 'வரேன்டி...' என்று பணத்தைப் பற்றிய நினைப்பே இல்லாமல், ஜாலியாகக் கிளம்பி விடுவதுமாக ஏகப்பட்ட தொல்லைகள். என்ன தான் நான் முதலாளியாக இருந்தாலும், கடையின் வாடகை, ஊழியர்களின் சம்பளம், இதர செலவுகள் என்று எனக்கும் தேவைகள் இருப்பதை மறக்கின்றனரா அல்லது மறப்பது போல் நடிக்கின்றனரா என்று தெரியவில்லை. சமீபத்தில், என் தோழியின் தம்பிக்கு திருமணம் நடந்தது. செழிப்பான குடும்பமாக இருந்தும், என்னிடம் மிக உரிமையாக பேசி, குறைந்த விலையில் மேக்-அப்பை முடித்துக் கொண்டாள். பழகிய பாவத்திற்கு நானும் செய்ய வேண்டியதாயிற்று.இவர்களைப் போன்ற சிலரால், நட்பே வேண்டாம் என்று தோன்றுகிறது. மொபைல் போனில் சில எண்களிடமிருந்து அழைப்பு வந்தால், அப்படியே துண்டித்து விடும் நிலைக்கு, நம்மை பயமுறுத்துகின்றனர். நீங்கள் இதுபோன்ற பெண் என்றால், தயவு செய்து இப்போதே திருத்திக் கொள்ளுங்கள்.— தமயந்தி ராகவன், வில்லிவாக்கம்.